AstroVed's End of Season Sale: Up to 50% OFF on our Packages, Fire Labs, Monthly Powertimes, Mantra Writing & Sacred Products Order Now
Search
x
cart-added The item has been added to your cart.
x

12 ஆழ்வார்கள் வரலாறு

July 14, 2023 | Total Views : 4,479
Zoom In Zoom Out Print

வைணவ சமயத்தின் முதன்மைத் தெய்வமாகிய திருமாலை போற்றித் தமிழ்ச் செய்யுட்களால் பாடியவர்கள் ஆழ்வார்கள் ஆவர்.ஆழ்வார்களின் காலம் 6 முதல் 9 ஆம் நூற்றாண்டு என்று கூறப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் உட்பட 12 ஆழ்வார்கள் உள்ளனர். அவர்களின் பாடல்களின் தொகுப்பு 'திவ்ய பிரபந்தம்' என்று அழைக்கப்படுகிறது, அவை 4000 எண்ணிக்கையில் உள்ளன.

இந்த பூமியில் ஆழ்வார்கள் தோன்றியதற்குக் காரணம் ஸ்ரீமன் நாராயணனின் பக்தியைப் பரப்புவதற்காகத்தான். வட்டு, வாள், சங்கு முதலான ஆயுதங்கள் ஆழ்வார்களாக அவதரித்திருப்பது முக்கியமாக இறைவனைப் போற்றிப் பாடுவதற்கும், அவருடைய இருப்பிடத்தில் சேவை செய்வதற்கும்தான். அவர்கள் பகவான் ஸ்ரீமன் நாராயணனின் ஒரு அங்கம். அவர்களின் பாடல்கள் வேதங்கள், உபநிடதங்கள் மற்றும் பகவத் கீதைக்கு சமமானவை என்று கூறப்படுகிறது. ஆழ்வார்கள் 'பாசுரங்களை' பாடியுள்ளனர், அவை எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவை மற்றும் வேதங்களுக்கு நிகரானவை என்று கூறப்படுகிறது. ஆழ்வார்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும்  அவர்கள் முழு மனித சமூகத்தையும் சேர்ந்தவர்கள். அவர்களைப் பற்றி இந்தப் பதிவில் அறிந்து கொள்வோம் வாருங்கள்.

பன்னிரு ஆழ்வார்கள்:

  1. பொய்கை ஆழ்வார்

  1. பூதத்தாழ்வார்

  1. பேயாழ்வார்

  1. திருமழிசையாழ்வார்

  1. நம்மாழ்வார் 

  1. மதுரகவி ஆழ்வார்

  1. குலசேகர ஆழ்வார்

  1. பெரியாழ்வார்

  1. ஆண்டாள் 

  1. தொண்டரடிப்பொடியாழ்வார்

  1. திருப்பாணாழ்வார் 

  1. திருமங்கையாழ்வார்

பொய்கை ஆழ்வார்

பொய்கை ஆழ்வார் பன்னிரு ஆழ்வார்களுள் முதல் ஆழ்வார் ஆவார். இவர் காஞ்சீபுரத்தில் பொற்றாமரைப் பொய்கையில் பிறந்தவர் என்பதால் பொய்கை ஆழ்வார் எனப்பெயர் பெற்றார். இவரால் பாடப்பட்ட நூறு பாடல்கள் திருவந்தாதி எனப்படுகின்றது. விஷ்ணுவின் பத்து அவதாரங்களை முதன் முதலில் பாடியவர் இவர் தான் இவர் பாஞ்சஜன்யம் எனப்படும் புனித சங்கின் அம்சம் ஆவார். இவர் திருவரங்கம், திருவெக்கா, திருக்கோவிலூர், திருப்பரமபதம், திருப்பதி, திருப்பாற்கடல் என மொத்தம் 6 கோவில்களைப் பற்றி பிற ஆழ்வார்களுடன் இணைந்து மங்களாசனம் செய்துள்ளார். மங்களாசனம் என்பது இறைவனைப் போற்றிப் பாடல் பாடுவது ஆகும்.  இவர் பேயாழ்வார், பூதத்தாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார். இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்க துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள்.

