ஒவ்வொரு கிழமையும் ஒவ்வொரு கிரகத்திற்கு உரியதாகும். குறிப்பிட்ட கிழமை அன்று குறிப்பிட்ட கிரகத்தின் ஆதிக்கம் நிறைந்து காணப்படும். அந்த வகையில் வெள்ளிக்க்கிழமை அன்று சுக்கிர பகவானின் ஆதிக்கம் நிறைந்து இருக்கும். சுக்கிர பகவானின் அதிபதி லக்ஷ்மி தேவி ஆவாள். லக்ஷ்மி தேவி திருமகள் என்று அழைக்கப்படுகிறாள். அவள் செல்வத்தின் அதிபதியாகத் திகழ்பவள். செல்வம் என்பது பணத்தை மட்டும் குறிக்காது. பதினாறு பேறுகளையும் குறிக்கும். நமது பெரும்பாலான பிரச்சினைகளுக்கு பணம் தான் காரணமாக அமைகிறது என்று கூறலாம். ஆனால் பணம் மட்டும் போதாது. ஒரு சிலருக்கு பணம் இருக்கும் ஆனால் குழந்தை பாக்கியம் இருக்காது. ஒரு சிலருக்கு கல்வி சிறப்பாக இருக்கும். ஆனால் செல்வம் இருக்காது. இப்படி ஒன்று இருந்தால் ஒன்று இல்லாமல் இருக்கும். அதன் காரணமாக சில பல பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். பிரச்சினைகள் தீரவும் பதினாறு பேறுகளைப் பெறவும் ஒரு எளிய ஆன்மீக பரிகாரத்தைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம். நம்முடைய பிரச்சனையை நாம் மனதில் நினைத்து ஆறு வாரங்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை மேற்கொள்ள வேண்டும். –
நம் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய வெள்ளை மொச்சையை வைத்து தான் இந்த பரிகாரத்தை நாம் செய்யப் போகிறோம். வெள்ளிக்கிழமை அன்று இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். காலை 6 முதல் 7 மணிக்குள், அல்லது இரவு 8 முதல் 9 மணிக்குள் இந்த பரிகாரத்தை நாம் செய்ய வேண்டும். 20 மொச்சையை எடுத்து, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகம் குழையக் கூடாது. ஒரு வெள்ளை நிற சதுரமான துணியை எடுத்து அதில் வேகவைத்த இந்த மொச்சையை வைத்து மூட்டையாக கட்டிக் கொள்ள வேண்டும். இப்பொழுது நம்முடைய பூஜை அறையில் மகாலட்சுமியின் புகைப்படத்திற்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அன்னைக்கு வாசனை மிக மலர்களை சூட்டிக்கொள்ள வேண்டும். பிறகு இந்த மூட்டையை நம்முடைய உள்ளங்கையில் வைத்து நம்முடைய பிரச்சினையை மனதார நினைத்துக் கொள்ள வேண்டும்.
மந்திரம்: “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஶ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத ஸகல சௌபாக்யம் தேஹி தேஹி ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஶ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ” இந்த மந்திரத்தை 11 முறை கூற வேண்டும்.
பிறகு அந்த மூட்டையை நீர் நிலைகளில் போட்டு விட்டு திரும்பிப் பார்க்காமல் வந்து விட வேண்டும். அப்படி நீர நிலை இல்லாவிடின் யார் காலும் படாத வகையில் ஏதாவது ஒரு மரத்தடியில் போட்டு விட்டு வர வேண்டும். வீட்டிற்குள் வருவதற்கு முன்பாக முகம், கை, கால்களை சுத்தமான நீரால் கழுவி விட்டு பிறகு வீட்டிற்குள் நுழைய வேண்டும்.
இவ்வாறு நாம் தொடர்ந்து ஆறு வாரங்கள் வெள்ளிக்கிழமை தோறும் மேலே சொன்ன சுக்கிர ஹோரையில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். எந்த பிரச்சனை தீர வேண்டும் என்று நினைத்து செய்கிறோமோ, அந்தப் பிரச்சனை தீர்வதற்குரிய நல்ல வழியை மகாலட்சுமி தாயார் நமக்கு காட்டுவார். மகாலட்சுமியின் அருளால் பதினாறு பேறுகளையும் பெறலாம் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

Leave a Reply