சாய்பாபாவை வழிபட உகந்த நாள்

ஸ்ரீ சாய் சத்சரிதத்தின் படி, சாய்பாபா இந்து கடவுளான தத்தாத்ரேயாவின் அவதாரம் என்று நம்பப்படுகிறது. பக்தர்கள் தங்கள் குடும்பங்களில் பாபாவை கண்கண்ட தெய்வமாக ஏற்று, வழிபடுகின்றனர். உலகெங்கிலும் சாய்பாபாவை போற்றி வணங்குபவர்களும் அவர்களை தங்களின் குருநாதர்களாக ஏற்று அவர்கள் வழிநடப்பவர்களும் இருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட மகான்களின் புகைப்படங்களையோ சிலைகளையோ வீட்டில் வைக்கலாமா என்கிற சந்தேகமே நமக்கு அவசியமில்லை.இவர்களின் படங்களையும் சிலைகளையும் வீட்டில் வைத்து வணங்குவதால் நிறைய நன்மைகளே நடக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. நம் வீட்டில் இன்னும் சாந்நித்தியம் கூடும். நம் எண்ணங்களில் தெளிவையும் இல்லத்தில் அமைதியையும் தந்தருளி, நல்லதிர்வுகளை நம் இல்லத்திலும் உள்ளத்திலும் பெருகும்.
பாபாவின் சத்திய வாக்கு:
* எவன் என்னுடைய திருவடிகளை சரணடைகின்றானோ அவனுடைய அத்தனை எண்ணங்களையும் ஈடேற்றுவேன்.
* என்னை எந்த உருவத்தில் பக்தன் பார்க்க விரும்புகிறானோ அதே உருவத்தில் அவனுக்குக் காட்சி தருவேன்.
* எவன் என்னை அடைக்கலமாக அடைகின்றானோ அவன் பாரத்தை நான் சுமக்கின்றேன்.
* எவன் தன் உடல், மனம், தனம், செய்கைகள் என அனைத்தையும் எனக்கே அர்ப்பணித்து, என்னை தியானம் செய்கின்றானோ, எவன் தன் துன்பங்களை என்னிடம் ஒப்புவிக்கின்றானோ, எவன் சாயி நாமத்தை தினமும் ஜெபிக்கின்றானோ, அவன் பேத, பாவங்களில் இருந்து விடுபட்டு என்னையே அடைகின்றான். அவன் வேறு நான் வேறு அல்லாமல் அவனை உயர்த்துவேன்.
* கலங்காதே! நீ என்னை நோக்கினால் நானும் உன்னை நோக்குவேன்.
* இந்த ஷிர்டி மண்ணை எவன் ஒருவன் பக்தியுடன் மிதிக்கின்றானோ அவனது பாவங்கள் அனைத்தும் அவனை விட்டு நீங்கி விடும்.
ஆன்மீக குரு
சித்தர்கள், மகான்கள், ரிஷிகள், யோகிகள் முதலானோர் நம் பூமியில் வாழ்ந்தவர்கள். இன்றைக்கும் சூட்சுமமாக வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். அதாவது, இறந்தாலும் கூட இறவா நிலையை அடைந்தவர்கள். அதனால்தான் அவர்களை முக்தி அடைந்துவிட்டார்கள் என்கிறோம். இன்றைக்கும் பல ஆலயங்களில் அமைந்திருக்கும் மூலமூர்த்திகளை, இரவு வேளைகளில், சித்தபுருஷர்களும் மகான்களும் சூட்சும வடிவில் வந்து பூஜைகள் செய்து ஆராதித்து வருகின்றனர் என ஸ்தல புராணங்கள் தெரிவிக்கின்றன.சூட்சுமமாக இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர் சாய் பாபா அவர்கள். சாய்பாபா ஆன்மிக உலகில் ஒரு முக்கிய குருவாக கருதப்படுகிறார்.அவரது உபதேசங்கள் மற்றும் வாழ்வு பல்லாயிரம் மக்களை ஆன்மிகத்தில் உயர்த்தியுள்ளன. வியாழக்கிழமை நாம் குருவாக எண்ணும் மகான்களைப் போற்றுவதற்கு உகந்த நாள். சாயிபாபா, ராகவேந்திரர், ராமானுஜர், காஞ்சி பரமாச்சார்யாள் போன்ற மகான்களை ஆராதனை செய்ய உகந்த நாள்.எனவே வியாழக்கிழமை சாய்பாபாவை வழிபடுவது நல்லது என்று நம்பப்படுகிறது. வியாழக்கிழமை ஹிந்து மரபில் குருக்களை வழிபடுவதற்கான நாளாக கருதப்படுகின்றது. சாய்பாபா ஒரு ஆன்மிக குருவாக மதிக்கப்படுவதால், இந்த நாள் அவரை வழிபட ஏற்றது என பக்தர்கள் நம்புகின்றனர்.வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட்டால், எண்ணிய காரியங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை. வியாழக்கிழமையன்று, பக்தர்கள் சாய்பாபாவின் படங்களுக்கு மலர்களை சமர்ப்பித்து, நைவேத்தியம் வைத்து, தீபாராதனை செய்வதுடன், சாய் சத்சரித்ரா போன்ற ஆன்மிக நூல்களை வாசிப்பது வழக்கமாகும். சிலைக்கு அருகில் நறுமணத் தூபக் குச்சிகள் மற்றும் விளக்குகளை ஏற்றி வைத்தும் வழிபடலாம்.