பூதத்தாழ்வார்

பூதத்தாழ்வார், பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர்.  முதல் ஆழ்வார்கள் எனப் போற்றப்பட்ட மூன்று ஆழ்வார்களுள் ஒருவராக விளங்கினார். மாமல்லபுரத்திலுள்ள தலசயனப் பெருமாள் கோயிலை அண்டிய பகுதியிலேயே இவர் பிறந்ததாகக் கருதப்படுகிறது. இவர் திருமாலின் கையில் உள்ள  கௌமோதகி என்ற கதையின் அம்சமாவார்.  இவர் வைணவ நூல்களின் தொகுப்பான நாலாயிர திவ்வியப் பிரபந்தங்களில் உள்ள இரண்டாம் திருவந்தாதியைப் பாடியுள்ளார். இது நூறு வெண்பாக்களால் ஆனது. இவர் மங்களாசாசனம் செய்த திருக்கோவில்கள்: திருப்பதி,திருவரங்கம், திருமாலிருஞ்சோலை, திருப்பாற்கடல், திருக்குடதை, திருக்கோட்டியூர், திருக்கச்சி, திருப்பாடகம், திருக்கோயிலூர், திருத்தஞ்சை மாமணிக் கோயில், திருநீர்மலை, திருக்கடல்மல்லை திருத்தங்கல்

பேயாழ்வார்

பேயாழ்வார், ஆழ்வார்களில் மூன்றாமவர் ஆவார். இவர் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் எனும் ஆழ்வார்களுடன் ஒரே காலத்தில் வாழ்ந்தவராவார்.இவர்கள் மூவரும் ஞான, பக்தி, வைராக்கியங்கள் மிக்க துறவறம் பூண்டு, ஆண்டவனின் நினைவிலேயே உருகி உள்ளம் கனியப் பாடியவர்கள். இவர் மயிலாப்பூரில் ஆதிகேசவ பெருமாள் கோவில் குளத்தில் செவ்வல்லி மலரில் தோன்றியவர் என்று கருதப்படுகிறது. இவர் திருமாலின் நந்தகம் என்னும் வாளின் அம்சமாகத் தோன்றியவர். வைணவ நூல்களின் தொகுப்பில் உள்ள மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் இவராவார், திருக்கோவிலூர் மிருண்டு முனிவர் ஆசிரமத்தில் பொய்கையாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் இருந்த போது இவரே முதலில் இறைதரிசனம் கிடைக்கப் பெற்றார். இந்து சமயத்தின் பிரிவுகளான சைவம், வைணவம் என்பவற்றுக் கிடையே போட்டி நிலவிய கால கட்டத்தில்,இவ்விரு சமயப் பிரிவுகளிடையே ஒற்றுமை காண விழைந்தவர் பேயாழ்வார் எனக் கருதப்படுகிறார்.இவர் மங்களாசாசனம் செய்த திருக்கோவில்கள்:திருப்பதி, திருப்பாற்கடல், திருவேளுக்கை, திருவரங்கம், கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோவில், உப்பிலியப்பன் கவில், திருப்பரமபதம், திருக்கோஷ்டியூர், கள்ளழகர் கோவில், காஞ்சி வரதராஜப் பெருமாள், திருப்பாடகம், திருவல்லிக்கேணி, சோளிங்கர், ஆதிகேசவப் பெருமாள்.

திருமழிசையாழ்வார்

வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். பக்திசாரர், உறையில் இடாதவர், குடமூக்கிற் பகவர், திருமழிசையார், திருமழிசைபிரான் என்பன இவரின் வேறு பெயர்கள். தை மாதம் மக நட்சத்திரத்தில் திருமாலின் ஆயுதங்களுள் ஒன்றான சக்கரத்தின் அம்சமாகத் திருமழிசை என்னும் ஊரில் பிறந்தவர். இவருடைய பிரபந்தங்கள் தான் முதன்முதலில் வேறு தெய்வங்களுக்கு மேலாகத் திருமாலை உயர்வாகச்சொல்லியவை.

