தொட்ட காரியம் வெற்றி பெற விநாயகர் வழிபாடு

“ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”
இந்து மதத்தில் முதன்மைக் கடவுளாக வணங்கப்படுபவர் விநாயகர். முழுமுதற் கடவுளாகப் போற்றப்படும் இவருக்கு பல திருநாமங்கள் உண்டு. மேலும் இவர் வணங்குவதற்கு மிகவும் எளியவர். களிமண், மஞ்சள், சந்தனம் என எதில் வேண்டுமானாலும் பிள்ளையாரைப் பிடித்து வைத்து வணங்கலாம். தலையில் குட்டும், தோப்புக்கரணமும் இவரை வணங்கப் போதுமானது. நாம் மேற்கொள்ளும் காரியங்களில் தடைகளை விலக்க வல்லவர் என்பதால் இவருக்கு விநாயகர் என்ற பெயர் உண்டு.
நாம் தொடட்ட காரியங்கள் துலங்கவும் அதில் வெற்றி பெறவும் விநாயகர் வழிபாட்டை எப்படி மேற்கொள்ளலாம். எந்த மாதிரியான வழிபாடு என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம் வாருங்கள்.
நாம் முதலிலேயே கூறியது போல விநாயகர் வணங்குவதற்கு எளியவர். எனவே நாம் மேற்கொள்ள வேண்டிய வழிபாடும் எளிமையாகவே இருக்கும். முதலில் நீங்கள் மேற்கொண்டு வெற்றி பெற வேண்டிய காரியம் என்ன என்பதை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். ஏதாவது ஒரு வேண்டுதலை வைத்துக் கொள்ளுங்கள்.
இதற்கு உங்கள் வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு உங்களின் பிறந்த கிழமை அன்று செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது இரண்டு நெய் தீபங்களை எடுத்துச் சென்று பிள்ளையாருக்கு ஏற்றுங்கள். அருகம்புல் மாலையை வாங்கிச் சென்று பிள்ளையாருக்கு சார்த்துங்கள். ஒவ்வொரு வாரமும் உங்கள் பிறந்த கிழமை அன்று சென்று உங்கள் வேண்டுதலை வைத்து மேலே சொன்ன முறையில் வணங்கிவிட்டு வாருங்கள். நீங்கள் நம்பிக்கையுடன் இந்த வழிபாட்டை மேற்கொள்வதன் மூலம் உங்கள் காரியம் வெகு சீக்கிரத்திலேயே நிறைவேறிவிடும். நீங்கள் தொட்ட காரியம் துலங்கும். அதில் வெற்றியும் கிட்டும். உங்கள் காரியம் வெற்றிகரமாக நிறைவேறியவுடன் ஒரு தேங்காயை வாங்கிச் சென்று பிள்ளையாரை ஒன்பது முறை வலம் வந்து அதனை சிதறு தேங்காயாக உடைத்து விடுங்கள். உங்கள் வேண்டுதல் நிறைவேறியதற்கான நன்றிக் கடனை சிதறு தேங்காய் மூலம் செலுத்துங்கள். ஒரு வேண்டுதல் நிறைவேறியவுடன் அடுத்த வேண்டுதலை வையுங்கள்.
மேலே சொன்ன முறையில் பிள்ளையாரை வணங்கி உங்கள் காரியங்களில் வெற்றி பெற எங்களின் வாழ்த்துக்கள்.
