Thirushti | திருஷ்டியைக் கழிக்க சின்னச்சின்ன வழிகள்!
கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். இதனைத் தான் கண்ணேறு அல்லது திருஷ்டி என்று கூறுகிறார்கள். திருஷ்டி என்பது உண்மையா என்றால் ஆம் என்று தான் சொல்ல வேண்டும். ஒருவரின் வெற்றி, சாதனை, அல்லது முன்னேற்றம் கண்டு அதன் காரணமாக பிறர் மனதில் எழும் எண்ணங்கள் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் போது அது திருஷ்டியாக மாறும். உதாரணமாக ஓருவர் நல்ல வீடு கட்டி அதனை மற்றவர்கள் எவ்வளவு நல்லா வீடு கட்டி இருக்கிறான் பார் என்றோ அல்லது ஒருவர் நல்ல புடவை கட்டிக் கொண்டு இருக்கும் போது இந்தப் புடவை எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பிறர் கூறும் போது அதன் தாக்கம் திருஷ்டியாக மாறுகிறது. அது போல ஒருவர் எதிர்பார்த்த விஷயம் மற்ற ஒருவருக்கு எளிதாக கிடைக்கும் போது ஏற்படும் ஆற்றாமை உணர்வு கண் திருஷ்டியாக மாறுகிறது.

திருஷ்டி இருக்கிறதா என்பதை நாம் எவ்வாறு அறிந்து கொள்வது? கண் திருஷ்டி தாக்கினால் உடல் வலி, உடல் நலம் குன்றுதல், வீட்டில் தொடர்ந்து சண்டை சச்சரவுகள், அடுத்தடுத்து பிரச்சினைகள், சிக்கல்கல்கள், தொடர் தோல்விகள் என ஏதாவது ஒரு வகையில் வெளிப்படும்.கணவன் மனைவி இடையே காரணமே இல்லாத பிரச்சினைகள், சந்தேகங்கள், பிரிவினைகள் உற்றார் உறவினர்களுடன் பகை ஏற்படுதல், வீட்டில் தொடர் மருத்துவச் செலவுகள், தூக்கமின்மை, கெட்ட கனவுகள், தனிமையில் இருத்தல் இது போன்ற சில அறிகுறிகள் மூலம் திருஷ்டி தாக்கி இருப்பதை நாம் அறியலாம்.
இதனை எவ்வாறு எளிய முறையில் தடுப்பது அல்லது போக்குவது என்பதைப் பற்றிக் காண்போம் வாருங்கள்.
திருஷ்டி ஏற்படாமல் தடுக்கும் வழி முறைகள்:
- முதலில் வீட்டில் நேர்மறை அதிர்வுகள் தொடர்ந்து இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். ஓம் என்னும் மந்திரம், கடவுள் பாட்டு, நல்ல இசை தொடர்ந்து ஒலிக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
 - இரவும் பகலும் சாம்பிராணி தூபம் போட வேண்டும்.
 - எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி குங்குமத்தில் தோய்த்து அதனை வீட்டு வாசல் நிலைப்படியில் இரண்டு புறமும் வைத்தல். தினமும் வைக்க இயலாதவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் வைக்கலாம். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை சுற்றி தெருவில் வீச வேண்டும்.
 - வீட்டில் மீன் தொட்டி அமைத்தல்
 - வீட்டு வாசல் எதிரில் கண் திருஷ்டி கணபதி படத்தை வைத்தல்
 - பொதுவாக தாவரங்கள் எதிர்மறை ஆற்றலை தடுக்க வல்லவை. எனவே வாசலில் கற்றாழை, சப்பாத்திக் கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா முதலானவற்றை வளர்க்கலாம்.
 - ஆகாச கருடன் கிழங்கில் மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்புக் கம்பளிக் கயிற்றில் கட்டி, வீட்டு வாசலின் மேற்பகுதியில் தொங்க விடலாம்.
 - படிகாரத்தை வாங்கி கறுப்புக் கயிற்றில் கட்டி வீட்டு வாசலில் தொங்க விடலாம்.
 
திருஷ்டியை போக்கும் வழி முறைகள்:
திருஷ்டியை போக்க திருஷ்டி சுற்றி போடுங்கள் என்பார்கள்
- சூடம் என்னும் கற்பூரம் ஏற்றி சுற்றிப் போடலாம்
 - தண்ணீரில் மஞ்சள் சுண்ணாம்பு கலந்து ஆரத்தி எடுத்து சுற்றிப் போடலாம்
 - உப்பு மிளகாய் கடுகு மூன்றையும் கலந்து சுற்றிப் போட்டு தெருவில் வீசி விடலாம்.
 - உப்பை வைத்து திருஷ்டி கழித்து ஓடும் நீரில் கரைத்து விடலாம்.
 
அமாவாசை அன்று எலுமிச்சம் பழம், தேங்காய், பூசணிக்காய் சுற்றிப் போடலாம்.






      
      