பிறப்பின் அற்புதம்: பார்க்கவர் என்னும் முனிவர் திருமழிசையில் யாகம் புரிகையில் அவர் மனைவியார் கருவுற்று பன்னிரண்டு திங்கள் கழித்து, கை, கால், முதலிய உறுப்புகள் இல்லாத ஒரு பிண்டத்தைப் பெற்றெடுத்தார். தம்பதியர் மனம் தளர்ந்து அதனைப் பிரம்புத்தூற்றின் கீழ் விட்டுச் சென்றுவிட்டார்கள். ஆண்டவன் அருளால் அப்பிண்டம் எல்லா உறுப்புகளும் அமையப்பெற்ற ஓர் அழகிய ஆண்குழந்தையாகி அழத் தொடங்கியது. அக்கணம் அவ்வழியே வந்த மகப்பேறு இல்லாத தம்பதிகளான பிரம்புத் தொழில் புரியும் திருவாளன் பங்கயச்செல்வி என்பவர்கள் குழந்தையை கண்டெடுத்து வளர்க்க தீர்மானித்தனர்.

என்ன விந்தை! அக்குழந்தையை அவளே பெற்றாள் என்னும்படி அவள் மார்பில் பால் சுரந்தது. ஆயினும் அப்பாலை குழந்தை குடிக்க மறுத்தது. பலநாள் வரை பால் உண்ணாமல் இருந்தும் உடல் சிறிதும் வாடவில்லை. இவரின் புகழைக் கேள்வியுற்று அருகில் உள்ள சிற்றூரில் இருந்துவந்த வயதான தம்பதியர் அன்புமிக கொடுத்த பாலை உண்ண ஆரம்பித்தார். சிறிதுகாலம் இவ்வாறு செல்கையில் தமக்கு பால் கொண்டுவந்து தரும் இத்தம்பதிக்கு ஏதேனும் கைமாறு செய்யும் பொருட்டு ஒருநாள் தனக்கு கொடுத்த பாலில் மீதத்தை அவர்கள் சரிபாதி உண்ணுமாறு செய்தார். இதன் மூலம் இளமை மீண்ட அத்தம்பதிகளுக்கு பிறந்த ஆண்மகவே பின்னாளில் கணிகண்ணன் எனும் பெயரில் திருமழிசையாருக்கு அணுக்க சீடரானார்.

நம்மாழ்வார் 

வைணவ நெறியைப் பின்பற்றிப் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். திருநெல்வேலி சீமையில் தாமிரபரணி கரையிலுள்ள திருக்குருகூர் என்னும் ஊரில் பொற்காரியார் மற்றும் சேர நாட்டு திருவெண்பரிசாரத்தை ஆண்ட மன்னனின் மகளான உடைய நங்கைக்கு மகனாராக நம்மாழ்வார் பிறந்தார். இவர் பாண்டிய மரபினர் ஆதலால் மாறன் என்ற இயற்பெயரையும் மாயையை உருவாக்கும் "சட" எனும் நாடியை விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த இவர் வென்றதால் "சடகோபன்" என்றும் மாறன் சடகோபன் என அழைக்கப்பட்டார். யானையை அடக்கும் அங்குசம் போலப் பரன் ஆகிய திருமாலைத் தன் அன்பினால் கட்டியமையால் "பராங்குசன்" என்றும், தலைவியாகத் தன்னை வரித்துக் கொண்டு பாடும்போது "பராங்குசநாயகி" என்றும் அழைக்கப்படுகிறார். நான்கு பிரபந்தங்களில் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றாறு பாசுரங்களை இசைத்துள்ளார்

மதுரகவி ஆழ்வார்

மதுரகவி ஆழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். பாண்டிய நாட்டில் திருக்குருகூர் என்னும் ஆழ்வார்திருநகரிக் கருகிலுள்ள திருக்கோளூரில் ஈச்வர வருசம் சித்தரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே செவிக்கினிய செந்தமிழில் நற்கவிதைகளைப் பாடிய காரணம் பற்றி இவருக்கு இச்சிறப்புப் பெயர் வந்தது. நம்மாழ்வார் பிறந்த கி.பி 798 க்குச் சற்று முன் பிறந்தவர். நம்மாழ்வார்க்குப் பிறகும் வாழ்ந்தவர். இவர் பெருமானைத் தன் பாசுரங்களால் பாடாமல் தன் ஆசாரியனான நம்மாழ்வாரையே சிறந்த தெய்வமாக எண்ணி அவரைப் போற்றியே பதினோரு பாசுரங்களைப் பாடியுள்ளார். நம்மாழ்வாரும் இவரை அடிமை கொண்டு, மூவகைத் தத்துவங்களின் இயல்பையும் மற்றும் அறியவேண்டிய யோக இரகசிய உண்மைகளையும் சீடனுக்கு உபதேசித்தார்.

