வீட்டில் இருக்கும் சுவாமி சிலைகளுக்கு உயிரோட்டம் வர வைப்பது எப்படி ?

நாம் வாழும் இல்லம் ஆலயம் போன்று இருக்க வேண்டும். தெய்வீக மணம் கமழ வேண்டும் என்று எல்லாரும் விரும்புவோம். எனவே தான் வீட்டில் பூஜை அறை அல்லது பூஜைக்கென்று தனி அலமாரி வைத்து இறைவழிபாடுகளை மேற்கொள்கிறோம். ஒரு சிலர் தங்கள் வீட்டு பூஜை அறையில் சுவாமி படங்களை மட்டும் மாட்டி வைத்திருப்பர்கள். ஒரு சிலர் விக்கிரகம் வைத்தும் வழிபடுவார்கள். அவ்வாறு வீட்டில் வைக்கும் விக்கிரகங்கள் நமது ஆள்காட்டி விரலின் அளவிற்கு மேல் இருக்கக் கூடாது என்பது ஐதீகம்.
தெய்வீக ஆற்றல்:
நாம் தொடர்ந்து வீட்டில் பூஜைகளை மேற்கொள்ளும் போது இந்த விக்கிரகங்களுக்கு தெய்வீக ஆற்றல் வருகிறது. இதனை சக்தியேற்றம் அல்லது உருவேற்றம் என்று கூறுகிறோம். நாம் மந்திரங்கள் கூறி பூஜை செய்வதன் மூலம் தெய்வங்களின் உயிரோட்டத்தை உணர முடியும். நாம் எந்த அளவுக்கு பூஜையும் மந்திரங்களும் ஜெபித்து ஆற்றலை பெருக்குகின்றோமோ அந்த அளவிற்கு தெய்வங்களின் ஆற்றலும் நமது இல்லத்தில் நிறைந்து இருக்கும்.
விக்கிரகங்களை சுத்தம் செய்தல்:
நாம் தினசரி பூஜைகளை செய்தாலும் இந்த விக்கிரகங்களை மாதம் ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டியிருக்கும். பொதுவாக இந்த விக்கிரகங்களை ஏகாதசி திதி வரும் நாளில் சுத்தம் செய்வது நல்லது. அவ்வாறு நாம் சுத்தம் செய்யும் பொழுது பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் தண்ணீர் காரணமாக அதன் சக்தி குறைய வாய்ப்புள்ளது. எனவே தான் விக்கிரகங்களை சுத்தம் செய்யும் பொழுது தூய தண்ணீரை பயன்படுத்த வேண்டும். பழைய தண்ணீர் அல்லது நாம் பாத்திரத்தில் பிடித்து வைத்த தண்ணீர் என்று பயன்படுத்தாமல் அந்த நேரத்தில் பிடித்த தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.
விக்கிரகங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் பொருட்கள்:
மேலும் சுத்தம் செய்வதற்கு நாம் பயன்படுத்தபடும் பொருள் எலுமிச்சை, புளி, தூய மணல், சாம்பல் என இவற்றைக் கொண்டு சுத்தம் செய்வதன் மூலம் அதிக ஆற்றல் விரயம் ஆகாமல் இருக்கும். மேலும் சுத்தம் செய்தவுடன் தூய வஸ்திரம் கொண்டு நன்றாக ஈரத்தை துடைக்க வேண்டும். பிறகு அரைத்து எடுத்த சந்தனம் பூசி அதன் மேல் குங்குமம் வைக்க வேண்டும்.. பிறகு வழக்கம் போல தினசரி பூஜைகளை மேற்கொள்ள வேண்டும்.
விக்கிரகங்களின் உயிரோட்டம்:
இவ்வாறு செய்வதன் மூலம் தெய்வீக ஆற்றல் குறையாமல் காத்துக் கொள்ள இயலும். வழக்கம் போல நமது பூஜைகள் மற்றும் மந்திரங்களின் மூலம் விக்கிரகங்களின் உயிரோட்டத்தை உருவாக்கி தாம் தக்க வைத்துக் கொள்ள இயலும். முடித்த வரை சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலமும் வீட்டில் இறை ஆற்றல் அல்லது தெய்வீக ஆற்றலை நாம் தக்க வைத்துக் கொள்ள இயலும்.
