அதர்வண வேதத்தின் நாயகிக்கான பூஜையை நள்ளிரவில் செய்தால் உங்களை துரத்தும் துன்பங்கள் காணாமல் ஓடி விடும்..

நாகரீகம் வளர வளர நமது பிரச்சினைகளும் வளர்ந்து கொண்டு தான் இருக்கின்றது. நம்மால் அதனை தாங்கிக் கொள்ளவும் கஷ்டமாக இருக்கிறது. பிறரிடம் கூறவும் முடிவதில்லை. இந்த சூழலில் நாம் விரக்தியின் விளிம்புக்கே சென்று விடுகிறோம். ஏன் தான் இந்த வாழ்க்கை என்ற சலிப்பும், எப்படி வாழப் போகிறோம் என்ற வியப்பும் நம்முள் ஏற்படுகிறது. மனிதர்களால் முடியாதது இறைவனால் தான் முடியும் என்று இறைவனின் திருவடிகளை நாடிச் செல்கிறோம். நமது அத்தனை பிரச்சினைகளையும் தீர்க்கும் அன்னையாக, அதர்வண வேதத்தின் நாயகியாக அன்னை பிரத்யங்கிரா தேவி விளங்குகிறாள். எனவே நமது பிரச்சினை தீர அன்னையை எவ்வாறு வணங்குவது என்று இந்தப் பதிவில் காண்போம்.
பொதுவாக அன்னை பிரத்யங்கிரா தேவியை ஆலயம் சென்று வழிபடுவது தான் வழக்கம். இவள் உக்கிரமான தேவி என்பதால் வீட்டில் வைத்து வழிபட பலரும் யோசிப்பார்கள். உக்கிரமான தேவி என்றாலும் கருணையின் கடலாக விளங்கும் அன்னையை வீட்டிலும் வழிபடலாம். அதற்கு சில நியதிகள் உண்டு. அதர்வண வேதத்தின் நாயகியாக விளங்கும் இந்த தேவியை வழிபட தனியாக பூஜை அறை இருக்க வேண்டும். அதுவும் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வீட்டில் பிரத்தியங்கிரா வழிபாடு செய்வது அவ்வளவு உசிதமன்று. மேலும் இந்த வழிபாட்டிற்கு உரிய நேரம் நள்ளிரவு ஆகும்.
பிரத்யங்கிரா தோன்றியது எப்படி?
பிரகலாதனை காக்க நரசிம்மர் அவதாரம் எடுத்து வந்து ஹிரண்யகசிபுவை கொன்ற பின்னும் உக்ரம் தணியாததால் தேவர்கள் சிவனை சரண் அடைந்தனர். விஷ்ணுவின் உக்ரத்தைத் தணிக்க சிவபெருமான் சரபர் வடிவம் எடுத்தார். அவரது இரு சிறகிலிருந்தும் சூலினி மற்றும் ப்ரத்யங்கிரா தேவி தோன்றியதாக ஐதீகம். பிரத்யங்கிரா தேவிக்கான தாந்திரீக வழிபாட்டைப் பற்றிக் காண்போம்.
வழிபடும் முறை:
இந்தப் பூஜையை நள்ளிரவில் தான் செய்ய வேண்டும். பூஜை அறையை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். உள்ளம் மற்றும் உடல் தூய்மையும் அவசியம். பூஜைக்கு உரிய சாமான்களை தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த பூஜைக்கு பிரத்தியங்கிரா தேவி புகைப்படமும், ஒரு குத்து விளக்கும் அவசியம் தேவை. படம் இல்லாதாவர்கள் தீபத்தை ஏற்றி அதில் தேவியை ஆவாஹனம் செய்யலாம். அதாவது தீப வடிவில் அன்னையை வணங்கலாம். சுத்தமான தரையில் மனை போட்டு மாக்கோலம் இட்டு அதன் மேல் படம் அல்லது விளக்கு வைத்து பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் குங்குமம் அட்சதை சார்த்த வேண்டும். செவ்வரளி மலர் அல்லது கருங்குவளை மலரை அன்னைக்கு சாற்ற வேண்டும். தூப தீப ஆராதனைகளை செய்ய வேண்டும். மிகவும் காரமான புளி சாதத்தை அன்னைக்கு நிவேதனமாக படைக்க வேண்டும்.
இந்த அன்னையின் திருவுருவப் படம் அல்லது தீபத்தின் முன்பாக அமர்ந்து உங்களுடைய பிரச்சினை எதுவாக இருந்தாலும் அதை தீர்க்க வேண்டும் என்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த தீப வழிபாட்டை நீங்கள் தொடர்ந்து செய்து வரும் போது பிரத்தியங்கரா தேவியின் அனுகிரகத்தை முழுவதுமாக பெற முடியும். அது மட்டுமின்றி உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் எந்த விதமான பிரச்சனை இருந்தாலும் அது காணாமல் போய் விடும் என்பது நிச்சயம்.
இந்த வழிபாட்டை அமாவாசை, அஷ்டமி, செவ்வாய்க்கிழமை, சனிக்கிழமை, இந்த தினங்களில் செய்யலாம். மிகப்பெரிய சிக்கலில் சிக்கியிருக்கிறீர்கள் என நினைப்பவர்கள் இந்த நாளில் தொடங்கி தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாட்டை செய்து வர உங்களை சூழ்ந்திருக்கும் துன்பங்கள் எல்லாம் காணாமல் போய் விடும் என்பது மட்டும் உறுதி. நம்பிக்கையுடன் பிரத்யங்கிரா தேவி வழிபாட்டை செய்து துன்பமில்லா வாழ்க்கையை வாழுங்கள்.
