கோடி நன்மை தரும் ஆடி வெள்ளி பூஜை | How to do Aadi Velli Pooja at Home in Tamil

ஆடி வெள்ளி
தமிழ் மாதம் ஆடி புனிதமாக மாதமாகக் கருதப்படுகிறது. ஜூலை மத்திய காலம் முதல் ஆகஸ்டு மத்திய காலம் வரை உள்ள ஆடி, இறைவியை வழிபடுவதற்கு மிகவும் ஏற்ற காலகட்டமாக விளங்குகிறது. 2021 வருடத்தின் ஆடி மாதம், அதாவது Aadi Month 2021, ஜூலை 17 முதல் ஆகஸ்டு 16 வரை உள்ளது.
தவிர, வெள்ளிக்கிழமை என்பதே லக்ஷ்மி தேவி போன்ற பெண் தெய்வங்களை வழிபடுவதற்கு மிகவும் உகந்த, புனித நாளாகக் கருதப்படுகிறது. எனவே ஆடி வெள்ளி, அம்மன் என்ற பெயரில் வணங்கப்படும் இறைவியரின் வழிபாட்டுக்கு மிக உகந்த நாளாக விளங்குகிறது.
இந்த ஆடி மாதத்தில் தான், சூரியன் தனது தெற்கு திசைப் பயணத்தைத் தொடங்குகிறார். எனவே, தக்ஷிணாயனம் எனப்படும் 6 மாத காலப்பொழுது இந்த மாதத்தில் தான் துவங்குகிறது. இது தேவர்களின் இரவுப் பொழுது எனப் புராணங்கள் கூறுவதால், ஆடி வெள்ளி மாலை நேரங்களில் அம்பிகையை வழிபடுவது, அனைத்து வளங்களையும் அளிக்கும் என்பது நம்பிக்கை. இதன் காரணமாகவே ‘ஆடி வெள்ளி, கோடி நன்மை’ தரும் நாளாகக் போற்றப்படுகிறது.
மேலும், ஆடி வெள்ளிக் கிழமைகளில் லக்ஷ்மி தேவியை வழிபடுவது, பெரும் செல்வத்தையும், அனைத்து வித நன்மைகளையும் அளிக்கும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையாகும்.
எனவே, ஆடி மாதத்திலும், குறிப்பாக அந்த வெள்ளிக் கிழமைகளிலும் அம்மன் ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் செய்வதும், திருவிழாக்கள் கொண்டாடுவதும் பரம்பரை வழக்கமாக விளங்குகிறது.
ஆடி முதல் வெள்ளி
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமை என்பது, ஸ்வர்ணாம்பிகா தேவிக்கு அர்ப்பணிக்கப் படும் புனித நாளாகும். பார்வதி தேவியின் அம்சமாக விளங்கும் தேவி ஸ்வர்ணாம்பிகா, பெரும் செல்வச் செழிப்பை அளிக்க வல்லவள்.
ஆடி இரண்டாம் வெள்ளி
பயங்கரமான தோற்றத்துடன், உக்ர வடிவமாக விளங்கும் காளி தேவியின், சாந்த ஸ்வரூபமாகத் திகழ்பவள் அங்காளி அம்மன் ஆவார். கருணை உள்ளம் கொண்ட இந்த தேவி, ஆற்றல் வாய்ந்த பல சித்திகளின் இறைவியாக விளங்குகிறார். எல்லையில்லா அன்பு, அறிவாற்றல், சக்தி, கருணை ஆகியவற்றின் இருப்பிடமாகவும் இவர் திகழ்கிறார். புனிதமான ஆடி இரண்டாவது வெள்ளிக்கிழமையில் இந்த அன்னையை வழிபடுவது, இவரது அருளால், மேன்மையான புத்தி, சிறந்த அறிவாற்றல் ஆகியவற்றை அடைய உதவும்.
ஆடி மூன்றாம் வெள்ளி
இந்த நாள், காளிகாம்பாள் வழிபாட்டுக்கு உரியது. பார்வதி தேவியின் அம்சமாகத் திகழும் இவர், வீரம், ஆரோக்கியம் ஆகியவற்றைத் தர வல்லவர். ஆடி மூன்றாம் வெள்ளியன்று இவரைப் பூஜித்து, வழிபட்டு, பலம், துணிச்சல், நல்ல உடல், மன ஆரோக்கியம் ஆகியவற்றை நாம் பெற முடியும்.
