சனி தோஷம் விலக என்ன செய்ய வேண்டும் ?

நவகிரகங்களில் சனி பகவான் நீதி தேவதை போல செயல்படுபவர். நல்ல பலன் என்றாலும் சரி, தீய கெடு பலன் என்றாலும் சரி பாரபட்சம் பார்க்காமல் சரியான நேரத்தில் கர்ம வினைகளுக்கு உரிய பலன்களை அளிப்பவர்.
எனவே தான் மக்களாகிய நாம் ஏழரை சனி, அர்தாஷ்டம சனி, கண்ட சனி போன்ற சமயங்களில் சனியின் தாக்கத்தை எண்ணி அஞ்சுகிறோம். மேலும் சனி தசை புத்தி காலங்களில் சனியின் பிடியில் சிக்கி அவதியுறுகிறோம்.
ஒருவரின் ஜாதகத்தில் சனி தோஷம் இருந்தால் அது விலக சில எளிய பரிகாரங்களை செய்து கொள்ளலாம்.
∙ காக்கைக்கு தினமும் சாதம் வைக்க வேண்டும்
∙ முதியவர்களுக்கு உதவ வேண்டும்
∙ உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவ வேண்டும்
∙ கருப்பு உளுந்து, எள் முதலியவற்றை சனிக்கிழமை தானம் செய்ய வேண்டும்.
∙ சனிக்கிழமை சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணையில் தீபம் ஏற்ற வேண்டும்
∙ சனிக்கிழமை அன்னதானம் செய்வது சிறப்பு
∙ மேலும் ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆஞ்சநேயரை வணங்க வேண்டும்
∙ தினமும் விநாயகரை வணங்க வேண்டும்.
∙ தசரதன் இயற்றிய சனி ஸ்லோகத்தைப் பாராயணம் செய்ய வேண்டும்.
சனி தோஷம் நீக்கும் ஸ்லோகம் பிறந்த புராண கதை:
தசரத மகாராஜா ஆட்சி செய்த காலம். அப்பொழுது ரோகிணி நட்சத்திரத்தில் சனி சஞ்சரிக்கும் காலத்தில் மிகக் கடுமையான பஞ்சம் ஏற்பட்டு பூமியில் கொடிய நோய்கள் பரவி, அதிக துன்பம் ஏற்படும் என்பதாக ஒரு ஐதீகம் இருந்தது. மக்களை இந்த துன்பத்தில் இருந்து காப்பாற்ற என்ன வழி என குல குரு வசிஷ்டர் உள்ளிட்ட ரிஷிகள் மற்றும் அமைச்சர்களை அழைத்துக் கேட்டார் தசரதன். ஆனால் வசிஷ்டர், இது உலக மக்கள் துன்பப்பட வேண்டிய காலம். இதை தடுப்பது யாராலும் முடியாத காரியம் என்றார்.
எனவே தசரத மகாராஜா தனது வில் அம்புடன் சனி பகவானை எதிர்க்கப் புறப்பட்டார். சனி பகவானை யாராலும் எதிர்க்க முடியாது. அவரது பார்வை பட்டாலே பொசுங்கி விடுவார்கள். ஆனால் புண்ணியம் செய்த தசரத மகா ராஜா அவரை எதிர்த்து நின்றார். அவரது வலிமை கண்டு சனி பகவான் மனம் மகிழ்ந்து அவருக்கு வேண்டிய வரத்தை அருள்வதாகக் கூறினார்.
அதைக் கேட்ட தசரதன், ரிஷப ராசியில் ரோகிணி நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் போது உலக மக்களுக்கு எந்த துன்பத்தையும் நீங்கள் தரக் கூடாது. சூரியன், சந்திரன் உள்ளவரை அனைத்து காலங்களிலும் நீங்கள் மக்களை துன்பப்படுத்தக் கூடாது என்று வரம் கேட்டார். அப்படியே ஆகுக என வரம் கொடுத்தார் சனி பகவான்.
சனியின் கருணையைக் கண்டு தசரசத மகாராஜா அவரைப் போற்றிப் பாடல் ஒன்றைப் பாடி சனி பகவானை மகிழ்வித்தார். உடனே சனி பகவான் இந்த ஸ்தோத்திரத்தை படிப்பவர் யாராக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு முறையோ அல்லது பல முறையோ சொல்பவர் யாராக இருந்தாலும் அந்த நிமிடம் முதல் அவர்களுக்கு என்னால் ஏற்பட்ட அத்தனை துன்பங்களும் விலகி விடும். என்னுடைய தோஷம் அவர்களை தாக்காது என்று வரமளித்தார்.
தசரதன் இயற்றி அருளிய சனி ஸ்தோத்திரம் :
" நம கிருஷ்ணாய நீலாய சதகண்ட நிபாய ச
நமகாலாக்னிரூனாய க்ருதாந்தாய ச வை நம
நமோ நிமலாம்ஸ தேஹாய தீர்கச்மரு ஜடாய ச
நமோ விசால நேத்ராய சுக்ஷ்கோதர பயாக்ருதே
நம புஷ்கல காத்ராய ஸ்தூல ரோம்ணேத வை நம
நமோ தீர்க யசுஷ்காய காலதம்ஷ்ட்ர நமோஸ்துதே
நமேஸ்த கோடாக்ஷாய துர்நிரீச்ரயாய வை நம
நமோ கோராய ரெளத்ராய பீஷ்ணாய கபாலிநே
நமஸ்தே ஸர்வ பக்ஷாயபலீமுக நமோஸதுதே
சூர்ய புத்ர நமஸ்தேஸ்து பாஸ்கர பயதாய ச
அதோத்ருஷ்டே, நமஸ்தேஸ்து ஸம்வர்த்தக நமோஸ்துதே
நமோ மந்த கதே, துப்யம் நிஸிம்த்ரஷாய நமோஸ்துதே
தபஸா தகத் தேஹாய நித்யப் யோக ரதாய
நமோ நித்யம் க்ஷதார்த்தாய அத்ருப்தாய ச வை நம
ஞான சக்ஷூர் நமஸ்தேஸ்து கச்யபாத்தேஜ ஸூநவே
துஷ்டோ தகாசி வை ராஜ்யம் ருஷ்டோ ஹரஸூதத்க்ஷணாத்"
இந்த ஸ்லோகத்தை கேட்பவர்கள் மற்றும் படிப்பவர்கள் சனி பகவானின் தோஷத்தில் இருந்து விடுபடலாம்.