குலசேகர ஆழ்வார்

பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவரான இவரை குலசேகரப் பெருமாள் என்றும் அழைக்கின்றனர். கருவூர் திருவஞ்சிக்களம் என்னும் ஊரில் இவர் பிறந்தார். இவரது ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம். இவர் சிறந்த ராம பக்தர். இவர் திருமாலின் மார்பில் இருக்கும் கௌஸ்துப மணி அம்சம் பொருந்தியவர். இவர் அரச குடும்பத்தில் பிறந்தவர்.இவருக்கு இறைவன் காட்சி தந்தமையால் இன்பமும், செல்வமும், அரசாட்சியும் தமக்கு வேண்டாமென்று துறவினை மேற்கொண்டார். இவர் பெரிய பெருமாளாகிய ராமபிரானிடத்தில் அன்பு பூண்டவரானதால் இவருக்கும் 'குலசேகரப் பெருமாள்' என்றே பெயர் வழங்கலாயிற்று. இவருடைய பாடல்கள் பெருமாள் திருமொழி என்றழைக்கப்படும். இதனில் 31 பாசுரங்கள் திருவரங்கப் பெருமானைப் பற்றியது. இவர் திருவேங்கடம், திருக்கண்ணபுரம் முதலான திருத்தலங்களையும் பாடியுள்ளார். திருவரங்கம் பெரிய கோயிலில் மூன்றாவதாக இருக்கும் திருச்சுற்றிலே சேனைவென்றான் திருமண்டபம் என்பதைக் கட்டினார். இத்திருச்சுற்றையும் செப்பம் செய்தார். இதனாலேயே இம்மூன்றாவது சுற்றுக்கு இவரது பெயர் இன்றும் வழங்கப்படுகிறது. குலசேகராழ்வாரால்தான் ”பவித்ரோற்சவ மண்டபம்” கட்டப்பட்டது. இந்த மண்டபம் உள்ள பிராகாரத்தைத் திருப்பணி செய்தவரும் இவரே!

பெரியாழ்வார்

பெரியாழ்வார் பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். இவர் திருவில்லிப்புத்தூரில்  ஆனிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் கருடன் அம்சமாக ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்தவர். 'விஷ்ணு சித்தர்' என்பது இயற்பெயர். இறைவனுக்கே கண்ணேறு கழிக்க முயன்றதால் இவரை ஆழ்வார்களில் பெரியவர் எனும் பொருள்பட "பெரியாழ்வார்" என அரங்கன் அழைக்க, பின்னர் இதுவே இவர் பெயராகிப்போனது. திருவில்லிபுத்தூரில் கோயில்கொண்டுள்ள வடபத்திரசாயி பெருமாளுக்கு அன்றலர்ந்த மலர்களைப் பறித்துப் பூமாலையாகச் சாற்றுவதைக் கைங்கர்யமாகக் கொண்டிருந்தார். ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வாரான ஆண்டாளின்வளர்ப்பு தந்தையானவர். ஆண்டாளைத் திருவரங்கம் உறையும் அரங்கனுக்கு மணம்முடித்துக் கொடுத்ததன் மூலம் அரங்கனுக்கே மாமனார் ஆனார். திருமால் திருமகளோடு  கருடவாகனத்தில் எழுந்தருளியிருக்கக் கண்டு இறைவனின் வடிவழகில் மயங்கி எங்கே இறைவனுக்குக் கண்ணேறு (கண்திருஷ்டி) விழுந்துவிடுமோ என்றஞ்சிப் பாடியதே திருப்பல்லாண்டு. இன்றும் சாற்றுமறை எனும் வைணவ தினசரி வழிபாட்டின் தொடக்கத்திலும் முடிவிலும், வைணவக் கோயில்களின் திருவிழாக்களில் சுவாமி புறப்பாட்டின்போதும் புறப்பாடு முடிந்து திருக்கோயில் திரும்பும்போதும், பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டு பாடப்பட்ட பின்னரே சுவாமியைத் திருக்கோயிலுக்குள் எழுந்தருள செய்கின்றனர்.

