ஆஷாட நவராத்திரி – வாராஹி பஞ்சமி வழிபாடு

வசந்த நவராத்திரி, சியாமளா நவராத்திரி, சாரதா நவராத்திரி, ஆஷாட நவராத்திரி என வருடத்திற்கு நான்கு நவராத்திரிகள் வருகின்றன. இதில் ஆனி மாதத்தில் வருவது ஆஷாட நவராத்திரி ஆகும். இந்த நவராத்திரி காலத்தில் வரும் பஞ்சமி திதி அதி விசேஷமாகும். மாதா மாதம் பஞ்சமி திதி வந்தாலும் ஆஷாட நவராத்திரியில் வரும் பஞ்சமி திதி மிகவும் விசேஷமானது என்று பிரம்மாண்ட புராணம் கூறுகின்றது. அன்று சப்த கன்னிகளில் ஒருவரும் அம்பிகையின் சேனாதிபதியுமான அன்னை வாராஹியை வணங்குவதன் மூலம் நாம் அவளின் அருளாசிகளைப் பெறலாம்.
வாராஹி தேவிக்கு உகந்தது பஞ்சமி திதி. அன்று வாராஹியை வழிபடுவதும், தரிசிப்பதும், பிரார்த்தனை செய்வதும் உன்னத பலன்களைப் பெற்றுத் தரும் என்கிறார்கள் ஆசாரியப் பெருமக்கள்.வீட்டில் விளக்கேற்றி மூல மந்திரத்தைச் சொல்லி ஏதேனும் இனிப்பு நைவேத்தியம் செய்து வேண்டிக் கொண்டால் வேண்டுவனவற்றை தந்தருளுவாள் அன்னை வாராஹி.
வாராஹி அன்னையின் பன்னிரண்டு திருநாமங்கள்:
இந்த தேவிக்கு பஞ்சமீ தண்டநாதா, சங்கேதா, சமயேச்வரி, சமய சங்கீதா, வாராஹி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி என்னும் திருநாமங்கள் உள்ளன. பஞ்சமி அன்று அன்னையின் இந்த பன்னிரண்டு திருநாமங்களைக் கூறி வழிபடுவதன் மூலம் சகல நலன்களும் நம்மை வந்து சேரும். இந்த பஞ்சமி திதியில் அன்னையின் மனம் குளிரும் வண்ணம் பூஜை செய்வதன் மூலம் நாம் கேட்டது கிடைக்கும். நமது வேண்டுதல்கள் பலிக்கும்.
பஞ்சமி வழிபாடு:
பஞ்சமியில் செய்யப்படும் பூஜைகளை பிரியமுடன் ஏற்று, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு வேண்டிய வரங்களை அள்ளி கொடுக்கும் தாயாகத் திகழ்கிறாள் வாராஹி. ஆஷாட நவராத்திரி காலத்தில் ஏதாவது ஒரு நாள் நவதானியங்களை வாராஹிக்கு படைத்து வழிபட்டால் வீட்டில் எப்போதும் அன்னக் குறை ஏற்படாமல் தானியங்கள் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. வாராஹியை வழிபடுபவர்களுக்கு சகல வித்தைகளும் வசப்படும். வெற்றி மேல் வெற்றி குவியும் என்பது ஐதீகம்.
ஆஷாட பஞ்சமி அன்று வாராஹி படம் அல்லது திருவுருவ சிலைக்கு முன் நவதானிய கோலம் இட்டு வழிபட்டு வருவதன் மூலம் வீட்டில் தானியங்கள் நிரம்பி இருக்கும் என்பது ஐதீகம். பஞ்சம் இருக்காது.
பஞ்சமி வழிபாட்டின் பலன் :
சதுரங்க சேனா நாயிகா என்ற திருநாமம் கொண்டவள் ஆதலால் பஞ்சமி திதியில் வாராஹி தேவியை மனதார வழிபட்டால், எதிர்ப்புகளையெல்லாம் துவம்சம் செய்வாள். தீயசக்திகளை அடித்து விரட்டுவாள். காரியம் யாவிலும் துணையிருப்பாள். செயலில் பலமும் பலனும் தந்தருள்வாள் என்பது ஐதீகம்.
மேலும் கடன் பிரச்சனைகள் தீர, எப்படிப்பட்ட கஷ்டங்கள் ஆனாலும் தீருவதற்கு, எதிரிகள் தொல்லை விலகுவதற்கு வாராஹி அம்மனை வழிபட வேண்டும். அதிலும் பஞ்சமி திதியில் வாராஹியை வழிபட உடனடி பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
