AstroVed Menu
AstroVed
search
search

ஆடி அமாவாசை அளவற்ற ஆசிகளை அள்ளித் தரும் முன்னோர் வழிபாடு பற்றி அறிந்து கொள்ளுங்கள்

dateJuly 12, 2023

ஆடி அமாவாசை

மனிதர்களாகப் பிறந்த நமக்கு பல கடமைகள் உண்டு. அவற்றுள் மிகவும் முக்கியமான கடமை நமது  முன்னோர்களுக்கு செய்யும் வழிபாடு. நாம் எந்தக் கடமையை செய்யத் தவறினாலும் முன்னோர்க்கு செய்ய வேண்டிய கடமைகளைத் தவறாமல் செய்ய வேண்டும். முன்னோர்களுக்கு உரிய நாளாக அமாவாசை கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி சூரியனும் சந்திரனும் ஒன்றாக இணைந்து இருக்கும் நாள் தான் அமாவாசை ஆகும். ஒவ்வொரு அமாவாசையிலும் நாம் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க வேண்டும்.

ஆனால் நாம் அவசர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இந்த நவீன காலக் கட்டடத்தில் இதற்கு நேரமே இருப்பதில்லை என்பதே பலரின் கருத்தாக உள்ளது. ஒவ்வொரு அமாவாசை  அன்றும் செய்ய முடியாவிட்டாலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை போன்ற முக்கிய நாட்களிலாவது நாம் கண்டிப்பாக முன்னோர்களுக்கு உரிய வழிபாட்டை மேற்கொண்டே ஆக வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அவர்களின் சாபங்களில் இருந்து விடுபடலாம், அவர்களின் ஆசிகளை நாம் பெறலாம். தட்சிணாயன புண்ணிய காலத்தில், சூரியனும் சந்திரனும் மோட்சத்தைக் குறிக்கும் ராசியான கடகத்தில் சஞ்சரிக்கும் காலமான ஆடி அமாவாசை,முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டிய முக்கிய நாள் ஆகும். புண்ணிய தலம் - தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம் கொடுக்க முடியாத சூழலில் வீட்டிலேயே முன்னோரை ஆராதிக்கலாம். படையல் இட்டு அவர்களை வழிபட்டு முன்னோரின் ஆசியைப் பெறலாம்.

தர்ப்பையின் மகத்துவம்    

ஆடி அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் போது கை விரலில்  தர்ப்பையை மோதிரம் போல அணிந்து செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.இந்து சமய சடங்குகளில், பிறப்பிலிருந்து இறப்பு வரை முக்கிய இடம் தர்ப்பை புல்லுக்கு உண்டு. தர்ப்பை புல் மனிதனுக்கும் இறைவனுக்கும் தொடர்பு தரும் சாதனமாக, வேதங்களின் மூலம் அறியப்படுகிறது. மனிதர்க்கு சுபத்தை, புனிதத்தை தரவல்லது. வலது கை மோதிர விரல் மூளையுடன் தொடர்புடையது. இந்த விரலில் தர்ப்பை புல்லை, பவித்ரம் எனும் மோதிரம் போல அணிந்துகொண்டு ஹோமம் அல்லது சடங்குகளை நடத்த வேண்டும். தர்ப்பையை தேவ காரியங்களுக்கு கிழக்கு நுனியாகவும், பித்ரு காரியங்களுக்கு தெற்கு நுனியாகவும் பயன்படுத்துவார்கள். தர்ப்பை உஷ்ண வீரியமும், அதிவேகமும் கொண்டது. மேலும் பஞ்ச லோகங்களில் தாமிரத்தில் உள்ள மின்சார சக்தி தர்ப்பையிலும் உண்டு. பிரேத காரியங்களில் ஒரு தர்ப்பையாலும், சுப காரியங்களில் இரண்டு தர்ப்பைகளாலும், பித்ரு காரியங்களில் மூன்று தர்ப்பைகளாலும்  தேவகாரியங்களில் ஐந்து தர்ப்பைகளாலும் சாந்தி, கர்மா போன்றவற்றில் ஆறு தர்ப்பைகளாலும் மோதிரம் போல் முடிய வேண்டும். 

எள் தர்ப்பணம்!

எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு மிகவும் விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எனவே, ஆடி அமாவாசை புண்ணிய தினத்தில் பித்ருக்களை - மறைந்துவிட்ட நம் முன்னோர்களை நினைத்து, எள்ளும் தண்ணீரும் கொடுத்து அவர்களை வழிபட்டு, அவர்களின் ஆசிகளைப் பெற வேண்டும்.

முன்னோர் வழிபாட்டால் ஏற்படும் பலன்கள்:

நமது முன்னோர்களை  நினைத்து நாம் செய்யும் தர்ப்பண சடங்குகள் காரணமாக நமது வாழ்வில், நமது முன்னேற்றத்தில் காணப்படும் தடைகள் அகலும். அதே நேரத்தில் நமது தர்ப்பணம் மற்றும் திதி காரணமாக நமது முன்னோர்களும் உயர் நிலையை அடைவார்கள். அவர்கள் நமக்கு ஆசிகளை அருள்வார்கள். எனவே நமது சந்ததி செழித்து வளர்வார்கள். நமது குலம் தழைத்தோங்கும். சுப காரியங்களில் தடைகள் மற்றும் தாமதங்கள் நீங்கும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். இல்லத்தில் மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை இருக்கும்.

அமாவாசைக்கான காய்கறிகள் !

முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கும் நாள் மற்றும் திதி கொடுக்கும் நாட்களில் பூண்டு, வெங்காயம், தக்காளி ஆகியவற்றைச் சேர்க்கக் கூடாது. பாகற்காய், பிரண்டை, பலாக்காய், பூசணிக்காய், வாழைக்காய் போன்ற காய்களையும் அன்றைய சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். வாழைக்காயை சேர்ப்பது அவசியம் ஆகும். .

ஆடி அமாவாசை செய்யக் கூடாதவை

ஆடி அமாவாசை அன்று எண்ணெய் தேய்த்துக் குளித்தல் கூடாது.  சவரம் செய்து கொள்ளுதல் கூடாது. தாய் தந்தை இருப்பவர்கள் அன்று தலைக்கு தண்ணீர் ஊற்றிக் குளிக்கக் கூடாது. நகம் வெட்டுதல் கூடாது. மது அருந்துதல் கூடாது. பசுக்களுக்கு அகத்திக் கீரை உண்ணக் கொடுப்பது மிகவும் சிறப்பு.


banner

Leave a Reply