சித்திரை மாத தேய்பிறை ஏகாதசி விரத பலன்

நாளைய தினம் (24/04/2025) சித்திரை மாத ஏகாதசி நாள் ஆகும்.
ஏகாதசி என்பது, அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு அடுத்து வரும் பதினோராவது திதி அல்லது நாளாகும். இது ஒரு மாதத்தில் இரண்டு முறை ஏகாதசி வரும். அமாவாசையை அடுத்து வருவது வளர்பிறை ஏகாதசி. பௌர்ணமியை அடுத்து வருவது தேய்பிறை ஏகாதசி ஆகும். ஏகாதசி அன்று விரதம் இருப்பது, பல நன்மைகளைத் தரும் என நம்பப்படுகிறது
ஏகாதசி இறை வழிபாட்டிற்கு உரிய நாள் ஆகும். குறிப்பாக ஏகாதசி விரதம் பெருமாள் குறித்து இருக்கும் விரதம் ஆகும். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசி விரதம் வரும். இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் மூலம் நமது பாவங்கள் யாவும் அகலும் என்பது ஐதீகம்.
ஆன்மீக அன்பர்கள் பல விரதங்களை கடைப்பிடித்து இறைவனை வணங்குகிறார்கள். அந்த வகையில் நாம் மேற்கொள்ளும் விரதத்திலேயே மிகச் சிறந்த விரதம் ஏகாதசி விரதமாகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் அனுஷ்டிக்கும் விரதம் ஏகாதசி விரதம்.
பாப விமோசனி ஏகாதசி
பொதுவாக ஏகாதசி விரதம் நாம் இந்தப் பிறவியில் அறிந்தும் அறியாமலும் செய்யும் பாவத்தை நீக்குவது மட்டுமன்றி நமது முற்பிறவியில் செய்த பாவத்தையும் போக்கும் சக்தி கொண்டது என்பதாக ஐதீகம். இந்த விரத மகிமையை சிவபெருமானே அன்னை பார்வதி தேவிக்கு எடுத்துக் ஓவ்வொரு மாதம் வரும் ஏகாதசிக்கும் ஓவ்வொரு பெயர் உண்டு. ஓவ்வொரு புராண வரலாறு உண்டு. அந்த வகையில் சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி பாபவிமோசினி ஏகாதசி விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. விமோசனி என்றால் விடுபடுவது. அதாவது நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவத்தில் இருந்து விடுபட நமக்கு இந்த விரதம் உதவுகிறது. மனிதர்கள் செய்த சர்வ பாவங்களும் அழிவதால் மனித உயிர்களுக்கு மோட்சம் என்னும் நற்கதி கிடைக்கப் பெறுகிறது. வாழ்வில் துன்பங்கள் அதிகம் ஏற்படாமல் இருக்கவும், குல சாபங்கள், தெய்வ சாபங்கள் போன்றவை நீங்கி வாழ்க்கையில் சுபிட்சங்கள் பெருகவும் செய்கிறது இந்த பாபவிமோசனி ஏகாதசி விரதம்.
ஏகாதசி விரத புராண கதை
புராணங்களின்படி மஞ்சுகோஷா எனப்படும் தேவலோக பெண் மேதாவி என்ற முனிவரை காம வயப்படுத்தி, அவரின் தவம் வெற்றி பெறுவதை தடுத்தாள். இந்தப் பாவச் செயல் காரணமாக மஞ்சுகோஷா பல துன்பங்களை அனுபவிக்க நேர்ந்தது. அப்போது அவள் சித்திரை மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி தினத்தில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டு, தனது பாவங்கள் நீங்கப் பெற்று நற்பலன்களை அடைந்தாள். எனவே தான் இந்த சித்திரை தேய்பிறை ஏகாதசி தினம் பாப விமோசினி ஏகாதசி விரதம் என அழைக்கப்படுகிறது.
இளமை மற்றும் அழகு நீர்க்குமிழி போன்றது. சற்று நேர காலத்திற்குள் மறையக் கூடியது. அதன் மீது இருக்கும் ஆசையால் தான் தவறுகளை செய்ய நேருகிறது. அதனை உணர்ந்து இறைவனை நாடினால் இறைவன் நம்மை கொடிய பாவத்திலிருந்தும் விடுதலை அளித்து துன்பங்களில் இருந்து காத்தருளுவார் என்பதை இந்த புராண கதை மூலம் நாம் அறியலாம். அதே சமயத்தில் பாவத்தை செய்து விட்டு ஏகாதசி விரதம் இருந்து விடலாம் என நினைப்பது தவறானது ஆகும். .
ஏகாதசி விரதம்
பொதுவாக எந்த ஒரு ஏகாதசி விரத தினத்தன்றும் காலை முதல் இரவு வரை உணவு ஏதும் சாப்பிடாமல் இருப்பது மிகுந்த பலன்களை தரும். இந்த தினத்தில் அதிகாலையில் எழுந்து, குளித்து முடித்துவிட்டு வீட்டின் பூஜை அறையில் இருக்கும் பெருமாள் மற்றும் லட்சுமி படத்திற்கு வாசமிக்க மலர்களை சமர்ப்பித்து, தீபமேற்றி கற்கண்டுகள் அல்லது ஏதேனும் இனிப்புகளை நைவேத்தியம் செய்து, பெருமாள் லட்சுமி மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும். இந்த விரதத்தின் போது தானிய உணவுகளைத் தவிர்த்து, இறை சிந்தனையுடன் இருந்து, திருமாலை வழிபடுவது வழக்கம்.
ஏகாதசி விரதத்தின் முக்கிய அம்சங்கள்
ஏகாதசி விரதத்தின் முக்கிய நோக்கம், அன்றைய தினம் அரிசி மற்றும் தானிய உணவுகளைத் தவிர்த்து விரதம் இருப்பதாகும். பொதுவாக பகலில் தூங்குவது கூடாது. அதிலும் குறிப்பாக ஏகாதசி தினம் பகலில் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். முடிந்தால் அன்றைய தினம் இரவில் கண் விழித்து, இறை சிந்தனையுடன் இருக்க வேண்டும். அரிசி, இட்லி, தோசை, சப்பாத்தி, உப்புமா போன்ற தானிய உணவுகள், பருப்பு, பயறு வகைகளும் ஏகாதசி விரதத்தின் போது தவிர்க்கப்பட வேண்டும். பழங்கள், பால், தயிர் போன்ற உணவுகள் ஏகாதசி விரதத்தின் போது சாப்பிடலாம். அறிவியல் ரீதியாக அன்றைய தினம் விரதம் இருப்பதன் மூலம் நமது உடலின் ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கிடைக்கிறது. இறை பக்தி மூலம் மனதில் அமைதியும் தெளிவும் கிடைக்கிறது.