ஆடி நான்காம் வெள்ளி
பெரும் சிறப்பு வாய்ந்த இறைவியாகப் போற்றி வணங்கப்படும் அன்னை காமாட்சிக்கு இந்த நாள் அர்ப்பணிக்கப்படுகிறது. எல்லையில்லா ஆற்றல் கொண்ட, சக்தி தேவியின் வடிவமான இவர், அன்பான உறவுகளை அளிக்க வல்லவர். இந்த வெள்ளி அன்று காமாட்சி வழிபாடு செய்வது, மண வாழ்க்கையில் ஏற்படும் தடங்கல்களைக் களைந்து, உறவுகளை மேம்படுத்தி, கணவன் மனைவி இடையே அன்பும், பரிவும் நிறைந்த மண வாழ்க்கையை தரக் கூடியது.
ஆடி ஐந்தாம் வெள்ளி
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி, செல்வத்தின் அதிபதியும், லோக மாதாவுமான லக்ஷ்மி தேவியை வேண்டி, வழிபடும் நாளாகத் திகழ்கிறது. பொதுவாக இந்தச் சுப தினம், வரலக்ஷ்மி விரதம் என்ற பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், குறிப்பாகப் பெண்கள், விசேஷ பூஜை ஆகியவை செய்து, லக்ஷ்மி தேவியை அன்னை வரலக்ஷ்மியாக வழிபட்டு, தங்கள் குடும்பத்திற்கு, செல்வத்தையும், சகல சௌபாக்கியங்களையும் வேண்டிப் பெறுகிறார்கள்.
இல்லங்களில் ஆடி வெள்ளி பூஜை
ஆடி வெள்ளிக் கிழமைகளில், ஆலயங்களில் திருவிழாக்கள், சடங்குகள், விசேஷ பூஜைகள் போன்றவற்றுடன் அம்மன் வழிபாடு நடைபெறும் அதே நேரத்தில், மக்கள் தங்கள் இல்லங்களிலும் அன்னையை பெரும் சிறப்புடன் வணங்குகிறார்கள்.
அன்று பெண்கள் அதிகாலையில் எழுந்து, நீராடி, கூந்தலில் பூ சூடி, வீட்டை செம்மண் கோலம் ஆகியவற்றுடன் அலங்கரிக்கின்றனர். பின்னர் அம்மன் சிலை, படம் ஆகியவற்றை, குங்குமம், சந்தனம் இட்டு, மலர்கள் சூட்டி அலங்காரம் செய்கின்றனர். சிலர் எலுமிச்சைப் பழங்களால் ஆன மாலையையும் அணிவித்து, எண்ணெய் அல்லது நெய் தீபம் ஏற்றுகின்றனர்.
அம்மனுக்குப் படைப்பதற்காக, வீடுகளில் அன்று, பல உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றன. பலர் சக்கரைப் பொங்கல், பாயசம் போன்றவற்றை, இந்த நாட்களில் விசேஷமாகத் தயாரிக்கின்றனர். இவற்றையும், பலவகைப் பழங்களையும் அம்மன் முன் படைக்கின்றனர். பின்னர் அவர் குறித்த மந்திரங்கள், ஸ்லோகங்கள், துதிகள் ஆகியவற்றை பக்தியுடன் ஓதுகின்றனர். அம்மனைப் புகழ்ந்து பாடல்கள் பாடுகின்றனர். புனித நூல்களைப் படிக்கின்றனர். பின்னர், தங்கள், மற்றும் அனைவரது நல்வாழ்வுக்காகவும் அம்மனை மனமுருக வேண்டி, கற்பூர ஜோதி, ஆரத்தி போன்றவற்றுடன் பூஜையை நிறைவு செய்கின்றனர். பிரசாதங்களை குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளித்து, தாங்களும் உண்கின்றனர். திருமணமாகி, நல்வாழ்வு வாழும் 5 பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம் ஆகியவை அடங்கிய தாம்பூலம் அளித்து அவர்களிடம் ஆசியையும் பெறுகின்றனர்.
சிலர், ஆடி வெள்ளிக் கிழமைகளில் பாம்புப் புற்றுக்கும் பால் வார்க்கின்றனர்.
