AstroVed Menu
AstroVed
search
search

பூஜை அறையில் சுவாமி படங்களை இப்படி மட்டும் வைக்காதீர்கள்! குடும்பத்தில் ஒற்றுமை தடைப்படும் தெரியுமா?

dateMay 12, 2023

பொதுவாக வீடு கட்டும் போது நாம் பூஜை அறையையும் சேர்த்து கட்ட வேண்டும். வசதி இல்லாதவர்கள் தாங்கள் வசிக்கும் வீட்டிலே தனி இடம் ஒதுக்கி அதனை பூஜை இடமாக மாற்றிக் கொள்ளலாம். அல்லது கடைகளில் விற்கும் பூஜை அலமாரிகளை வாங்கி அதிலும் சாமி  படங்களை வைக்கலாம். சாமி படங்களை வைப்பதற்கும் சில விதி முறைகள் மற்றும் நியதிகள் உண்டு.

பூஜை அறை, சாமி படங்களை வைக்கும் அலமாரி, அல்லது பூஜைக்கென ஒதுக்கும் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். தூசு, ஒட்டடை போன்றவை இருக்கக் கூடாது. அந்த இடம் நறுமணம் மிகுந்ததாக  இருக்க வேண்டும்.  

எந்தெந்த படங்களை வைக்கலாம்.

பிள்ளையார், லக்ஷ்மி, சரஸ்வதி கட்டாயம் வைக்க வேண்டும். பிள்ளையார் நாம் மேற்கொள்ளும் காரியங்களில் தடைகளை நீக்குபவர். நமக்கு வேண்டிய செல்வத்தை அருள்பவள் லக்ஷ்மி. அறிவு, ஞானம், கல்வி  வித்தை போன்றவற்றை தருபவள் சரஸ்வதி தேவி. திருமகளுடன் கூடிய பெருமாள் படம் வைப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமை பெருகும்.ஆஞ்சநேயர் படம் வைத்து வழிபடுவதன் மூலம் வைராக்கியம், வலிமை கிட்டும். தெய்வ படத்தை வைத்து தினமும் பூஜை செய்வதன் மூலம் குடும்ப ஒற்றுமை கூடும். குல தெய்வ வழிபாட்டை மறந்தால் குடும்ப ஒற்றுமை தடைபடும். வேல் கொண்டு வினை நீக்கும் முருகப் பெருமான் படத்தையும் வைத்து வழிபடலாம். அம்பிகை உபாசகர்கள் அம்பிகையின் சாந்த வடிவ படங்களை வைத்து வழிபடலாம். சிவபெருமானை வழிபடுபவர்கள் லிங்கத்தை வைத்துக் கொள்ளலாம். நந்தியுடன் கூடிய லிங்கம் வைத்தும் வழிபடலாம்.

நாம் ஆலயங்களில் இருந்து வாங்கி வரும் படங்களை அப்படியே வைத்து விடக் கூடாது அந்தப் படங்களை அந்த தெய்வத்திற்கேற்ற அல்லது அந்த தெய்வத்திற்கு உகந்த முறையில் பூஜைகளை செய்ய வேண்டும். மந்திரங்களை ஜெபிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வருவதன் மூலம் படங்களுக்கு சக்தி ஏற்றம் செய்யலாம்.  படங்களுக்கு உயிரோட்டம் அளிக்கலாம் அதன் மூலம் இறை ஆற்றல் பெருகும்.

எந்தெந்த படங்களை வைக்கக் கூடாது?

காளி, துர்கை, மகிஷாசுர மர்தினி, பிரத்யங்கிரா, நரசிம்ம மூர்த்தி போன்ற உக்ர தெய்வங்களின் படங்களை வைக்கக் கூடாது என்பார்கள். இந்த தெய்வங்கள் கைகளின் ஆயுதங்களை வைத்திருக்கும் என்பதேஇதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் உரிய முறையில் வழிபாடுகளை மேற்கொள்ளும் போது உக்ர தெய்வங்கள் என்றாலும் பக்தர்களை காக்கும் கருணை மிக்கவர்கள் என்பதால் இவற்றின் படங்களை நாம் வீட்டில் வைக்கலாம். நவகிரக படங்களை வீட்டில் வைத்து வழிபடுதல் கூடாது. காரணம் இவைகள் தெய்வத்தின் கீழ் ஆதிக்கத்தில் இருப்பவை. எனவே இவற்றை ஆலயங்களில் தான் வழிபட வேண்டும். தெய்வப் படங்களுடன் பூஜை அறையில் முன்னோர்களின் படங்களை வைத்து வழிபடுதல் கூடாது.  

சிலர் தங்கள் வீடுகளில் தங்களின் முன்னோர்கள் பயன்படுத்திய படங்களை வைத்திருப்பார்கள். அது மிகவும் பழமையானதாக இருக்கும். அம்மாதிரி சாமி படங்கள் நன்றாக இருந்தால் வைத்துக் கொள்ளலாம். ஆனால் சிதிலமடைந்திருந்தாலோ, உடைந்திருந்தாலோ விரிசல்கள் இருந்தாலோ அவற்றை வைத்திருக்கக் கூடாது என்பது நியதி.

சிவன் படத்தை தனியாக வைத்து வழிபடுதல் கூடாது. பார்வதியுடன் இணைந்து இருக்கும் சிவன் படத்தை வைக்க வேண்டும். இதன் மூலம் தம்பதிகள் இடையே ஒற்றுமை கூடும். அதே போல லக்ஷ்மி தேவியுடன் கூடிய பெருமாள் படத்தை வைப்பதன் மூலம் குடும்ப ஒற்றுமை கூடும்.

சாமி படங்களை வைக்கும் முறை:

ஒரு சாமி  படத்திற்கும் மற்றொரு  படத்திற்கும் இடையில் சற்று இடைவெளி இருக்க வேண்டும். இடைவெளி இல்லாமல் படங்களை வைக்கக் கூடாது. அதே போல சாமி படங்களை ஒன்றின் மீது ஒன்று வைக்கக் கூடாது. சாமி படங்களை துடைத்து மஞ்சள் குங்குமம் இட்டு சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் நேர்மறை ஆற்றல் பெருகும்.

விக்கிரகங்கள் :

வீட்டில் வைக்கப்படும் விக்கிரகங்கள் விரல் அளவிற்குத் தான் இருக்க வேண்டும். அவற்றையும் சுத்தமாக பளிச்சென்று  வைத்திருக்க வேண்டும். தினமும் விக்கிரகங்களுக்கு அபிஷேக ஆராதனை மற்றும் பூஜைகளை நடத்தி நிவேதனம் செய்ய வேண்டும். வாரம் ஒரு முறை அல்லது பதினைந்து நாளுக்கு ஒரு முறையாவது அவற்றை புளி, எலுமிச்சம்பழம் கொண்டு தேய்த்து சுத்தமான நீர் கொண்டு அவற்றை துலக்கி வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் நேர்மறை ஆற்றல் பெருகும். இது  குடும்பத்தில் நிம்மதி மற்றும் ஒற்றுமையை கொண்டு சேர்க்கும். அவற்றை கவனிக்காமல் விட்டால் குடும்ப அமைதி மற்றும் ஒற்றுமை கெடும்   


banner

Leave a Reply