Navaratri - Experience 333 sacred Navaratri ceremonies invoking Goddess power for success & protection Join Now
AstroVed Menu
AstroVed
search
search

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோவில், சுவாமிமலை

September 4, 2023 | Total Views : 798
Zoom In Zoom Out Print

மூலவர் சுவாமிநாதர், சுப்பையா

அம்மன்/தாயார் வள்ளி, தெய்வானை

தல விருட்சம் நெல்லிமரம்

தீர்த்தம் வஜ்ர தீர்த்தம், குமாரதாரை, சரவண தீர்த்தம், நேத்திர குளம், பிரம்ம தீர்த்தம்

புராண பெயர் திருவேரகம்

ஊர் சுவாமிமலை

மாவட்டம் தஞ்சாவூர்

கோவில் வரலாறு:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சுவாமிமலையில் உள்ள ஸ்வாமிநாதசுவாமி கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகும். இக்கோவிலின் மற்றொரு பெயர் திருவேரகம் ஆகும்.

முருகப்பெருமான் இக்கோவிலில் தகப்பன்சுவாமி எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது.சிவபெருமானுக்கு 'ஓம்' என்பதன் பொருளை விளக்கியதால் முருகனுக்கு 'சுவாமிநாத சுவாமி' என்ற பெயர் ஏற்பட்டது.இறைவன் இங்கு சுவாமிநாதனாக இருப்பதால் சுவாமிமலை என்ற பெயர் நிலைபெற்றுவிட்டது. இங்கு சிவன் சுந்தரேசுவரர் தாயார் மீனாட்சி என பெயரில் உள்ளதால், இக்கோவில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் என அழைக்கப்படுகிறது.  அறுபது படிகள் சுவாமிநாதசுவாமி கோயிலுக்குச் செல்கின்றன, அவை பண்டைய தமிழ் நாட்காட்டியின் அறுபது மாதங்களைக் குறிக்கின்றன. மலையின் அடிவாரத்தில் சிவன் மற்றும் பார்வதி மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு கோயில் உள்ளது, அவர் இங்கு சுந்தரேஸ்வரர் என்றும் மீனாட்சி என்றும் அழைக்கப்படுகிறார். சுவாமிநாதசுவாமியாக முருகன் தங்க கவசம் மற்றும் கிரீடத்துடன் அலங்கரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

பிரணவ மந்திரம்

மந்திரங்களுக்கு எல்லாம் மூலாதாரமாக, முதன்மையானதாக, உயிராக இருப்பது 'ஓம் எனும் மந்திரமாகும். இந்த மந்திரத்துக்கு 'பிரணவ மந்திரம்' என்ற பெயரும் உண்டு. ஓம் எனும் மந்திரம் பிரபஞ்ச மந்திரமாகவும் திகழ்கிறது. ஓம் என்பது அ, உ, ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது.

பிரம்மா மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் படைப்புக் கடவுள் ஆவார்.படைப்புத் தொழில் அவருடையது. எனவே அனைத்து உயிர்களையும் படைக்கும் தானே முதல்வன் என்ற ஆணவம் அவருக்கு ஏற்பட்டது. அதனை அடக்க மனம் கொண்டார் முருகப்பெருமான்.

பிரம்மாவின் ஆணவத்தை அழித்தல்:

ஒரு சமயம் கைலாயத்தில் சிவனை தரிசிக்க பிரம்மன் வந்தார். அப்போது பிரம்மன் முருகனை பாலன்தானே என அலட்சியமாக நினைத்தார். முருகன் பிரம்மனை அழைத்து பிரணவத்தின் பொருளையும், அதன் தத்துவத்தையும் கூறுமாறு கேட்டார். பிரம்மனால் பதிலளிக்க முடியவில்லை. அதனால் கோபம் கொண்ட முருகன், பிரம்மன் தலையில் குட்டி சிறையில் அடைத்தார். இதனால் படைப்பு தொழில் பாதிப்படைந்தது.

