Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Search

சந்திராஷ்டமம் | Chandrashtama in Tamil

July 7, 2020 | Total Views : 1,817
Zoom In Zoom Out Print

சந்திராஷ்டமம் என்றால் என்ன, அதற்குரிய பரிகாரங்கள் எவை? 

நமது ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அதற்குக் காரணம் சந்திரன் ஒருவருடைய மனதிற்கும் அதன் எண்ணங்களுக்கும் அதிபதியாக விளங்குகிறார். சூரியனும் சந்திரனும் ஒரே பாகையில் இருக்கும் அமாவாசை நாளிலும் சூரியனுக்கு சந்திரன் 18௦ பாகையில் இருக்கும் பௌர்ணமி நாளிலும் கடலின் அலைகளில் ஏற்படும் மாற்றம் போலவே நம் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை சந்திரனுக்கு உண்டு என்றால் மிகை ஆகாது. நமது ராசிச் சக்கரத்தில்  பன்னிரண்டு கட்டங்கள் உள்ளன. நாம் பிறக்கும் நேரத்தில்  சந்திரன் இருக்கும் ராசியை வைத்துத் தான் நமது ஜென்ம ராசி கணக்கிடப்படுகின்றது. சந்திரன் தினமும்  இந்த ராசிக்கட்டங்களின் வழியாகத் தான் தனது பயணத்தை மேற்கொள்கின்றது. ஒவ்வொரு ராசியிலும் அந்ததந்த ராசிக்குரிய நட்சத்திரங்களின்  ஒன்பது பாதங்கள் இருக்கும். ஒருவரின் ஜென்ம ராசிக்கு எட்டாவது வீட்டில் சந்திரன் இருக்கும் நாட்களே அந்த சாதகரின் சந்திராஷ்டம நாட்கள்  என்று அழைக்கப்படுகின்றன. ஒரு ராசியில் சந்திரன் 2¼   நாட்கள் சஞ்சரிக்கும்.  ஒருவரின் ஜென்ம ராசிக்கு எட்டாவது ராசியில் இருக்கும் மூன்று  நட்சத்திரங்களின் 9 பாதங்களில் சஞ்சரிக்கும் நாட்களே அந்த ஜாதகருக்கு சந்திராஷ்டம நாட்கள் ஆகும். இதை மிகச் சரியாகக் குறிப்பிட்டுச் சொல்வதென்றால் ஒரு நட்சத்திரத்துக்குப் பதினேழாவது நட்சத்திரத்தின் பாதத்தில் சந்திரன் சஞ்சரிக்கும்போது அந்த நட்சத்திரத்துக்கு சந்திராஷ்டமம். வேறு விதமாக கூறுவது என்றால் சந்திரன் சஞ்சாரம்  செய்யும் போது அந்த ராசியில் இருந்து ஆறாவது ராசிக்கு சந்திராஷ்டம தினமாக கருதப்படுகிறது. சந்திராஷ்டமம் குறித்து மேலும் அறிய எங்களது ஜோதிடம் வல்லுனர்களை தொடர்பு கொள்ளுங்கள்.

உங்கள் குறைகளை போர்க்க  எங்களது  நேரடி ஜோதிட ஆலோசனை பெற்று மகிழுங்கள் 

எட்டாம் வீடு:

ஜோதிட சாஸ்திரத்தில் எட்டாம் வீடு என்பது மறைவு வீடு ஆகும். எட்டு என்பதற்கான சமஸ்கிருத சொல் அஷ்டம் ஆகும். எனவே இந்த அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் இருக்கும் நாட்களை சந்திராஷ்டம நாட்கள் என்று கூறுகிறோம். பொதுவாக ஒருவர் மறைவிடத்தில் இருக்கிறார் என்றால் நாம் அவரைக் காண முடியாது. அவருடன் தொடர்பு கொள்ள முடியாது. அவர் இயக்கங்களைப் பற்றி அறிய முடியாது அல்லவா? அது போல மறைவிடத்தில் சந்திரன் இருக்கும் போது அந்த சந்திரனின் காரகமாக விளங்கும் நமது மனதின் சிந்தனைகள் சரி வர இயங்காது. மனதில் குழப்பங்கள் இருக்கும். தேவையற்ற சஞ்சலங்கள் இருக்கும். மனதில் அமைதி இருக்காது. நம்மால் எந்த வொரு முடிவையும் சரிவர எடுக்க இயலாது. 

உதாரணமாக விருச்சிகராசியில் சந்திரன் சஞ்சரிக்கும்போது, அந்த ராசி மேஷ ராசிக்கு எட்டாவது ராசியாக அமைகிறது. எனவே விருச்சிக ராசியில் சந்திரன் இருக்கக்கூடிய இரண்டே கால் நாள்கள் மேஷ ராசிக்கு சந்திராஷ்டம நாள்களாகும். ஆனால், மேஷராசியில் பிறந்தவர்கள் அனைவருக்கும் இரண்டே கால் நாள்கள் சந்திராஷ்டமம் என்று சொல்லிவிட முடியாது. 

