ஆஷாட நவராத்திரியும் வாரஹி அன்னை வழிபாடும்!
''நமது புராணங்களின்படி, நான்கு நவராத்திரிகள் முக்கியமானவை. அவை: ஆடி மாதத்தில் ஆஷாட நவராத்திரி, புரட்டாசியில் சாரதா நவராத்திரி, மாசி மாதம் சியாமளா நவராத்திரி, பங்குனியில் வசந்த நவராத்திரி.
இவற்றுள் ஆஷாட நவராத்திரியைப் பற்றி இப்பொழுது காண்போம்.
ஆஷாட நவராத்திரி காலம் என்பது ஆனி மாதத்தில், சந்திரமான கால கணிதமுறையில், ஆஷாட மாதம் தொடங்குகின்ற அமாவாசை அடுத்த பிரதமை முதல் நவமி வரையிலான காலம் ஆகும்.
ஆஷாட நவராத்திரி, குப்த நவராத்திரி அல்லது வாராஹி நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது, இது 9 நாள் திருவிழாவாக வராகி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது ஆஷாட மாதத்தின் சுக்ல பக்ஷத்தில் அனுசரிக்கப்படுகிறது.
இந்த நவராத்திரியின் போது அன்னை வாராஹி வடிவில் வழிபடப்படுகிறாள். வாராஹி ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் படைத் தலைவிகளில் ஒருவராக விளங்கக் கூடியவள். அளப்பரிய சக்தி கொண்டவள். பக்தர்களின் வேண்டுகோளைக் கேட்டு உடனடியாக அருளுபவள். வராஹி தேவி, தேவி புராணங்களின் படி ஸப்த மாதர்களில் ஒருவராக விளங்குபவள். வாராஹி பக்தர்கள் விரதம் கடைப்பிடித்து, ஸ்லோகங்கள் மற்றும் மந்திரங்களை உச்சரிப்பதன் மூலம், தேவியின் மீது தங்கள் பக்தி சிரத்தையை வெளிப்படுத்துகிறார்கள். நவராத்திரியின் போது, தேவி உடனடியாக பக்தர்களுக்கு செவிசாய்த்து, விருப்பங்களை நிறைவேற்றுவதாக நம்பப்படுகிறது.
மேலும் ஆனி, ஆடி மாதங்களில் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம். ஆகும்.
இந்த காலத்தில் விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்க மனமுருக அம்பிகையை, பிரார்த்தனை செய்வதாகவே ஆஷாட நவராத்திரி அமைந்திருக்கின்றது.
ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், ஒன்பதாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான வாழ்க்கையை நல்கும்.
Leave a Reply