2025 சித்திரை மாதத்தின் விசேஷ நாட்களும், அவற்றின் சிறப்புகளும்

தமிழ் மாதங்கள் மொத்தம் பன்னிரண்டு. இந்த மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்புத் தன்மை வாய்ந்ததாக உள்ளது. அந்த வகையில் சித்திரை மாதமும் மிகச் சிறப்பு வாய்ந்த மாதம் ஆகும். இது தமிழ் மாதங்களின் முதல் மாதம் ஆகும். முத்திரை பதிக்க வரும் சித்திரைத் திருநாளின் சிறப்புகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
சித்திரை மாதத்தின் முக்கிய நாட்களும், அவற்றின் சிறப்புகளும்
தமிழ் வருடப்பிறப்பு :
சித்திரை மாதப் பிறப்பு நாளே, தமிழ் வருடப் பிறப்பு நாளாக கொண்டாடப்படுகிறது. வானில் இருக்கும் ராசி மண்டலத்தில் மொத்தம் பன்னிரண்டு ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசியிலும் சூரியன் ஒரு மாதம் சஞ்சரிக்கும். பின் ராசி மாறும். மேஷ ராசியில் சூரியன் சஞ்சரிக்க ஆரம்பிக்கும் நாளே சித்தரை முதல் நாளாக, அதாவது தமிழ் வருடப் பிறப்பு நாளாக கொண்டாடப்படுகிறது. அவ்வாறு பிறக்கும் ஒவ்வொரு வருடத்திற்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. இந்த தமிழ் வருடத்திற்கான பெயர் விசுவாவசு ஆகும். இந்த நாளை தமிழர்கள் புத்தாண்டு நாளாக கொண்டாடுகிறார்கள். கர்நாடகாவின் துளுப் பகுதியிலும் இது வருடப் பிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கேரளாவில் இந்த நாள் விஷு என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதக் கடைசி நாள் இரவில் தங்க, வெள்ளி, பழ வகைகள், காய்கனிகள், புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் ஆகியவற்றை பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர். மறுநாள் அதிகாலையில் எழுந்ததும் அந்த மங்கலப் பொருட்களைத் தான் முதலில் பார்ப்பார்கள். இதனால் அந்த ஆண்டு முழுவதும் செழிப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.
சித்ரா பௌர்ணமி :
சித்ரா பௌர்ணமி சித்திர குப்தன் பிறந்த நாள் என்பதால் அன்றைய நாள் நமது வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஆகும். சித்திர குப்தன் நமது பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவர் என்பதால் நாம் அன்றைய நாளுக்கு முக்கியத்துவம் அளித்து விரதம் இருப்பது சிறந்தது. இந்த பூ உலகில் நமது வாழ்க்கை பாவ புண்ணிய கணக்குகளின் அடிப்படையில் தான் அமைகிறது. அதற்கேற்ப தான் நாம் செயல்களை செய்க்கிறோம். நாம் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் அதன் அடிப்படையில் தான். எனவே தான் தமிழ் புத்தாண்டு தொடங்கும் மாதமான சித்திரையில் வரும் பௌர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் சித்ரா பௌர்ணமி அன்று இந்த உலகத்தை காத்து ரட்சிக்கும் அம்பிகைக்கு பூஜை செய்து விரதம் இருப்பதன் மூலம் சகல நலன்களையும் பெறலாம்.
மதுரை சித்திரை திருவிழா :
மதுரையில் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாதமும் திருவிழாக்கள் நடைபெறும். இதன் உச்சமாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவும் அதன் தொடர்ச்சியாக அழகர் ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் விமரிசையாக நடைபெறும். இது திருவிழாக்களின் பெருவிழா என அனைவராலும் கொண்டாடப்படும். மீனாட்சி திருகல்யாணத்தைக் காண, அண்ணன் அழகர் சகலவிதமான ஏற்பாடுகளுடன் புறப்படுவார். தான் செல்வதற்கு முன்பே மீனாட்சி- சொக்கநாதர் திருமணம் நடந்துவிட்டது என்னும் தகவல் வைகைக் கரையை அடையும் போது, அவருக்கு வந்து சேரும். கோபத்துடன் ஆற்றில் இறங்கிய அவர், அப்படியே வண்டியூர் போய்விடுவார். அழகர் ஆற்றில் இறங்குவதைக் காண வெளியூரில் இருந்து மக்கள் அலை அலையாக வருவார்கள்.
அட்சய திருதியை :
அட்சய திருதியை என்பது சித்திரை மாதத்தின் வளர்பிறையின் மூன்றாவது நாளான திருதியையில் கடைப்பிடிக்கப்படுகிறது. அட்சய என்ற வமொழி சொல்லுக்கு அள்ள அள்ளக் குறையாத எனப் பொருள்படும். அதாவது இந்நாளில் செய்யப்படும் எந்தவொரு மங்ககரமான காரியங்களும் பல மடங்கு நற்பலன்களை அளிக்கும் என்பது ஐதீகம். எனவே தான் இந்த நாளில் தான தருமங்களை அதிகம் செய்ய வேண்டும். குறிப்பாக அன்ன தானம் செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். கோடைக் காலம் என்பதால் பானகம், நீர் மோர், செருப்பு, குடை, வஸ்திரம் போன்றவற்றை தானமாக அளிக்கலாம். அட்சய திருதியை அன்று தயிர்சாதம் தானம் செய்தால் ஆயுள் பெருகும். இனிப்புப் பொருட்கள் தானம் செய்தால் திருமணத்தடை அகலும். உணவு தானியங்கள் தானம் செய்தால் விபத்துக்கள், அகால மரணம் போன்றவை ஏற்படாது. கால்நடைகளுக்கு தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும். அன்றைய தினம் தங்கம் வாங்குவது சிறப்பு. தங்கம் வாங்க முடியாதவர்கள் உப்பு, மஞ்சள் போன்ற பொருட்களை வாங்கலாம்.
