யானைமலை, தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டம் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த ஒத்தக்கடை என்னும் ஊரில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும் இது வடகிழக்கு மதுரைக்கு அருகில் கற்பாறைகள் கொண்ட யானை வடிவிலான கிரானைட் மலை. இது பல வரலாற்று இந்து மற்றும் ஜெயின் கோவில்கள் மற்றும் 6 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான பாறை படிவங்களைக் கொண்டுள்ளது, இந்த நினைவுச்சின்னங்களுக்கு கல்வெட்டுகள் உள்ளன. இது ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம் மற்றும் இந்தியாவின் தமிழ்நாடு சுற்றுலாத்தலமாகும்.
யானை மலையின் அமைப்பு மற்றும் பெயர்க்காரணம் :
யானை மலையின் நீளம் சுமார் 4 கி.மீ, அதாவது 4000 மீட்டர் நீளம்,1200 மீட்டர் அகலம், 400 மீட்டர் உயரம் கொண்டது. இம்மலையை சற்று தூரத்தில் இருந்து பார்த்தால் யானை ஒன்று முன்புறம் துதிக்கையை நீட்டி படுத்து இருப்பது போல காணப்படுவதால், இதற்கு யானை மலை என்ற பெயர் அமைந்துள்ளது. இந்த மலைக்கு நரசிங்கமங்கலம் என்ற வேறு ஒரு பெயரும் உண்டு.
நரசிங்கபெருமாள் குடைவரை கோவில்
யானை மலை அடிவாரத்தில் யோக நரசிங்கர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 179 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. கருவறையிலுள்ள நரசிங்கப் பெருமாளின் பெரிய திருவுருவம் ஆனைமலையின் பாறையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் மூலவராக யோக நரசிம்மர் மார்பில் மகாலட்சுமியுடன் மேற்கு பார்த்தும், நரசிங்கவல்லிதாயார் தெற்கு பார்த்தும் காட்சி அளிக்கின்றனர். கோயிலில் ஸ்ரீநரசிங்கவல்லித் தாயாரின் சன்னதி தனியாக உள்ளது. யோக நரசிம்மர் கோயிலின் முகப்பில் அழகான குளம் அமைந்துள்ளது. இது, நரசிம்மர் தலங்களில் மிகப்பெரிய உருவம் உடைய கோயிலாகும். இக்கோயிலை ஒட்டியுள்ள மலையில் சமணர் படுகைகள் அமைந்துள்ளது.
கி.பி. 770 ஆம் நூற்றாண்டில் மதுரையை மாறஞ்சடையன் பராந்தக நெடுஞ்சடையன் என்னும் பாண்டிய மன்னன் ஆண்டு வந்தார். மூவேந்த மங்கலப் பேரதையன் ஆகிய மாறன்காரி கலிக்குடா வைத்தியன் என்பவர் பாண்டிய மன்னனுடைய மந்திரியாக பதவி வகித்தார். இவர் யானை மலைக்கு வட மேற்கே நரசிங்க பெருமாளுக்கு குடை வரை கோவில் ஒன்றை கட்ட தீர்மானித்து, பூர்வாங்க வேலைகளை தொடங்கினார். குடை வரை கோவில் நிறைவு பெரும் தருவாயில் இவர் நோய்வாய் பட்டு இறந்துபோகவே, இவருடைய தம்பி பாண்டா மங்கல விசைய அதையன் ஆகிய மாறன் எயினன் என்னும் பெயர் கொண்டவர் மந்திரியாக பதவி ஏற்று, இக்கோவில் திருப்பணியை செய்து குடமுழுக்கும் செய்தார் என இங்கு காணப்படும் கல்வெட்டு மூலமாக அறிய முடிகிறது. இதனை தொடர்ந்து யானைமலையை நரசிங்கமங்கலம் என அழைத்தனர். இக் குடைவரைக் கோயிலில் கிரந்த, வட்டெழுத்து, தமிழ் கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் முற்காலப் பாண்டியர், சோழர், சோழ பாண்டியர், பிற்காலப் பாண்டியர், விஜயநகர மன்னர் ஆகியோர் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் பல இக்கோயிலுக்குச் செய்திருக்கின்றனர் என் கூறுகிறது.
இங்கு முருகப் பெருமானுக்கு லாடன் கோவில் என்னும் குடைவரை கோவில் உள்ளது. வட்டகுறிச்சி என்ற ஊரை சேர்ந்த "நம்பிரான் பட்டசோமாசி பரிவிராஜகர்" என்பவர் இந்தக் கோவிலை புதுப்பித்ததாக கல்வெட்டு வாயிலாக நம்மால் அறிய முடிகின்றது.
யானை மலையில் சமணம் :
யானை மலையின் உச்சியில் குகை தளம் காணப்படுகிறது. இக்குகை தளத்தில் சமணர் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குகை தளத்தில் கி.பி.முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் பிராமி கல்வெட்டுகள் காணப்படுகிறது. இக்கல்வெட்டில் " இவ குன்றத்தூ உறையுள் பா தந்தான் ஏரி ஆரிதன் அத்துவாயி அரிட்ட காயிபன்" என்னும் இரண்டு வரிவாசகம் இடம் பெற்றுள்ளது. "இவ" என்பது "இபம்" என்கிற வடமொழிச் சொல்லின் மறு வடிவம். இதன் பொருள் "யானை" என்பதாகும். குன்றம் என்றால் மலை. இதில் "இவ குன்றம்" என்றால் யானைமலை என்று பொருள். பா' என்றால் படுக்கை. இக்கல்வெட்டில் உள்ள வரிகள் "தங்குவதற்கான கற்படுக்கை" என பொருள் படும். "ஏரிஆரிதன்", "அத்துவாயி அரட்டக்காயிபன்" ஆகிய இரண்டு சமண துறவியர் பெயர் காணப்படுகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே செழித்துக்கிடந்த இப்பகுதியில், சமணத் துறவியர் இருவரும் மலை உச்சியில் கற்படுக்கை அமைத்து தவம் மேற்கொண்டிருந்தனர் என்பது இக்கல்வெட்டு சொல்லும் செய்தியாகும்.
