நான்கு தெய்வங்களை ஒன்றாக வணங்கக் கூடிய அற்புதமான நாள். வாழ்வில் வளமும் நலமும் அளிக்கும் இன்றைய தினத்தின் சிறப்பு என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இன்று புரட்டாசி மாதம், செவ்வாய்க்கிழமை, சதுர்த்தி திதி, சுவாதி நட்சத்திரம், பஞ்சமி திதி என அனைத்தும் சேர்ந்து ஒன்றாக வந்திருப்பது மிகவும் விசேஷமான ஒன்றாகும். இது போல அற்புதமான நாள் கிடைப்பது மிகவும் அரிதான ஒன்றாகும். இது வழிபாட்டிற்கு உரிய நாளாக அமைந்துள்ளது. மாதம் கிழமை, திதி, நட்சத்திர கடவுளை வணங்குவதன் மூலம் வாழ்வில் வளமும் நலமும் பெருகும்.
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உரிய மாதம் ஆகும். இந்த மாதம் முழுவதும் பெருமாளின் அருள் எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கும். இன்றைய தினம் பெருமாளை வணங்குவதன் மூலம் நீங்கள் நினத்தது யாவும் நடக்கும். பெருமாள் கோவிலுக்கு சென்று இரண்டு தீபங்கள் ஏற்றி துளசி மாலை சார்த்தி வணங்கி வழிபடுவதன் மூலம் பெருமாளின் பரிபூரண அனுக்கிரகம் கிட்டும். ஆலயம் செல்ல இயலாவிட்டால் இல்லத்திலேயே பெருமாளை எண்ணி இரண்டு தீபம் ஏற்றி பெருமாள் படத்திற்கு துளசி மாலை சாற்றி வழிபடலாம்.
இன்று அங்காரக சதுர்த்தி. பொதுவாக சதுர்த்தி திதி விநாயகருக்கு உரிய திதி ஆகும். அதிலும் அங்காரக விநாயக சதுர்த்தி சிறப்பு மிக்க நாளாகும். இன்று விநாயகரை வணங்குவதன் மூலம் ஒருவருடம் வணங்கிய பலன் கிட்டும். எனவே இன்றைய தினம் முழுமுதற் கடவுளாம் விநாயகரை வணங்குவது சாலச் சிறந்தது. விநாயகர் திருவுருவப் படம் அல்லது விக்கிரகத்திற்கு முன்பாக இரண்டு தீபங்களை ஏற்றி பூஜை செய்து வழிபடுவதன் மூலம் அவரின் பரிபூரண அருளுக்கு நாம் பாத்திரமாகலாம். விநாயகர் வணங்குவதற்கு எளிவயர். இன்றைய தினம் மஞ்சள் குங்குமம், அட்சதை சார்த்தி, விநாயகருக்கு அர்ச்சனை செய்வது சாலச் சிறந்தது. விநாயகர் அகவல் படிப்பதும் சாலச் சிறந்தது. அருகம்புல் மாலை கண்டிப்பாக சார்த்த வேண்டும். வெற்றிலை பாக்கு பழம் தேங்காய் முதலியவற்றை வைத்து வணங்க வேண்டும். மேலும் விநாயகருக்கு பிடித்த மோதகம், கொழுக்கட்டை, சுண்டல் என செய்து நைவேத்தியம் செய்வது சிறப்பு. இவ்வாறு விநாயகரை வழிபடுவதன் மூலம் காரியத்தடைகள் நீங்கும். நினைத்த காரியங்கள் யாவும் நடக்கும்.
சுவாதி நட்சத்திரம் லட்சுமி நரசிம்மரின் நட்சத்திரம் ஆகும். எனவே இன்றைய தினம் லட்சுமி நரசிம்மர் வழிபாட்டிற்கும் உரிய நாளாகும். பக்தனின் துயர் நீக்க தூணில் இருந்து தோன்றிய நரசிம்மரை விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் அவர் நமது துன்பங்களை தீர்க்க ஓடி வருவார் என்பது ஐதீகம். நரசிம்மருக்கு பூஜை, அர்ச்சனை செய்து மஞ்சள், குங்குமம் , அட்சதை மற்றும் மலர்கள் சாற்றி வழிபட வேண்டும். பானகம் செய்து நைவேத்தியம் செய்வது இன்றைய தினத்தின் சிறப்பு ஆகும். இன்று லட்சுமி நரசிம்மரை மாலை வேளை வணங்குவது சிறப்பு.
இன்றைய தினம் மாலை பஞ்சமி திதி உள்ளதால் வாராகி அன்னையை வணங்குவதும் மிகவும் விசேஷம். அழைத்த உடன் அருள் தந்து காப்பதில் வல்லவள் வாராஹி அன்னை. வல்லமை மிக்க வாராஹி அன்னையை இன்றைய தினம் பஞ்சமி வழிபாடு செய்வதன் மூலம் அவளது பரிபூரண அருளைப் பெற முடியும். வாராகி அன்னை ஆலயம் அருகில் இருந்தால் அங்கு சென்று வழிபடுங்கள். அது இல்லாத பட்சத்தில் வீட்டிலே ஒரு அகல் விளக்கில் எண்ணெய் ஊற்றி இந்த விளக்கிற்கு நான்கு திரி கொண்ட தீபம் ஏற்றி வழிபடுங்கள். வாராகி அன்னைக்கு நைவேத்தியம் படைத்து வணங்க வேண்டும். பானகமே நைவேத்தியமாக வைக்கலாம். வாராகி அன்னையின் போற்றிகளை சொல்லி வணங்கி வழிபடுங்கள். இதன் மூலம் கடன் அடைவதுடன் வாழ்க்கையில் உள்ள தீராத பிரச்சனைகள் கூட தீர்ந்து விடும்.
Leave a Reply