இந்தப் பூவுலகில் பிறந்த ஆண் பெண் என இருவருக்கும் கடவுள் பொது என்றாலும் வழிபாட்டு முறைகளில் சில நியமங்கள் கடைபிடிக்கப்படுகின்றன. உதாரணமாக சபரி மலையில் பெண்களுக்கு அனுமதியில்லை. அந்தக் கோவிலுக்கு ஆண்கள் மட்டுமே சென்று வர இயலும். பெண்கள் எனில் சில குறிப்பிட்ட வயதிற்கு முன்னும் பின்னும் தான் செல்ல முடியும். இது நாம் அனைவரும் அறிந்ததே. அதே போல பெண்கள் மட்டுமே சென்று வழிபடக் கூடிய சில கோவில்களும் உள்ளன.அத்தகைய அரிய 6 ஆலயங்களைப் பற்றித் தான் நாம் இந்தப் பதிவில் காணப் போகிறோம்.
காமாக்யா தேவி கோவில் :
இந்தக் கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். அசாம் மாநிலம் மேற்கு கவுகாத்தியில் நிலாச்சல் குன்றில் அமைந்துள்ளது. இது தாட்சாயிணியின் யோனி விழுந்த சக்தி பீடமகாகக் கருதப்படுகிறது. இந்த கோவிலில் அம்மனின் மாதவிடாய் காலம் கொண்டாடப்படுவதால் ஆண்கள் யாரும் இந்த கோவிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது. பெண் புரோகிதர்கள் அல்லது சன்யாசிகள் மட்டுமே அம்மனின் மாதவிடாய் காலத்தில் பூஜைகள் உள்ளிட்டவைகள் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கோவிலில் சென்று வழி பட்டால் பிரிந்த தம்பதிகள் சேர்வார்கள். குழந்தை பாக்கியம் கிடைக்கும், நிண்ட நாள் வயதுக்கு வராதா பிள்ளைகள் பூப்பு அடைவாரகள்.
குமரி அம்மன் கோவில் :
கன்னியாகுமரியில் அமைந்துள்ளது குமரி அம்மன் கோவில். துர்க்கை அம்மன் கோவிலான இக்கோவில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது.அம்மன் தவம் செய்த இடமாகக் கருதப்படுகிறது. கருவறையில் மா பகவதி துர்காவின் சன்னிதி உள்ளது. இக்கோவிலில் சன்னியாசிகள் அல்லது புரோகிதர்கள் யாரும் நுழைவு வாயிலை தாண்டி அனுமதிக்கப்படுவதில்லை. கோவில் சடங்குகளில் கலந்து கொள்ள திருமணமான ஆண்கள் கண்டிப்பாக அனுமதிக்கப்படுவதில்லை.
ஆட்டுக்கால் தேவி கோவில் :
ஆட்டுக்கால் தேவி பகவதி அம்மன் கோவில் கேரளாவில் அமைந்துள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் இக்கோவிலில் 10 நாட்கள் திருவிழா நடத்தப்படுகிறது. இங்கு நடைபெறும் பொங்கல் திருவிழா பிரசித்தி பெற்றது. இப்பொங்கல் விழாவில் சுமார் 10 லட்சம் பெண்கள் கலந்து கொள்வர். ஆண்கள் யாரும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. இக்கோயில் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.
சந்தோஷி மாதா கோவில் :
சந்தோஷி மாதா கோவில் ஜோத்பூரில் அமைந்துள்ளது. இந்த அம்மனை பெண்கள் மட்டுமே வழிபட வேண்டும். வெள்ளிக்கிழமையில் ஆண்கள் இந்த கோவிலுக்குள் வருவதற்கு அனுமதி கிடையாது. வெள்ளிக்கிழமை என்பது அம்மனுக்குரிய புனிதமான வழிபாட்டு நாள் என்பதால் இந்த நாளில் ஆண்கள் யாரும் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.
பிரம்மாஜி கோவில் :
ராஜஸ்தானின் ஒரு சிறிய நகரத்தில் உள்ள 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில். இந்தியாவில் உள்ள மூன்று பிரம்மா கோவில்களில் ஒன்றாக இந்த கோவில் அறியப்படுகிறது. கோவில் வளாகத்திற்குள் ஆண்களை அனுமதிப்பதில்லை.காரணம் பிரம்மா இங்கு காயத்ரி தேவியை மணந்ததாக புராணம் கூறுகிறது. இதனால், சரஸ்வதி தேவி, கோவிலுக்கு சாபமிட்டு, 'திருமணமான எந்த ஆணும் இந்த கோவிலின் கருவறைக்குள் நுழையக்கூடாது, இல்லையெனில் அவர் திருமண வாழ்க்கையில் சிக்கல்களை சந்திக்க நேரிடும்' என்று கூறினார். அன்று முதல் ஆண்கள் கோவிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
சக்குளத்துகாவு கோவில்
கேரளாவில் பகவதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட மற்றொரு கோவிலில், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆண்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் முதல் வெள்ளியன்று, 10 நாட்கள் விரதம் இருந்த பெண் பக்தர்களின் கால்களை ஆண் பூசாரிகள் கழுவும் 'நாரி பூஜை' என்ற வருடாந்திர சடங்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த நாள் தனு என்று அழைக்கப்படுகிறது, இந்த நாளில் பெண்கள் மட்டுமே கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த கண்கவர் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவின் போது லட்சக்கணக்கான பெண் பக்தர்கள் கூட்டம் கூடுகிறது.

Leave a Reply