வேத மந்திரங்களின் சாரமாக விளங்குவது காயத்ரி மந்திரம். மந்திரங்களிலெல்லாம் ஒப்புயர்வற்றது காயத்ரியே. மந்திரங்களின் தாயாக இருப்பதும் காயத்ரி மந்திரமே. இந்த மந்திரம் விசுவாமித்திரரால் அருளப்பட்டது. மந்திரங்களில் நான் காயத்ரியாக இருக்கிறேன்” என்று பகவத்கீதையில் கிருஷ்ணபகவான் கூறுகிறார்.
ஸ்ரீ காயத்ரி மந்திரம்
ஓம்
பூர்: புவ: ஸுவ:
தத் ஸவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ: யோந: ப்ரசோதயாத்
காயத்திரி மந்திரத்தின் விளக்கம்: பூர்லோகம், புவர்லோகம், ஸ்வர லோகம் ஆகிய மூன்று உலகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரியவரை நாங்கள் தியானிக்கிறோம். நாங்கள் மேலான உண்மையை உணர அந்தப் பரம்பொருள் எங்களது அறிவை ஊக்குவிக்கட்டும். காயத்ரி மந்திரம் என்பது சூரிய வழிபாட்டைத்தான் குறிக்கும். “யார் (சூரிய பகவான்) நம் அறிவைத் தூண்டுகிறாரோ, அந்தக் கடவுளின் மேலான ஒளியை தியானிப்போமாக” என்பது இதன் பொருள்.
மூன்று வேளையும் ஜெபிக்க வேண்டிய மந்திரம்:
காயத்ரி மந்திரத்திரத்திற்கு மேலான மந்திரம் உலகில் கிடையாது. காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும், சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலையில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது. காயத்ரி மந்திரத்தை ‘சர்வ ரோக நிவாரணி’, ‘சர்வ துக்க பரிவாரணி’ என்றும் கூறப்படுகிறது. நோய்களையும், துக்கங்களையும் போக்க மூன்று வேளை காயத்ரி மந்திரத்தை உச்சரித்தால் போதும்.
மந்திரத்தை ஜெபிக்கும் முறை
பூஜை அறை இருந்தால் பூஜை அறையில் அமர்ந்து உச்சரிக்கலாம். அல்லது தூய்மையான இடத்தில் அமர்ந்து உச்சரிக்கலாம். தரையில் அமராமல் தூய விரிப்பின் மேல் அமர்ந்து உச்சரிக்க வேண்டும். நிமிர்ந்து உட்கார்ந்து, காலையில் கிழக்கு முகமாகவும், நண்பகலில் வடக்கு அல்லது கிழக்கு முகமாகவும், மாலையில் மேற்கு முகமாகவும் நோக்கி இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும். உடலையும் மனதையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். காயத்ரி மந்திரத்தை உச்சரிப்பவர்கள் ஐம்புலன்களையும் அடக்கி பார்வையை இரு புருவ மத்தியில் நிறுத்தி உச்சரிக்க வேண்டும்.
காயத்ரி மந்திரம் உச்சரிக்கும் முறை
காயத்திரி மந்திரம் பதினொரு சொற்களைக் கொண்டது :இந்த மந்திரத்தில் ஓம் என்ற பிரணவமும், பிறகு மூன்று வியாஹ்ருதிகளும் பிறகு மூன்று பாதங்களும் உள்ளது. இதை ஒரே மூச்சில் சொல்லாமல் ஓம் என்ற பிரணவத்திலும், இரண்டாவது வியாஹ்ருதிகளிலும், மூன்றாவது தத்ஸவிதுர்வரேண்யம் என்ற முதல் பாதத்திலும், நான்காவது பர்கோ தேவஸ்ய தீமஹி என்ற இரண்டாவது பாதத்திலும், ஐந்தாவது தியோ யோ ந; ப்ரசோதயாத் என்ற மூன்றாம் பாதத்திலும் நிறுத்தி சொல்ல வேண்டும்.இது சம்ஸ்கிருத சொல் என்பதால் உச்சரிப்பிலும் கவனம் வேண்டும். உதாரணமாக “ந; ப்ரசோதயாத்” என்ற வார்த்தையில் “நஹ” என்பது நேர்மறையைக் குறிக்கும். இதனை “ந” என்று உச்சரித்தால் அது எதிர்மறையைக் குறிக்கும். எனவே இதன் உச்சரிப்பு முறையை நன்கு கற்றுக் கொண்டு பிறகு அதனை தினமும் உச்சரிக்க வேண்டும்.
காயத்ரி மந்திரம் உச்சரிப்பதால் ஏற்படும் நன்மை
இதனை உச்சரிப்பதன் மூலம் ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்கிற நான்கு வேதங்களும் படித்த பலன்கள் கிடைக்கும். தினமும் உச்சரிப்பவர்களுக்கு வாழ்வில் அற்புதங்கள் பல நிகழும். நன்மை செய்யும் அனைத்து தேவதைகளும் காயத்ரி மந்திரத்தில் இருப்பதாக ஐதீகம் உள்ளது. இதனை சரியாக முறையாக உச்சரிப்பதன் மூலம் அந்த தேவதைகளின் ஆசிகளை நாம் பெற இயலும். இந்த மந்திரம் தினமும் உச்சரிப்பதன் மூலம் உங்களிடத்திலும் உங்களைச் சுற்றியும் நேர்மறை ஆற்றல் செயல்படும். இது உங்கள் வாழ்வை வளமாக்கும். நீங்கள் விரும்பும் வண்ணம் உங்களால் வாழ இயலும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.

Leave a Reply