சிவன் பிரணவப் பொருள் மறந்த கதை:  

ஒரு முறை பிருகு முனிவர் ஈசனை வேண்டி தனது ஜீவன் முக்தி அடைய கடுந்தவம் புரிந்து வந்தார். தனது தவத்திற்கு இடையூறு ஏற்படாது இருக்க தன் தவத்தை தடுப்பவர்கள் பிரம்மஞானத்தை மறக்க கடவது என சாபமிட்டு தவம் செய்யலானார். அவருடைய தவாக்னி தேவர்களை பீடிக்க அவர்கள் மகாவிஷ்ணுவுடன் பரமேஸ்வரனை அணுகி பிரார்த்திக்க சிவபெருமான் தன் திருக்கரத்தை முனிவரின் சிரசில் வைத்து அவருடைய தவாக்னியை அடக்குகிறார்.பிருகு முனிவர் பிரக்ஞை அடைந்து கண்விழிக்கிறார். சிவபெருமானைக் கண்டு வணங்கி மகிழ்கிறார். சிவனும் உன் தவத்தை மெச்சி உன் விருப்பத்தை அருள்கிறேன் என ஆசீர்வதித்தார். பிருகு முனிவர் சிவன் தன் தவத்தை கலைத்ததால் தன்னுடைய சாபம் சிவனை பாதிக்குமே என வருந்தி சிவனிடம் மன்னித்தருளும்படி கேட்கிறார். சிவனும் உன் வாக்கிற்கு பழுது வராது. நான் உன் சாபத்தை மகிழ்வுடன் ஏற்கிறேன் என்று கூறுகிறார். ஆத்மாவை புத்திர நாமஸி என்கிறது வேதவாக்கு. அதன்படி தன் பிள்ளையான சுவாமிநாதனிடம் ரிஷியின் வாக்கை உண்மையாக்க சிவன் பிரம்மோபதேசம் செய்து கொள்கிறார். இதுவே சிவனுக்கு பிரணவப் பொருள் மறக்க காரணமாகும்.

தத்துவ உபதேசம் :

படைப்புத் தொழில் பாதிப்பதை அறிந்து தேவர்கள் அனைவரும் சிவனிடம் சென்று முறையிட்டனர்.  சிவன் முருகனிடம் பிரம்மனை விடுதலை செய்யும் படிக்கூறினார். “பிரணவத்தின் பொருள் கூடத்தெரியாத பிரம்மனுக்கு படைப்பு தொழில் எதற்கு?” என எதிர் கேள்வி கேட்டார் முருகப்பெருமான்.  பிரம்மனுக்கும் தெரியாத பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா? என சிவன் முருகனிடம் கேட்க, எனக்குத் தெரியும் என்றார் முருகப்பெருமான். அப்படியானால் சொல்! சிவன் கேட்க, தாம் குருவாகவும், தாங்கள் சிஷ்யனாகவும் இருந்து உபதேசம் பெற வேண்டும் (தத்துவ உபதேசம்) என கூறினார். அதன்பின்னர் சிவபெருமானும் முருகனும் தனியாக அருகில் உள்ள மண்குன்று (மலை) பகுதியில் ஓம் எனும் பிரணவ பொருள் உபதேசம் நிகழ்த்திய தலமானதால் சுவாமிக்கே நாதனாக இருந்தமையால் இப்பகுதி சுவாமிமலை என அழைக்கப்பெறுகிறது.

தலச் சிறப்பு

சுவாமி நாத சுவாமி நின்றிருக்கும் பீடம் சிவலிங்க ஆவுடையாகவும் அதன் மேல் எழுந்தருளியிருக்கும் சுவாமி நாத மூர்த்தி பான லிங்கமாகவும் காட்சி தருவதை நாம் காணலாம். இதில் இருந்து சிவனும் முருகனும் வேறு வேறு அல்லர் என்பது புரியும். மூலவருக்கு எதிரில் மயிலுக்கு பதிலாக யானை உள்ளது ஹரிகேசன் என்ற அரக்கனை சுவாமி  நாத சுவாமியை வணங்கி வென்றதால் தேவேந்திரன் ஐராவத யானையை வழங்கியதாக புராணங்கள் வாயிலாக அறிய முடிகிறது.

படிப்பூஜை :

தமிழ் வருடத்தேவர்கள் அறுபது பேரும் இத்தலத்தில் முருகனை தரிசிக்க வரும் பக்தர்கள் தங்கள் முதுகு மேல் ஏறி தரிசிக்க வேண்டிய பாக்கியம் அருள முருகனிடம் இத்தலத்தில் அறுபது படிகளாக அமையப்பெற்றனர். இந்தப் படிகள் புனிதமானவையாக கருதப்படுகின்றன. ஆங்கிலப் புத்தாண்டின் போது இந்தப் படிகளுக்கு பூஜை செய்வார்கள். இது படிபூஜை என்று அழைக்கப்பட்டது.

