சங்கல்பத்தின் முக்கியத்துவம்

நமது மனம் என்பது அலைபாயும் தன்மை கொண்டது. அதனால் தீர்மானமாக செயல்பட இயலாது. மேலும் மனதை காற்றுக்கு சமமாக பகவத் கீதை கூறுகிறது. காற்று ஓரிடத்தில் நிற்கும் தன்மை அற்றது அது போல மனமும் ஓரிடத்தில் ஒரே எண்ணத்தில் நிலைத்து நிற்கும் தன்மை அற்றது. அதனை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான விஷயம். எனவே அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்த வேண்டியது அவசியம் ஆகிறது. மேலும் மனம் என்பது மதம் பிடித்த யானை போன்றது என்று கூடக் கூறலாம். எனவே தான் மனதை ஒரு சங்கல்பத்தால் அல்லது நோக்கத்தால் நாம் அடக்கி அதனை வழி நடத்த வேண்டியது அவசியம் ஆகும்.
சங்கல்பம் என்பது ஒரு நோக்கம் அல்லது குறிக்கோளை அடைய நமக்கு நாமே எடுத்துக் கொள்ளும் உறுதி மொழி ஆகும். இந்த உறுதிமொழி கால தேச வர்த்தமானத்தை உள்ளடக்கியதாக இருக்கும். எனவே எந்தவொரு காரியம் அல்லது கிரியை செய்வதற்கு முன்னும் நாம் தகுந்த ஆச்சாரியரை வைத்து சங்கல்பம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு சங்கல்பத்தை எடுத்த பிறகு நமது மனத்தை அதில் நிலை நிறுத்துவது நமக்கு எளிதாகிறது. நான் இன்ன செயலை இந்த நேரத்தில் இந்த இடத்தில் இந்த நோக்கம் கருதி செய்யவிருக்கிறேன் என்று நாம் எடுக்கும் சங்கல்பம் அந்த செயலை நாம் செய்ய நமக்கு ஒரு உத்வேகத்தை அளிக்கிறது. நமது சிந்தனையில் ஒரு தெளிவு பிறக்கிறது.
ஒரு சங்கல்பம் அல்லது உறுதிமொழி எடுத்தபிறகு நம்மால் அந்த செயலை சுறுசுறுப்பாக செய்ய முடிகிறது. அந்த செயல் அல்லது கிரியையை செய்து முடிக்கும் வரை அதற்கு தேவையான வழிவகைகளை நம்மால் சரியாக பின்பற்ற முடிகிறது. அந்த செயல் அல்லது நோக்கம் முடியும் வரை நாம் பிறவற்றை சிந்திப்பது இல்லை. எனவே நமது நோக்கம் நிறைவேறுவது எளிதாக ஆகிறது.
நாம் சில மந்திரங்களை உச்சரிக்கலாம், ஆனால் அவை சங்கல்பத்தோடு ஓதாவிட்டால், அவை எதையும் குறிக்காது. அவை வெறும் சொற்கள். மந்திரங்களில் சங்கல்பத்தைச் சேர்க்கும்போது, சொற்கள் வலிமை மிக்கதாகவும் சக்திவாய்ந்ததாகவும் மாறும். எல்லா மந்திரங்களும் பெயர்களில் ஒன்றிணைகின்றன, எல்லா செயல்களும் மந்திரங்களில் ஒன்றிணைகின்றன. இதனால்தான் மனத்தை விட சங்கல்பம் சிறப்பு வாய்ந்தது என்று சனத் குமார் விளக்குகிறார்.
சங்கல்பத்தின் போது பஞ்சாங்கம் வாசிக்கிறோம். அதன் பயன்கள் -
1) திதி- திதியைச் சொன்னால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.
2)வாரம்-வாரத்தைச் சொன்னால் ஆயுள் வளரும்.
3)நக்ஷத்திரம்-நக்ஷத்திரத்தைச் சொன்னால் பாபம் நீங்கும்.
4)யோகம்-யோகத்தைச் சொன்னால் ரோகம் (வியாதி) நீங்கும்.
5)கரணம்-கரணத்தைச் சொன்னால் காரியம் சித்தியாகும்.
சங்கல்பங்களைப் பயிற்சி செய்வது எப்படி
∙ உங்களுடைய குறிப்பிட்ட தேவைக்கான ஒரு சங்கல்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.
∙ நிமிர்ந்த முதுகுத்தண்டுடன் அமருங்கள்.
∙ கண்களை மூடிக்கொண்டு மெதுவாக உங்களுடைய பார்வையை புருவமத்தியில் குவித்து ஒருமுகப்படுங்கள்.
∙ அதன்பின், “மூன்று முறை ஓர் ஆழ்ந்த மூச்சை எடுத்து அதை வெளிவிடுங்கள். உடலைத் தளர்த்தி அதை அசைவற்று வைத்திருங்கள்
∙ பதற்றம், அவநம்பிக்கை, கவலை ஆகியவற்றை வீசி எறியுங்கள்….
∙ முதலில் உரத்து, பின் மென்மையாக மற்றும் இன்னும் மெதுவாக, உங்கள் குரல் முணுமுணுப்பாக ஆகும் வரை சங்கல்பம் முழுவதையும் திரும்பத் திரும்பக் கூறுங்கள்.
∙ அதன்பின் படிப்படியாக அதை மனத்தில் மட்டுமே, நாக்கையோ அல்லது உதடுகளையோ அசைக்காமல், நீங்கள் ஆழ்ந்த, இடைவிடாத ஒருமுகப்பாட்டை —அதாவது, உணர்வற்ற நிலையை அல்ல, மாறாக, இடையூறற்ற சிந்தனையின் ஓர் ஆழ்ந்த தொடர்ச்சியை—அடைந்திருப்பதாக உணரும் வரை வலியுறுத்திக் கூறுங்கள்.
∙ உங்கள் மனச் சங்கல்பத்தைத் தொடர்ந்து கூறியவாறு, இன்னும் ஆழ்ந்து சென்றால், நீங்கள் அதிகரிக்கும் ஆனந்தம் மற்றும் அமைதியின் உணர்வை அறிவீர்கள்.
