Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
AstroVed Menu
AstroVed
search
search

ஆறுகால பூஜை

May 22, 2023 | Total Views : 3,747
Zoom In Zoom Out Print

ஆலய பூஜைகளைப் பொறுத்தவரை சில ஆலயங்களில் மூன்று கால பூஜைகள் நடக்கும். சில ஆலயங்களில் ஆறு கால பூஜைகள் நடக்கும். முக்கியமான சைவ சமயக் கோவில்களில் ஆறுகால நித்திய பூஜை அல்லது ஆறு கால பூஜை என்பது ஆகம முறைப்படி தினம் நடைபெறுகின்ற ஆறு பூஜைகளாகும்.

அவை முறையே

  1. உசத்கால பூஜை 

  2. காலசந்தி பூஜை

  3. உச்சிக்கால பூஜை

  4. சாயரட்சை பூஜை

  5. இரண்டாம் கால பூஜை

  6. அர்த்தசாம பூஜை

 

ஆறு கால நித்திய பூஜை

1. உசத்கால பூஜை

இது பிரம்ம முகூர்த்தத்தில் நடை பெறும்.அதாவது இது சூரிய உதயத்திற்கு முன்பு நடத்தப்படும் முதல் பூஜை ஆகும். ஆகமத்தின்படி சூரிய உதயத்திற்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன் நடத்தப்பட வேண்டும்.ஒரு நாழிகை என்பது இருபத்திநான்கு நிமிடங்கள் ஆகும். இந்தப் பூசையின் போது சிவாச்சாரியார், பைரவர் சந்நதியில் வைக்கப்பட்டிருக்கும் சாவியை பூஜை செய்து எடுத்துக் கொள்வார். மங்கள வாத்தியத்துடன் பள்ளியறையில்  திருப்பள்ளி எழுச்சி ஓதப்படுவதுடன் தொடங்கும் இந்தப் பூசை அபிசேக ஆராதனையோடு நிறைவடையும். இதன் தாத்பரியம் யாதெனில் உற்சவர் சிலையில் இருந்த பெருமான், லிங்க வடிவான மூலவர் சிலைக்கு செல்வதாக ஐதீகம்.

இந்த பூஜை விஸ்வ ரூப தரிசனம் எனப்படும். இந்த பூஜை நேரத்தில் இறைவனை தரிசிப்பதன் மூலம் உடல் நோய்கள் குணமாகும். புதிய காரியம் ஆரம்பிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த தரிசனத்தை பார்ப்பது நல்லது

2. காலசந்தி பூஜை

ஆகமத்தின்படி காலசந்தி சூரிய உதயத்திலிருந்து ஏழரை நாழிகைக்குள் நடைபெற வேண்டும். பூசையின் போது சூரியன், விநாயகருக்கு, துவாரத்திற்கு பூசை நடைபெறுகிறது. பின்பு மூலவர், பரிவார தெய்வங்களுக்கு அர்ச்சனை நடைபெற்று பஞ்சக்ருத்யம் கூறி நித்ய பலியுடன் பூசை முடிவடைகிறது.

இந்த பூஜை நேரத்தில் இறைவனை தரிசிப்பதன் மூலம் மன வருததங்கள் அகலும். ஆன்மீக நாட்டம் மேம்படும்.

3. உச்சிக்கால பூஜை

இப்பூசை நண்பகலில் நடத்தப்படுகிறது. விநாயகர் பூசை முடிந்ததும், துவாரபாலகரை வழிபட்டு மூலவரான லிங்கத்திற்கு அலங்காரம், ஆவரணம், தூபம், தீபம், நைவேத்தியம் போன்றவை நடைபெறுகின்றன. அந்தப் பூசைப் பொருட்கள் மூலவரிடமிருந்து அகற்றப்பட்டு சண்டேசரிடம் வைத்து வழிபடப்படுகிறது.

இந்த பூஜை நேரத்தில் இறைவனை தரிசிப்பதன் மூலம் நாம் மேற்கொள்ளும் காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும்.

4. சாயரட்சை பூஜை- சாயங்காலம் பூஜை

இந்தப் பூசையானது சூரியனின் மறைவுக்கு மூன்றே முக்கால் நாழிகைக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும். விநாயகர் பூசை, மூலவரான இலிங்கத்திற்கு அபிசேகம், அலங்காரம் செய்து தீபம், நைவேத்தியம் படைக்கப்படுகிறது.

இந்த பூஜை நேரத்தில் இறைவனை தரிசிப்பதன் மூலம் குழந்தை வரம் கிட்டும்.

5. இரண்டாம் கால பூஜை

விநாயகர் பூசை, மூலவருக்கு அபிசேக, ஆராதனை, தீபம், நைவேத்தியப் படையல் பூசை செய்யப்படுகிறது. பின்பு பரிவார தெய்வங்கள், நித்யாக்னி கார்யம், நித்யோத்சவ பலி ஆகிய பூசை நடைபெற்று சண்டேசுவர பூசையுடன் இரண்டாம் கால பூசை முடிவடைகிறது.

இந்த பூஜை நேரத்தில் இறைவனை தரிசிப்பதன் மூலம் வியாபார அனுகூலம் கிட்டும். செல்வ செழிப்பை கொடுக்கும்.

6. அர்த்தசாம பூஜை-பள்ளியறை பூஜை

மூலவருக்கு அபிசேகம், ஆராதனை முடிந்ததும், உற்சவ மூர்த்திகள் பள்ளியறைக்கு எடுத்துச் சென்று, அங்கு நறுமண மலர்கள், ஏலக்காய், இலவங்கம், வெற்றிலைப் பாக்கு வைத்து திரையிடப்படுகிறது. இதனை பள்ளியறை பூசை என்பர். பள்ளிறைப் பூசை முடிந்ததும் சண்டேசுவரர் பூசை நடைபெறுகிறது. பின்பு பைரவர் சந்நிதியில் சாவியை வைத்து பூசை நடைபெற்று அர்த்தசாம பூசை முடிவடைகிறது.

இந்த பூஜை  நேரத்தில் இறைவனை தரிசிப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமை ஓங்கும். அமோகமான  பலன்கள் கிட்டும்.

ஆறுகால பூஜை நேரத்திலும் இறைவனை தரிசிப்பவர்களுக்கு சர்வ காரிய சித்தி உண்டாகும்.  

ஆறுகால பூஜை நடக்கும் நேரங்கள்

1. உஷத் காலம் – காலை 6:00 மணி

2. கால சந்தி – காலை 8:00 மணி

3. உச்சிக்காலம் – பகல் 12:00 மணி

4. சாய ரட்சை – மாலை 6:00 மணி

5. இராக்காலம் – இரவு 8:00 மணி

6. அர்த்த ஜாமம் – இரவு 10:00 மணி

 

banner

Leave a Reply

Submit Comment