துல்லியமாகச் சொல்வதென்றால், மேஷராசியில் அசுவினி, பரணி, கிருத்திகை  முதல் பாதம் என்று மூன்று நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதேபோல் விருச்சிக ராசியில் விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன.  அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் விருச்சிக ராசியில் அனுஷ நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது சந்திராஷ்டம நாளாகும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் அதே விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நாள் சந்திராஷ்டம நாளாகும்.  கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்களுக்கு சந்திரன் விருச்சிக ராசியில் கேட்டை நட்சத்திரம் 4-ம் பாதத்தில் சஞ்சரிக்கும் வேளை சந்திராஷ்டம காலமாகும். கிருத்திகை 2, 3, 4 ஆகிய பாதங்களில் பிறந்தவர்களுக்கு சந்திரன் மூலம் நட்சத்திரம் தனுசு ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் வேளை சந்திராஷ்டம நாளாகும்.

சந்திராஷ்டமம் அன்று எப்படி செயல்பட வேண்டும்?

சந்திராஷ்டமம் என்றால், அன்றைக்கு எதிலும் எச்சரிக்கையாக  இருக்கவேண்டும். புதிய முயற்சிகளிலும் ஈடுபடக்கூடாது என்று கூறுவார்கள். அதற்குக் காரணம், முன்பே கூறியது போல ஒருவருடைய மனதுக்கு அதிபதி சந்திரன். அவர் ஒரு ராசிக்கு  எட்டாவது வீட்டில் மறைவு பெற்றிருக்கும்போது, மனதில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்படக்கூடும். இந்த நாட்களில் நமது மனம் ஒரு நிலைப்படுவது சிறிது சிரமமாக இருக்கும்.மனம் அமைதியின்றி தவிக்கவும் நேரிடும். தெளிவான முடிவுகளை எடுக்க முடியாமல் போகும். எடுக்கும் முடிவுகள் தவறாக ஆகும் போது நாம் வாழ்விலும் பல சங்கடங்களை எதிர் கொள்ள நேரும்.  எனவேதான் சந்திராஷ்டம தினங்களில் எந்த ஒரு புது முயற்சியிலும் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவேண்டும் என்று ஜோதிட ரீதியாகக்  கூறுவார்கள். அது மட்டுமன்றி சந்திரன் மாத்ருகாரகன் என்று கூறப்படுபவர். அதாவது தாய்க்கு காரகம் வகிப்பவர் சந்திரன். எனவே ஒருவருக்கு சந்திராஷ்டம நாளில் தாயுடன் கருத்துவேறுபாடு, தாய்வழி  உறவினர்களுடன் வீண் மனஸ்தாபம் போன்ற பலன்களும் ஏற்படும். 

சந்திராஷ்டமம் என்பது எல்லோருக்கும் கெடுதல் செய்யுமா?

இன்றைய நவீன காலக் கட்டத்தில் தினமும் தொலைக்காட்சியில் ராசிபலன் பகுதியில் இன்று உங்களுக்கு சந்திராஷ்டம நாள் என்று ஜோதிடர்கள் கூறுவார்கள். மேலும் சந்திராஷ்டமம் என்பதால் நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துவார்கள். அப்படியானால் சந்திராஷ்டமம் என்றால் பயத்தை தரக் கூடியதா என்று கேட்டால் அவ்வாறு கிடையாது. மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதே அதன் கருத்து  ஆகும். என்றாலும் இந்த சந்திராஷ்டமம்மூலம் நன்மை பெரும் நட்சத்திரக் காரர்களும் உண்டு.

சந்திரன் வளர்ந்து தேயும் தன்மை கொண்டது என்பதை நாம் அனைவரும் அறிவோம். அமாவாசை முதல் பௌர்ணமி வரையிலான காலத்தை வளர்பிறை என்றும், பௌர்ணமி முதல் அமாவாசை வரையிலான காலத்தை தேய்பிறை என்றும் கூறுகிறோம். இதில் வளர்பிறை காலம் உன்னதமானது. வளர்பிறையில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம தினத்தில் நன்மை நடக்கும்.    

பொதுவாக யாராக இருந்தாலும் தமது சொந்த வீட்டிற்கோ, தம்மை உச்சத்தில் கொண்டு செல்பவர் வீட்டிற்கோ அல்லது தம்மை சார்ந்தவருக்கோ கெடுதல் செய்ய மாட்டார்கள் அல்லவா? இதை அப்படியே சந்திரனுக்கு பொருத்திப் பாருங்கள்.

பன்னிரண்டு ராசிகளில் கடகம்  சந்திரனின் ஆட்சி வீடு ஆகும். ரிஷபத்தில் சந்திரன் உச்சம் அடைகிறார். எனவே கடகம் மற்றும் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம நாள் கெடுதல் செய்யாது என்பது ஜோதிட ரீதியன கருத்து ஆகும்.

