நமது வாழ்க்கையில் நாம் இரண்டு வகையான இன்பங்களை தேடிச் செல்கிறோம். ஒன்று லௌகீக இன்பம் மற்றொன்று ஆன்மீக இன்பம்.
லௌகீக இன்பம் புறம் சார்ந்த விஷயம். புலன் உணர்வுகளால் நாம் அடையும் இன்ப துன்பங்களைக் குறிக்கிறது. நல்ல உணவு, உடை, இருக்க வீடு, சொந்த பந்தங்கள், திருமணம், வேலை, பதவி, என இவற்றின் மீதான மோகம் பற்று. அதனை நோக்கிய பயணம். மனம் இருந்தால் இன்பம், துன்பம் இருக்கும் இவை இரண்டும் இருந்தால் ஆசை இருக்கும் இவை மூன்றும் இருந்தால் கர்மம் இருக்கும் கர்மம் இருந்தால் சுழற்சி இருக்கும் இப்படி முடிவில்லாமல் சுழண்டு கொண்டே இருக்கும்.
ஆன்மீக இன்பம் அகம் சார்ந்த விஷயம். அக நோக்கம் மூலம் நமது ஆத்ம உணர்வை அறிவது. அங்கிருந்து கடவுளை உணர்வது. தியானம், தவம், ஆலயம் சென்று இறைவனை வழிபடுவது என அமைதியை தேடி நம்முள் நம்மை தேடி நாடும் வழிகள். ஆன்மிகம் என்பது ஆத்ம உணர்வை உணர்வது. அதற்கு புலனடக்கம் தேவை அதன் முதல் படியாகத் தான் நாம் நம்மை சீர் படுத்திக் கொள்ள ஆன்மீகச் சின்னங்களான திலகம், குங்குமம் போன்றவற்றை அணிகிறோம். பக்தியோடு ஆலயத்திற்கு செல்கிறோம். இறைவனை வழிபடுகிறோம் இவை எல்லாம் நம்மை நல் வழியில் இட்டுச் செல்பவை.
மனதோடு கூட புலன்களை வசப்படுத்தாமல், பகவானை லட்சியமாக நினைக்காமல் இருந்தால் நாம் ஆன்மீகப் பாதையில் இருந்து தவறிவிடுவோம். இதனையே பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் அர்ஜுனருக்கு போதிக்கிறார்.
த்யாயதோ விஷயாந் பும்ஸ: ஸங்கஸ்தேஷுபஜாயதே
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமாத் க் ரோதோபி ஜாயதே || அத்தியாயம் 2 சுலோகம் 62
பொருள் – புலன் நுகர் பொருட்களை சிந்தித்துக் கொண்டிருக்கின்ற மனிதனுக்கு அந்த விஷயங்களில் பற்று ஏற்படுகிறது. பற்றில் இருந்து ஆசை உண்டாகிறது. ஆசையில் இருந்து கோபம் உண்டாகிறது.
க்ரோதாத்பவதி ஸம்மோஹ: ஸம்மோஹாத்ஸ்ம்ருதி விப்ரம:|
ஸ்ம்ருதிப்ரம்ஸாத் புத்திநாஸோ புத்தி நாஸாத்ப்ரணஸ்யதி||- அத்தியாயம் 2 சுலோகம் – 63
பொருள்: கோபத்தில் இருந்து அறிவின்மை, அறிவின்மையால் தடுமாற்றம், தடுமாற்றத்தினால் விவேகம் அழிகிறது விவேகம் அழிவதால் வீழ்ச்சிஏற்படுகிறது
நம்மை ஆன்மீகப் பாதையிலிருந்து விலக்கும் எட்டு காரணிகளாக பகவத் கீதை கூறுவன:
புலன் நுகர் பொருட்கள் மீதான சிந்தனை காரணமாக
∙ உலகப் பொருட்கள் மீதான பற்று
∙ பற்றிலிருந்து ஆசை
∙ ஆசையில் இருந்து கோபம்
∙ கோபத்தில் இருந்து அறிவின்மை
∙ அறிவின்மையில் இருந்து நினைவு தடுமாற்றம்
∙ மழுங்கிய புத்தி
∙ விவேகத்தின் அழிவு
நாம் நமது ஐம்புலன்கள் விரும்பும் பொருட்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருக்கிறோம். போக விஷயங்கள் நமக்கு சுகம் தருகின்றன. அனுபவிக்க அனுபவிக்க இன்னும் ஆசை அதிகரிக்கிறது. மன உறுதி குறைகிறது. இப்படி போகப் பொருட்களை நினைத்துக் கொண்டே இருப்பதால் அவற்றின் மேல் நமக்கு துறக்க முடியாத பற்று ஏற்பட்டு விடுகிறது. அதனை அனுபவிக்க வேண்டும் என்ற அவா எழுகிறது.
