நமது அன்றாட வாழ்வில் நமது மனதிற்குள் பல உணர்வுகள் வந்து வந்து செல்கின்றன. அவற்றுள் ஒன்று தான் பய உணர்வு. பய உணர்வு வரும் பொழுது நாம் நமது நம்பிக்கையை இழக்கிறோம். தைரியத்தை இழக்கிறோம். அந்த சமயத்தில் நமது செயல்பாடுகள் அனைத்தும் ஸ்தம்பித்து விடுகிறது என்று கூடக் கூறலாம். அந்த சமயத்தில் நாம் எந்தவித யோசனையும் இன்றி முடிவெடுக்கும் திறனும் அற்றவர்களாக ஆகிறோம்.ஒரு சிலர் எதற்கெடுத்தாலும் பயம் கொள்வார்கள். அவர்களைக் கோழை என்று கூறலாம். அவர்கள் எந்தவொரு முயற்சியை மேற்கொள்வதற்கும் அஞ்சுவார்கள். வீர லட்சுமி அவர்களை விட்டு விலகியே இருப்பாள்.
வாழ்க்கை எப்பொழுதும் ஒரே விதமாகச் செல்வதில்லை. எனவே நமக்கு சில சமயங்களில் தைரியம் மிகவும் தேவைப்படுகிறது. தைரியம் இருந்தால் தான் முயற்சிகளை மேற்கொள்ள முடியும். நமக்கு தேவைபபடும் சரியான முடிவுகளை எடுக்க இயலும். நம்முள் கோழைத்தனம் வந்து விட்டால் நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. அப்படி இக்கட்டான சூழ்நிலையில் எவ்வாறு தைரியத்தை வரவழைத்துக் கொள்வது. அதற்கு சரியான தீர்வு துர்க்கை வழிபாடு. துர்கை அம்மனை எப்படி வழிபட்டால் பயம் நீங்கி தடைகள் அனைத்தும் விலகும் என்று இந்தப் பதிவில் பார்க்கலாம்.
அன்னை பரா சக்தியின் பல வடிவங்களுள் துர்கை ஒரு வடிவம் ஆகும். இது அன்னையின் உக்கிர வடிவம் என்று கூடக் கூறலாம். இந்த துர்கை நம்முள் இருக்கும் பயத்தைப் போக்குபவள். நமது முன்னேற்றத்தை தடுக்கும் பயம், கோழைத்தனம் போன்றவற்றையும் நீக்குவதற்கு துர்க்கை அம்மன் நமக்கு அருள் புரிவார். இது மட்டும் அல்லாமல் நாம் வேண்டும் வேண்டுதலை நிறைவேற்றித் தரும் தாயாக துர்க்கை அம்மன் விளங்குகிறார்.
நம்முள் இனம் புரியாத பயம் ஏற்படும் நேரத்தில் நாம் துர்கை அன்னையின் திருவடியை நாடிச் செல்லலாம். எந்த நேரத்தில் நமக்கு பயம் என்ற ஒன்று ஏற்படுகிறதோ, எந்த நேரத்தில் நாம் செய்யும் முயற்சிகளில் தடங்கல்களும், தடைகளும் ஏற்படுகிறதோ அந்த நேரத்தில் அருகில் இருக்கும் ஏதாவது ஒரு சிவாலயத்திற்கு செல்ல வேண்டும். அந்த சிவாலயத்தில் வீற்றிருக்கக் கூடிய துர்க்கை அம்மனை வணங்க வேண்டும். அம்மனுக்கு இரண்டு தீபங்களை ஏற்ற வேண்டும். செவ்வரளி பூக்கள் கொண்டு அர்ச்சனை செய்தோ அல்லது செவ்வரளி பூக்களை சார்ததியோ வணங்கி வழிபட வேண்டும். இரண்டு கைகளையும் கூப்பி மனதார அந்த அம்மனின் திருவடிகளில் சரணாகதி அடைந்து வேண்டுதலை வைக்க வேண்டும். இவ்வாறு வழிபடுவதன் மூலம் துர்க்கை அம்மன் நமது மனதில் இருக்கக்கூடிய பயங்களை நீக்கி காரியத்தில் இருக்கக்கூடிய தடைகளையும், தடங்கல்களையும் தூள் தூளாக ஆக்கிவிடுவாள் என்பது நிதர்சனமான உண்மை.
இவ்வாறு அன்னையை சரணாகதி அடைவதன் மூலம் நமது பயம் அகலும். நமது முன்னேற்றத்திற்கு எதிராக செயல்படும் தடைகள் யாவும் நீங்கும். அன்னையின் பரிபூரண அருளால் நம்மால் சீரான முயற்சிகளை மேற்கொள்ள இயலும்.
Leave a Reply