நரசிங்கப் பெருமாள் கோயில் செல்லும் வழியிலுள்ள இந்த குகைத்தளத்தில் உள்ள சமணச்சிற்பங்கள் ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இங்கு வட்டெழுத்துக் கல்வெட்டு காணப்படுகிறது. குகைமுகப்பில் பல சிற்பங்கள் உள்ளன. தீர்த்தங்கரர் சிற்பங்கள், பார்சுவநாதர், பாகுபலி, அம்பிகாயட்சி, மாவீரர் சிற்பங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள சிற்பங்களில் மிக அழகாக வண்ணம் பூசி சித்திரங்களைத் தீட்டியுள்ளனர். இதே போன்று சித்தன்னவாசலிலும் அழகாக சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன.
இங்குள்ள சிலைகள் சமணர்களின் புராணக்கதைகளை விளக்குகின்றன. பார்சுவநாதரின் சிலையைப் பார்க்கும் போது அவருக்கு மேலே தர்ணேந்திரன் என்பவன் ஐந்துதலைப்பாம்பாக மாறி குடைபிடித்துக்கொண்டிருக்கிறான். தர்ணேந்திரனின் மனைவியாகிய பத்மாவதி என்ற இயக்கி பார்சுவநாதருக்கு அருகில் ஒரு குச்சியைப்பிடித்திருப்பதுபோல் காணப்படுகிறது. கமடன் என்ற அசுரன் ஒருவன் பார்சுவநாதர் மேல் கல்லைத்தூக்கி போட வருவதுபோலவும், அவனிடமிருந்து காப்பது போல தர்ணேந்திரன் சிற்பமும் காணப்படுகிறது. கமடன் பின் பணிந்து பார்சுவநாதரை வணங்குவது போலவும் அதே சிலையின் அடியில் வடித்துள்ளனர்.
பார்சுவநாதருக்கு அருகாமையில் பாகுபலியின் சிலை காணப்படுகிறது. பாகுபலி என்பவர் ஆதிநாதரின் மகன். ஆதிநாதர் என்பவர் தீர்த்தங்கரர்களுள் ஒருவர். பாகுபலிக்கு இரண்டு பக்கங்களிலும் நிற்பவர்கள் பிராமி மற்றும் சுந்தரி. இந்த இருவரும் பாகுபலியின் சகோதரிகள். பிராமியின் பெயரில்தான் கல்வெட்டுக்களுக்கு பிராமி எனப் பெயர் வந்தது.
மகாவீரரின் சிற்பத்தின் மீது வண்ணம் பூசி அதன் இரண்டு புறங்களிலும் விளக்குகள் மற்றும் சாமரம் வீசுவோரின் சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. பல நூற்றாண்டுகள் கடந்தும் இன்றும் சித்திரங்கள் அழியாமல் உள்ளது. அதன் அருகில் அம்பிகா இயக்கியின் சிற்பம் காணப்படுகிறது. அம்பிகா இயக்கியின் கதையும், காரைக்கால் அம்மையாரின் கதையும் ஒன்று போலவே சொல்லப்படுகிறது. இருவரும் இறைபக்தி அதிகம் கொண்ட பெண்கள். கணவன் கொடுத்த இரண்டு மாங்கனிகளுள் ஒன்றை இறையடியாருக்கு கொடுத்துப் பின் கணவன் கேட்டதும் ஒன்றை தன் பக்தியின் வலிமையால் கொடுத்ததை கணவன் உணர்ந்து அவளை வணங்குவது. இந்தக் கதைகள் சைவசமயத்திலும், சமணசமயத்திலும் பொதுவாக சொல்லப்பட்டு வருகிறது.
விஜயநகர மன்னர்கள் காலம்
மதுரையை ஆண்ட விஜயநகர மன்னர்கள் கால கல்வெட்டில் யானைமலையை "கஜகிரி" என்று சமஸ்கிருதத்தில் குறிப்பிட்டுள்ளனர். கஜ என்றால் யானை கிரி என்றால் மலை.
தமிழ் இலக்கியங்களில் யானை மலை:
கி.பி.ஏழாம் நூற்றாண்டில் யானைமலையில் சமணப்பள்ளி இருந்ததாக திருஞான சம்பந்தர் எழுதிய மதுரைப்பதிகம் நூல் வாயிலாக அறிய முடிகின்றது.
பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்திலும் யானைமலை பற்றிய குறிப்பு உள்ளது. மதுரையைத் தாக்கவந்த ஒரு பெரிய யானையை, மதுரையைக் காக்கும் கடவுளான சொக்கநாதர், நரசிங்கம் என்னும் அம்பினைத் தொடுத்து அந்த யானையை நகர விடாமல் செய்ய, அதுவே யானைமலையாக மாறியது என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளது.
சங்க இலக்கியங்களில் அகநானூறு, கலித்தொகை ஆகியவற்றில் யானைமலை பற்றிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. அகநானூற்றில் இரண்டு பாடல்களிலும் கலித்தொகையில் ஒரு பாடலிலும் ஆக மொத்தம் மூன்று பாடல்களில் யானைமலை பற்றிய செய்திகள் பதிவுசெய்யப்பட்டு உள்ளன.

Leave a Reply