பற்றின் காரணமாக தீவிர ஆசை எழுகிறது. ஆசைப்படுவதை அடைந்துவிட வேண்டும் என்ற உத்வேகம் எழுகிறது. அதற்கான செயல்களில் அதன் நன்மை தீமை உணராமல் ஈடுபட மனம் விழைகிறது. ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
ஆசையை அடைய நாம் எடுக்கும் முயற்சிகளில் தடைகள் தடங்கல்கள் சந்திக்க நேருகிறது. அதற்கான காரணம் பிறர் தான் என்னும் எண்ணம். அதன் காரணமாக அவர்கள் மீது துவேசம். கோபம். ஆசையின் தோல்வி கோபமாக உருமாறுகிறது.
கோபம் வரும் பொழுது யோசிக்கும் தன்மை இழந்துவிடுகிறோம். கோபம் வரும் பொழுது நாம் என்ன செய்கிறோம்? அதன் விளைவு என்ன என்றெல்லாம் யோசிப்பதில்லை. அந்த இடத்தில் அறிவு மங்கி விடுகிறது.
அறிவு மங்கும் பொழுது நினைவில் தடுமாற்றம் ஏற்படுகிறது. நினைவில் ஏற்படும் தடுமாற்றம் காரணமாக எதனை செய்ய வேண்டும் எதனை செய்யக் கூடாது எனஅறியாமல் புத்தி தடுமாறுகிறது.
புத்தி தடுமாறும் போது விவேகம் அழிகிறது. அதனால் இயலாமை, மூடத்தனம், கோழைத்தனம், இம்சை, பழிவாங்குதல் போன்ற குறைபாடுகள் வருகின்றன. இதனால் மனிதன் வீழ்ச்சி அடைகிறான்.
மறுபடியும் தன்னை சீர் படுத்திக் கொள்ள ஆன்மீக வழியை நாடுகிறான். ஜனன மரண சுழற்சி போல இந்த சுழற்சியிலும் மனிதன் சிக்கி அவதியுறுகிறான்.
இதற்கு வழி தான் என்ன? மேலே சொன்ன எட்டு காரணிகளில் இருந்து நாம் விடுபட வேண்டும். அதன் முதல் படியாக நாம் உலகப் பற்று நிலையற்றது என்பதை உணர வேண்டும். அநித்தியமான இந்த உலகில் நிலையானது என்று எதுவமே இல்லை. அடுத்த கட்டமாக நமது ஆசைகளை நாம் சீர்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் ஆசைப்படும் பொருளோ, நபரோ நமக்கு அவசியம் தேவையா என சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். நாம் ஆசைப்படுவது கிட்டாவிடில் அந்த தோல்வியை ஏமாற்றத்தை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நமக்கு பிறர் மீது கோபமோ துவேஷமோ ஏற்படாது. பொறாமை வஞ்சம், இயலாமை போன்ற நமது சுபாவ குணங்கள் மறைந்து விடும். இந்தப் பக்குவம் வந்து விட்டால் மனதில் தெளிவான சிந்தனை இருக்கும். தெளிவான சிந்தனை நம்மை சீரான பாதையில் இட்டுச் செல்லும். நமது பிறப்பின் பயனை நம்மால் அறிந்து கொள்ள இயலும்.
விவேகத்துடன் செயல்பட்டு நமது கர்ம வினைகளை கழிக்க இயலும். மேலும் பிறவிச் சூழலில் சிக்காத வண்ணம் இறைவனிடம் சரணாகதி அடைய இயலும்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் காட்டிய வழியில் நடந்து மாயப் பிறப்பறுப்போம்.
Leave a Reply