மேலும், ரோகிணி, அஸ்தம், திருவோணம் சந்திரனுக்குரிய நட்சத்திரங்கள். இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டம நாள் கெடுதல் செய்யாது. மாறாக சந்திராஷ்டம தினத்தில் நல்லது மட்டுமே நடக்கும்.

பரிகாரம்:

சந்திராஷ்டம நாளில் எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் குலதெய்வத்தையும், முன்னோர்களையும்,  இஷ்டதெய்வத்தையும் வணங்கிவிட்டு ஆரம்பிப்பது நன்மை தரும். இப்படிச் செய்தால் காரியத்துக்கு எந்தத் தடையும் வராது.உங்கள் ராசிக்கு எட்டாவது ராசி அறிந்து கொள்ளுங்கள் :
 
மேஷம் ராசிக்கு விருச்சிகம் எட்டாவது ராசி ஆகும்.
ரிஷபம்- தனுசு எட்டாவது ராசி ஆகும்
மிதுனம் – மகரம் எட்டாவது ராசி ஆகும்
கடகம் – கும்பம் எட்டாவது ராசி ஆகும்
சிம்மம் – மீனம் எட்டாவது ராசி ஆகும்
கன்னி – மேஷம் எட்டாவது ராசி ஆகும்
துலாம் – ரிஷபம் எட்டாவது ராசி ஆகும்
விருச்சிகம் – மிதுனம் எட்டாவது ராசி ஆகும்
தனுசு – கடகம்  எட்டாவது ராசி ஆகும்
மகரம் – சிம்மம் எட்டாவது ராசி ஆகும்
கும்பம் – கன்னி எட்டாவது ராசி ஆகும்
மீனம் – துலாம் எட்டாவது ராசி ஆகும்
 
நட்சத்திரங்கள் மொத்தம் 27 ஆகும். ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள். மொத்தம் 1௦8 பாதங்கள். ராசிகள் மொத்தம் பன்னிரண்டு. எனவே இரண்டேகால் நட்சத்திரம் அடங்கியது ஒரு ராசி. நட்சத்திரரீதியாக சந்திராஷ்டமம்  எப்படி அமையும் என்பதை இங்கு கான்போம்.

அசுவினி - விசாகம் 4;அனுஷம் 1, 2, 3
பரணி - அனுஷம் 4;கேட்டை 1, 2, 3
கிருத்திகை - கேட்டை 4;மூலம் 1, 2, 3
ரோஹிணி - மூலம் 4;பூராடம் 1, 2, 3
மிருகசீரிஷம் - பூராடம் 4;உத்தராடம் 1, 2, 3
திருவாதிரை - உத்தராடம் 4;தி்ருஓணம் 1, 2, 3
புனர்பூசம் - தி்ருஓணம் 4;அவிட்டம் 1, 2, 3
பூசம் - அவிட்டம் 4;சதயம் 1, 2, 3
ஆயில்யம் - சதயம் 4;பூரட்டாதி 1, 2, 3
மகம் - பூரட்டாதி 4;உத்திரட்டாதி 1, 2, 3
பூரம் - உத்திரட்டாதி 4;ரேவதி 1, 2, 3
உத்திரம் - ரேவதி 4;அசுபதி 1, 2, 3
ஹஸ்தம் - அசுபதி 4;பரணி 1, 2, 3
சித்திரை - பரணி 4;கிருத்திகை 1, 2, 3
ஸ்வாதி - கிருத்திகை 4;ரோஹிணி 1, 2, 3
விசாகம் - ரோஹிணி 4;மிருகசீரிஷம் 1, 2, 3
அனுஷம் - மிருகசீர்ஷம் 4;திருவாதிரை 1, 2, 3
கேட்டை - திருவாதிரை 4;புனர்பூசம் 1, 2, 3
மூலம் - புனர்பூசம் 4;பூசம் 1, 2, 3
பூராடம் - பூசம் 4;ஆயில்யம் 1, 2, 3
உத்திராடம் - ஆயில்யம் 4;மகம் 1, 2, 3
தி்ருஓணம் - மகம் 4;பூரம் 1, 2, 3
அவிட்டம் - பூரம் 4;உத்தரம் 1, 2, 3
சதயம் - உத்திரம் 4;ஹஸ்தம் 1, 2, 3
பூரட்டாதி - ஹஸ்தம் 4;சித்திரை 1, 2, 3
உத்திரட்டாதி - சித்திரை 4;ஸ்வாதி 1, 2, 3
ரேவதி - ஸ்வாதி 4;விசாகம் 1, 2, 3

சந்திராஷ்டம நாட்களில் எவ்வாறு செயல்பட வேண்டும். சந்திராஷ்டம நாட்களில் கருத்து வேறுபாடு ஏற்படும் விஷயங்களை தவிர்ப்பது நல்லது.முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய விஷயங்களை சந்திராஷ்டமம் வருவதற்கு முன் அல்லது பின் எடுத்தல் நல்லது. இறை வழிபாடு செய்வது, ஆலயம் செல்வது சிறப்பு.

banner

Leave a Reply

Submit Comment