விநாயகர் முழு முதற் கடவுளாக ஆன்மீக அன்பர்கள் அனைவராலும் போற்றப்பட்டு வணங்கப் படுகிறார். எந்த செயலைத் தொடங்கினாலும் விநாயகரை வழிபட்டு தொடங்குவது தான் மரபு ஆகும். விநாயகர் வழிபாடு மிகவும் எளிதானது. எளிய பொருட்களில் கூட விநாயகரைப் பிடித்து வைத்து வழிபடலாம். அவ்வாறு செய்யும் வழிபாட்டின் மூலமும் நாம் நல்ல பலன்களைப் பெறலாம். அந்த வகையில் வெள்ளெருக்கு விநாயகர் சிலை வழிபாடு பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
தெய்வீக சக்தி வாய்ந்த வெள்ளெருக்கு
வெள்ளெருக்கு விநாயகர் என்பது, வெள்ளெருக்கு எனப்படும் ஒருவகைச் செடியின் வேரிலிருந்து செய்யப்படும் விநாயகர் சிலையைக் குறிக்கும்.எருக்கஞ்செடி குடும்பத்தைச் சேர்ந்தது வெள்ளெருக்கு. நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகையான எருக்குகள் இருக்கின்றன. எருக்கஞ்செடி 12 ஆண்டுகள் மழையில்லாமல் இருந்தாலும் கூட, சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை கிரகித்து வளரும் தன்மை கொண்டது. அதன் பருவகாலத்தில் பூத்து, காய்த்து, வளர்ந்துவிடும். இதில் விஷேச அம்சம் கொண்டதுதான் வெள்ளெருக்கு. இதன் பூவை வைத்து விநாயகருக்கும், சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம்.புதையல், ரத்தினங்கள், சிலைகள், தங்கம் பதுக்கி வைத்திருக்கும் இடம் ஆகிய இடங்களில் மட்டுமே வெள்ளெருக்கு முளைக்கும் என விருட்ச நூல்களில் கூறப்பட்டுள்ளது. அரிதான பொருள்கள் இருக்கும் இடத்தில்தான் வெள்ளெருக்கு செடி முளைக்கும் என சங்க கால நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தோமேயானால் வெள்ளெருக்கு இருக்கும் இடத்தில் தெய்வீக சக்தி இருக்கிறது என்று அர்த்தம். ஆனால், அதே வேளையில் அங்கு தீய சக்திகள் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் வெள்ளெருக்கில் 2 வகை உண்டு. "வெள்ளருக்கு பூக்குமே வேதாளம் பாயுமே" என்ற பாடலும் சங்க காலத்தில் பிரபலம். எனவே வெள்ளெருக்கு செடி எதற்கு அருகில் வளர்ந்துள்ளது என்றும் பார்க்க வேண்டும்.
வீட்டில் வெள்ளெருக்கு விநாயகர் வைக்கலாம்?
வெள்ளெருக்கு தீய சக்திகளை விலக்கி நேர்மறை ஆற்றலை தருவதாகவும் நம்பப்படுகிறது. குறிப்பாக, வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு செல்வ வளம் மற்றும் இன்ன பிற நன்மைகளைத் தரும் என்று கருதப்படுகிறது. எனவே வெள்ளெருக்கு விநாயகர் சிலையை வீட்டில் வைத்து வழிபடலாம். வெள்ளெருக்கு விநாயகரின் தும்பிக்கை ஆனது இடதுபுறம் இருக்கவேண்டும். அல்லது காற்றில் மிதப்பது போல இருப்பது நன்மை அளிக்கும்.
வெள்ளெருக்கு விநாயகர் சிலை வைப்பதன் நன்மைகள்:
- வெள்ளெருக்கு தெய்வீக சக்தி கொண்டது என்பதால் அது நேர்மறை ஆற்றலை அளிக்கும். இல்லத்தில் தீய சக்திகள் வராமல் காக்கும்.
- பண வரவில் காணப்படும் தடைகள் நீங்கி பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கிட்டும். செல்வ வளத்தை பெருக்கும்.
- செய்தொழிலில் லாபம் கிட்டும்.
- கல்வி மற்றும் வேலை வாய்ப்பு போன்ற துறைகளில் தடை மற்றும் தாமதம் நீங்கும்.
- குடும்ப ஒற்றுமை மேலோங்கும். தம்பதிகளுக்கு இடையே நல்லுறவை வளர்க்கும்.
வெள்ளெருக்கு விநாயகர் சிலையை வைக்கும் முறை:
பூஜை அறையில், வடக்கு அல்லது கிழக்கு திசையில் சிலையை வைக்கும் போது வீட்டில் லக்ஷ்மிகடாஷம் பெருகும்.
தினசரி வழிபாடு: தினமும் காலையில், வெள்ளெருக்கு விநாயகருக்கு அபிஷேகம் செய்து, தீபம் ஏற்றி, வழிபடுவது சிறந்தது.
வெள்ளிக்கிழமை வழிபாடு: வெள்ளிக்கிழமைகளில், சிறப்பு வழிபாடு செய்தால், அதிக பலன் கிடைக்கும்.

Leave a Reply