நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க.

மனிதராகப் பிறந்த நம் எல்லோருக்கும் மனதில் எண்ண ஓட்டங்கள் இருந்து கொண்டே தான் இருக்கும். நமது எண்ணங்கள் தான் நமது செயல்களாக மாறுகின்றன. நமது செயல்களின் விளைவுகளைத் தான் நாம் கர்மாவாக அனுபவிக்கிறோம். எனவே தான் மனதை அலைபாய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனதை நாம் அடக்காவிட்டால் அதற்கு நாம் அடிமை ஆக வேண்டியிருக்கும். மனது நமது கட்டுப்பாட்டிற்குள் இருந்தால் அதற்கு நாம் தான் எஜமானர். மனதை கட்டுப்படுத்த தியானம் மேற்கொள்வது சிறப்பு. ஆனால் நம்மால் ஓரு சில அளவிற்கு மேல் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும்.
மேலும் நாம் தனி மனிதரல்ல. நம்மைச் சுற்றி உறவுகள், சொந்த பந்தங்கள், அக்கம்பக்கத்தினர், மற்றும் நண்பர்கள் என அனைவரையும் அனுசரித்து வாழ வேண்டியது அவசியம். அப்படி இருக்கையில் நாம் எவ்வாறு மனதை கட்டுபடுத்த இயலும். நம்மால் மனதை கட்டுப்படுத்த இயலாவிட்டாலும் நேர்மறை எண்ணங்களையாவது வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றி இருக்கும் ஆற்றல்கள் நம் மீது ஆதிக்கம் செலுத்தும் என்பதால் நம்மைச் சுற்றி நேர்மறை ஆற்றல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.அதற்குரிய எளிய பரிகாரம் ஒன்றைத் தான் நாம் இந்தப் பதிவில் காணப் போகிறோம்.
முதலில் நேர்மறை எண்ணம் என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக தேர்வில் நாம் நல்ல மதிப்பெண் பெற்று பாஸ் ஆக வேண்டும் என்ற எண்ணம் மனதில் இருக்கும். அதே சமயத்தில் ஃ பெயில் ஆகி விடக் கூடாது என்ற பயமும் இருக்கும். மனித இயல்பு எப்பொழுதும் பயத்தை வெளிப்படுத்துவதுதான். எனவே நாம் இறைவனிடம் வேண்டும் பொழுது கடவுளே நான் ஃ பெயில் ஆகி விடக் கூடாது என்று தான் வேண்டுவோம். இது தவறு. அதாவது இது எதிர்மறை எண்ணம் ஆகும். கடவுளே நான் பாஸ் ஆக வேண்டும் என்று தான் வேண்ட வேண்டும். இந்த பிரபஞ்சத்திற்கு நம் வார்த்தைகளை கிரகித்து அளிக்கும் ஆற்றல் உண்டு. நான் ஃ பெயில் ஆகி விடக் கூடாது என்று வேண்டும் போது இந்த பிரபஞ்சம் ஃ பெயில் என்ற வார்த்தையை கிரகித்து நமக்கு அளிக்க வாய்ப்புள்ளது. இது எதிர்மறை எண்ணம் ஆகும். நான் பாஸ் ஆக வேண்டும் என்பது நேர்மறை எண்ணம் ஆகும். முதலில் இந்த வித்தியாசத்தை உணர்ந்து நாம் நம் மனதில் நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு உதவியாக இருக்கும் பரிகாரத்தைப் பற்றிக் காணலாம் வாருங்கள.
இது எளிய பரிகாரம் தான். முதலில் எட்டு சிறிய கிண்ணம் எடுத்துக் கொள்ளுங்கள். அவை ஒவ்வொன்றிலும் கல் உப்பை போட்டுக் கொள்ளுங்கள். அவற்றை வீட்டின் எட்டு திக்குகளிலும் வைத்து விடுங்கள். இது உங்கள் மனதில் நேர்மறை எண்ணத்தை, சிந்தனையைத் தூண்டும். பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த உப்பை மாற்றுங்கள். உபயோகப்படுத்திய உப்பை கால் படாமல் நீரில் கரைத்து விடுங்கள்.
அடுத்ததாக ஒரு அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது வேப்ப எண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றுங்கள். இதனை அமாவாசை அன்று மேற்கொள்ளுங்கள். பிறகு மறுநாள் கிண்ணத்தில் இருக்கும் கல் உப்பை நெருப்பில் போட்டு விடுங்கள். இதன் மூலம் உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகும். பிறகு வீட்டை சுத்தமான தண்ணீரில் கல் உப்பு சேர்த்து துடைத்து விடுங்கள். பிறகு வழக்கம் போல பூஜைகளை மேற்கொள்ளலாம்.
இதனை தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்து வர உங்கள் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் விலகும். உங்கள் மனதில் நேர்மறை எண்ணங்கள் தோன்றும்.