தல விருட்சம்:

பார்வதி தேவியின் சாபம் பெற்ற பூமா தேவி இத்தலம் வந்து சுவாமி நாத சுவாமியை வணங்கி சாபம் நீங்கப் பெற்றாள்.  அதன் பிறகும் இவ்விடத்தை விட்டுச் செல்ல மனமில்லாமல் காவிரியுடன் இணைந்து இத்தலத்தில் இருக்க அருள் வேண்டினார். முருகப்பெருமானும் தனது தலத்தில் விருட்சமாக இருக்க அருள்பாலித்தார். பூமாதேவி இந்த தலத்தில்   தலவிருட்சமாக (நெல்லி மரம்) பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

தீர்த்தம்

காவிரி சுவாமிநாதனை வழிப்பட்டு இத்தலத்திற்கு வரும் பக்தர்கள் தனது தீர்த்தத்தில் நீராடி தரிசிக்க வேண்டும் என பிரார்த்தித்து குமார தாரை என்கிற பெயரில் இவ்வூரில் தொடர்ந்து இருக்க அருள் பெற்றுள்ளார். காவிரி (குமாரதாரை), நேத்ர புஷ்கரணி, சரவண பொய்கை, பிரம்மட்டான் குளம், வஜ்ர தீர்த்தம் ஆகிய பஞ்ச தீர்த்தங்கள் திருக்கோவில் பகுதியில் அமைந்துள்ளது.

திருவிழா:

திருக்கார்த்திகை திருவிழா – 10 நாட்கள், இத் திருவிழாவே இத்தலத்தின் மிகப் பெரிய திருவிழா ஆகும்.  சித்திரை – பிரம்மோற்சவம் – 10 நாட்கள், வைகாசி – வைகாசி விசாகப்பெருவிழா, ஆவணி – பவித்ரோற்சவம் – 10 நாட்கள், புரட்டாசி – நவராத்திரி பெருவிழா – 10 நாட்கள், ஐப்பசி – கந்தசஷ்டி பெருவிழா – 10 நாட்கள், மார்கழி – திருவாதிரைத் திருநாள் – 10 நாட்கள், தை – பூசப்பெருவிழா, பங்குனி – வள்ளி திருக்கல்யாண விழா, இவற்றுள் சித்திரை, கார்த்திகை, தை மாதங்களில் நடைபெறும் விழாக்கள் கொடி ஏற்றத்துடன் நடைபெறும் பெருவிழாக்கள் ஆகும். ஒவ்வோர் ஆண்டும் ஆங்கில வருடப்பிறப்பு நாளில் திருப்படி திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது இவை தவிர கிருத்திகை, மாதப்பிறப்பு, அமாவாசை, பௌர்ணமி, சஷ்டி, கார்த்திகை, விசாகம் அன்றும் தமிழ், ஆங்கில புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேச தினங்களிலும் வாரத்தின் செவ்வாய்க் கிழமைகளில் பக்தர்கள் வெள்ளமென திரள்வது வழக்கம்.

பிரார்த்தனை:

இந்து திருமண வரம் மற்றும் குழந்தை வரம், வேண்டி பக்தர்கள் வேண்டுகிறார்கள். குடும்ப ஐஸ்வர்யம், தீர்க்க ஆயுள், கல்வி, கேள்விகளில் சிறந்த ஞானம், உயர் படிப்பு, வேலை வாய்ப்பு, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காக பக்தர்கள் பெருமளவில் வருகை தருகின்றனர். சுவாமி நாதனை வழிபட்டால் நமக்கு வரும் இடையூறுகள், நோய்கள், பிராணிகள், பூதம், தீ, நீர், வெள்ளம், செய்த பாவம் ஆகியவற்றால் விளையும் தீமைகள் விலகுகிறது.

நேர்த்திக்கடன்:

மொட்டை போடுதல், சுவாமிக்கு சந்தனகாப்பு, பஞ்சாமிர்த அபிசேகம், பால் அபிசேகம், அன்னதானம் வழங்குவது, நெய் விளக்கு ஏற்றுதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல், அபிசேக ஆராதனைகள் ஆகியவை இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்களாக உள்ளது. சத்ரு தொல்லை இருப்பவர்கள் த்ரிஷதி அர்ச்சனை செய்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்வதும் நேர்த்திகடனாக இருக்கிறது. வசதி படைத்தவர்கள் கோவில் திருப்பணிக்காக பொருள் தருவதும் வழக்கமாக உள்ளது.

ஆலயம் திறந்திருக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

banner

Leave a Reply

Submit Comment