AstroVed Menu
AstroVed
search
search

குல தெய்வ வழிபாடு செய்தால் அருள் நிச்சயம்! | Kula Deivam Valipadu Tamil

dateSeptember 8, 2023

குலத்தை காக்கும் தெய்வம் குல தெய்வம். ஒருவரது குலம் ஆலமரம் போல தழைத்து ஒங்க என்றும் துணை வருவது குல தெய்வம் என்றால் மிகை ஆகாது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவரவர் வணங்கி வந்த குல தெய்வம் கட்டாயம் இருக்கும். அந்த தெய்வத்தை தொடர்ந்து பரம்பரை பரம்பரையாக அடுத்து அடுத்து வரும் சந்ததியினர் வணங்கி வருவார்கள்.

நாம் எந்த தெய்வத்தை வணங்கினாலும் முதலில் குலதெய்வத்தை வணங்க வேண்டும். குல தெய்வ அனுக்கிரகம் இருந்தால் தான் நமது வாழ்க்கை வளமாக இருக்கும். குல தெய்வத்தை வணங்காமல் பிற தெய்வங்களை வணங்கினால் பயன் இல்லை.  நாம் எந்தவொரு செயலை ஆரம்பித்தாலும் குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டியது அவசியம்.  குலதெய்வ வழிபாடு செய்தால்தான் அனைத்து தெய்வங்களின் ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி!

குல தெய்வமாக முன்னோர்கள்:

குல தெய்வம் என்பது நமது முன்னோர்களால் வணங்கி வரப்பட்ட தெய்வம் எனவே குல தெய்வத்தை வணங்கினால் தான் மற்ற தெய்வங்களின் அருளாசிகள் நமக்கு கிட்டும். இன்னும் சொல்லப் போனால் குலதெய்வம் என்பது நம்மைப் போலவே வாழ்ந்த நம்முடைய முன்னோர்களாகவும் நம் பூர்வீகத்தைக் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அவர்களையே நம் குலசாமிகளாக போற்றி வழிபட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

உங்கள் குல தெய்வம்:

குல தெய்வ வழிபாடு முக்கியம் என்பதை ஆன்மீக அருளாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஒரு சிலருக்கு நமக்கு தெரிந்த புராண தெய்வங்கள் குல தெய்வமாக இருக்கலாம். ஒரு சிலருக்கு காவல் தெய்வமாகிய மதுரை வீரன், கருப்ப சாமி, முனீஸ்வரன், செல்லியம்மன், வீரபத்திரர்  போன்ற தெய்வங்கள் குல தெய்வமாக இருக்கலாம். ஒரு சிலருக்கு செங்கல் வடிவிலும் குலதெய்வம் இருக்கலாம். உங்கள் குல தெய்வம் எதுவாக இருந்தாலும் குல தெய்வத்தை முறைப்படி வணங்க வேண்டியது அவசியம்.  திருமணம், காதுகுத்தல், உபநயனம், போன்று நம் வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும் முதலில் குலதெய்வத்திடம் சொல்லி வழிபடுவதை வழக்கமாக் கொள்ளவேண்டும்..

குல தெய்வ வழிபாட்டின் முக்கியத்துவம்

குலதெய்வ வழிபாட்டின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு தருணத்திலும் மகான்களும்  ஆன்மீக அருளாளர்களும்  வலியுறுத்திக் கொண்டே வந்திருக்கிறார்கள். குலதெய்வத்தை தினமும் வணங்கவேண்டும். குலதெய்வக் கோயிலுக்கு மாதத்துக்கு ஒருமுறையேனும் சென்று தரிசிக்க வேண்டும். குறைந்தபட்சம் வருடம் ஒரு முறையாவது சென்று தரிசிக்க வேண்டும். அமாவாசை, பெளர்ணமி முதலான நாட்களில் மறக்காமல் குலதெய்வ வழிபாடு செய்யவேண்டும்.

குல தெய்வ வழிபாட்டு முறை:

குல தெய்வ கோவிலுக்குச் செல்லும் போது தீபம் ஏற்றி வழிபட வேண்டும். மேலும் கோவிலுக்கு தீபம் ஏற்ற நெய், எண்ணெய் திரி முதலானவற்றை வாங்கி அளிக்கலாம். அம்மன் கோவிலாக இருந்தால் மஞ்சள் கும்குமம் வாங்கி அளிக்கலாம். வருடம் ஒரு முறையாவது அபிஷேக ஆராதனை செய்து வஸ்திரம் சார்த்தி வழிபடுதல் அவசியம். அல்லது குல வழக்கப்படி பொங்கல் அல்லது படையலிட்டு பிரார்த்தனை மேற்கொள்வது அவசியம். குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதை முறையே செய்து வரவேண்டும் குலதெய்வக் கோயிலுக்கு நம்மால் முடிந்த அளவுக்கு ஏதேனும் திருப்பணிகளைச் செய்யவேண்டும். கோயிலை தூய்மைப்படுத்துதல், தண்ணீர் டேங்க் அமைத்துக் கொடுத்தல், சந்நிதிகள் புதுப்பிக்க உதவுதல், மரக்கன்றுகள் நடுதல், ஸ்தல விருட்சங்களை அமைத்தல் முதலான விஷயங்களைச் செய்யலாம்.

நம் குலத்தைக் காத்து அனுகிரகிக்கும் குலதெய்வத்தை வணங்கி வழிபட்டு வளமான வாழ்வு பெறுவோம்.  

Leave a Reply