ஆண்டாள் 

ஆண்டாள் 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களால் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார்.  மதுரைக்கு  அண்மையிலுள்ள  ஸ்ரீவில்லிப்புத்தூர் என்னும் ஊரில் வசித்துவந்த விஷ்ணு சித்தர் (பெரியாழ்வார்) என்னும் அந்தணர் ஒருவரால் ஒரு குழந்தையாகத் துளசிச் செடியின் கீழ் கிடந்தபோது, ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டாள். ஆயர் குல பெருமை அறிந்த பெரியாழ்வார் அக் குழந்தைக்கு இட்ட பெயர் கோதை ஆண்டாள், திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு பாடற் தொகுதிகளை இயற்றியுள்ளார். வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை நமக்கு எடுத்துரைக்கிறது. மேலும், ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரமாகக் கருதப்படுகிறார்.

தொண்டரடிப்பொடியாழ்வார்

தொண்டரடிப்பொடியாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர். சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் பிரபவ வருடம் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தார். ஆழ்வார் வரிசைக்கிரமத்தில் பத்தாமவராக வரும் இவருக்கு ‘விப்ர நாராயணர்‘ என்பது இயற்பெயர். இவர் ஸ்ரீ விஷ்ணுவின் அனைத்துப் பக்தர்களையும் வழிபட்டு, அவர்களின் காலடியில் காணப்படும் மண்துகள்களைத் (சிறிய சிறிய தூசி துகள்கள்) தனது தலையில் வைத்துக்கொண்டு,அரங்கநாதரைப் புகழ்ந்து பாடல்களைப் பாடினார். அப்போதிலிருந்து, அவர் "தொண்டரடிப்பொடி ஆழ்வார்" என்று அழைக்கப்பட்டார். திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அத்தல இறைவனாகிய  அரங்கனுக்கு  பாமாலை மற்றும் பூமாலை சாற்றும் சேவையை தன் வாழ்நாள் முழுதும் சிரமேற்கொண்டார்.

திருப்பாணாழ்வார் 

திருப்பாணாழ்வார் வைணவ  நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள்  ஒருவர். இவர் உறையூரில் கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர். இறைவன் முன் எல்லோரும் ஒன்றே என்ற இராமானுஜரின் கோட்பாட்டிற்கு திருப்பாணாழ்வர் வரலாறே மிகுந்த ஊக்கமாகவும் பலமாகவும் இருந்தது எனலாம். பாணர், முனிவாகனர், யோகிவாகனர், கவீசுவரர் என்பன இவரது வேறு பெயர்கள். திருவரங்கத் திருவான அரங்கன் முன் சென்று அவன் வடிவழகில் மயங்கி திருமுடி முதல் திருவடி வரை பாடியவர் "என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினை காணாவே" என்று பாடிய படி தன் பூத உடலோடு ஆண்டாள் போல அரங்கனோடு இரண்டறக்கலந்தார்.

திருமங்கையாழ்வார்

திருமங்கையாழ்வார் வைணவ நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் இளையவர் மற்றும் இறுதியானவர். சோழ நாட்டில் உள்ள திருவாலிதிருநகரி என்னும் ஊருக்கு அருகில் உள்ள திருக்குரையலூரில் பிறந்தவர். இவரது இயற்பெயர் ‘கலியன்’. ஆதியில் இவர் சோழமன்னனுக்கு படைத்தலைவனாக இருந்தார். ஒருமுறை போர்க்களத்தில் இவருடைய வீரத்தைக் கண்ட அரசன் இவருக்கு சோழதேசத்தின் “திருமங்கை” நாட்டின் குறுநில மன்னனாக்கினான். அன்று முதல் இவர் “திருமங்கை மன்னன்” என அழைக்கப்பட்டார்.

banner

Leave a Reply

Submit Comment