குரு பகவான் மந்திரம் | Guru Bhagavan Mantra in Tamil

நாம் பிறந்தது முதல் வாழும் நாள் வரை நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் ஏராளம். குழந்தைப் பருவத்தில் பள்ளி சென்று கல்வி பயில ஆரம்பிக்கிறோம். பிறகு உயர் கல்வி, கல்லூரி கல்வி என்று நமது படிப்பை தொடர்கிறோம். பிறகு வாழ்வாதாரம் வேண்டி பணிக்கு செல்கிறோம் அல்லது தொழில் செய்கிறோம். நாம் கல்வி கற்க குருவின் துணை தேவைப்படுகிறது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். நமது தாய் தந்தைக்குப் பிறகு நமக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் முக்கிய ஸ்தானம் வகிக்கிறார்கள். நமக்கு வழிகாட்ட, நமக்கு ஆலோசனை சொல்ல சிறந்த நபர் வேண்டும் எனில் குருவின் அருள் இருந்தால் தான் கிடைக்கும் எனலாம். எந்த ஒரு விஷயத்தையும் நாம் கற்றுக்கொள்வதற்கு நமக்கு குரு அவசியம். இம்மந்திரத்தை கூறி வழிபடுவதன் மூலம் நாம் கற்றுக்கொள்ளும் எந்த ஒன்றிலும் சிறக்க முடியும்.
குரு பகவான் மந்திரம் :
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
குரு பகவான் மந்திரம் நவகிரகங்களில் உள்ள பிருகஸ்பதி அல்லது வியாழன் கிரகத்தையும், சிவபெருமானின் அம்சமான “தட்சிணாமூர்த்தியையும்” மற்றும் நமக்கு கல்வி மற்றும் வேறு கலைகள் ஏதாவது கற்று தரும் ஆசிரியர்களையும் குருவாக போற்றுகிறது.
ஆய கலைகள் 64 ஆகும். பொழுது போக்கிற்காகவோ, நமது திறனை வளர்த்துக் கொள்ளவோ பாட்டு, நடனம், இசைக்கருவிகள், பாதுகாப்புக் கலைகள் என வித்தைகளை நாம் கற்க குருவின் அருள் அவசியம். நமது அன்றாட வாழ்வில் நாம் பிறரிடம் இருந்து பல பாடங்களை கற்றுக் கொண்டு தான் இருக்கிறோம். அவை நல்ல வகையில் பலன் அளிக்க இந்த மந்திர ஜெபம் உதவும். இதனை தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் ஜெபிக்கலாம். குறிப்பாக வியாழன் அன்று ஜெபிப்பதன் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். புதியதாக ஏதாவது கற்க ஆரம்பிக்கும் முன்பு இந்த மந்திரத்தை அவசியம் சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் மும்மூர்த்திகளின் ஆசியும் கிட்டும்.