வியாழக்கிழமை சாய்பாபா வழிபாடு:
∙ வியாழக்கிழமை சாய்பாபாவை குருவாக நினைத்து விரதம் இருந்து வழிபடலாம்.
∙ விரதத்தை ஆரம்பிக்க முன்னர் சாய் நாமத்தை மனதார வேண்டிக் கொள்ளலாம்.
∙ விரதத்தின் போது திரவ ஆகாரங்கள் உட்கொள்ளலாம்.
∙ காலையில் சாய்பாபாவின் திரு உருவப் படம் அல்லது விக்ரகத்திற்கு பூஜை செய்யலாம்.
∙ விரதம் இருந்து ஏழை எளியவர்களுக்கு தான தர்மங்களை அளிக்கலாம்.
வியாழக்கிழமை வழிபாடு மற்றும் விரத பலன்
வியாழக்கிழமை தோறும் சாய்பாபாவை குருவாக நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், நீங்கள் எண்ணிய காரியங்கள் அனைத்தும் நடக்கும். தொடர்ந்து ஒன்பது வியாழக்கிழமைகளில் விரதம் இருந்து வந்தால், அனைத்துத் தடைகளும் நீங்கும். வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து சாய்பாபாவை வழிபட்டு வந்தால், நன்மைகள் கிட்டும். விரதம் இருக்கும் போது, 9 வாரங்கள் விரதம் இருப்பதாக மனதில் சங்கல்பம் எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் படி ஒவ்வொரு வியாழன் அன்றும் தவறாமல் விரதம் இருக்க வேண்டும். அன்றைய தினம் சாய்பாபாவின் நாமத்தை உச்சரிக்க வேண்டும். நம் மனதை ஒருங்கிணைத்து சாய் பாபா நாமத்தை ஜெபித்து வந்தால், நினைத்த காரியங்கள் அனைத்தும் நடக்கும். ஆண், பெண், குழந்தைகள் என யார் வேண்டுமானாலும் இந்த விரதத்தைக் கடைபிடிக்கலாம். எந்த செயலுக்காக விரதத்தை தொடங்கினோமோ, அதனை நம் மனதில் நினைத்து, சாய்பாபாவிற்கு விரதம் இருக்க வேண்டும்.
சாய்பாபா விரதம் இருக்கும் முறைகள்
இந்த விரதம் பிரதி வியாழக்கிழமை ஒன்பது வாரங்கள் மேற்கொள்ள வேண்டும். அதிகாலையில் எழுந்து நன்னீரில் நீராட வேண்டும். வழக்கமான பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு மனை, அலல்து ஆசனம் அமைத்து அதன் மீது புதிய மஞ்சள் நிற துணியை விரிக்க வேண்டும். அதன் மீது சாய்பாபா விக்கிரகம் அல்லது திருவுருவப் படத்தை வைக்க வேண்டும். பிறகு சாய்பாபாவிற்கு சந்தானம் குங்குமம் கொண்டு திலகமிட்டு பூஜை செய்ய வேண்டும். மஞ்சள் நிற வாசனை மிக்க மலர்கள் அல்லது மாலையை சாற்ற வேண்டும். பிறகு பழங்கள் அல்லது இனிப்புகள் போன்றவற்றை நெய்வேத்தியம் செய்ய வேண்டும். சாய்பாபாவுக்குப் பூஜை செய்வதற்கான உகந்த நேரம் காலை அல்லது மாலை நேரமாகும். இந்த நேரங்களில் விரதத்தை நாம் மேற்கொள்ளும் போது வெறும் வயிற்றுடன் பூஜை செய்யக் கூடாது. ஏதேனும், பால், பழம், இனிப்புகள் போன்றவற்றை உட்கொண்ட பிறகே பூஜை செய்ய வேண்டும். ஏனெனில் ஒரு நாள் முழுவதும் பட்டினியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. கண்டிப்பாக விரதம் இருக்க முடியாதவர்கள் ஒரு வேளை அசைவம் சேர்க்காத உணவினை உட்கொள்ளலாம்.
முடிந்தால், விரத நாள்களில் சாய்பாபா கோவிலுக்குச் சென்று அங்கு பூஜையில் கலந்து கொள்ளலாம். அப்படி செல்ல முடியாத நிலையில், வீட்டிலேயே சாய்பாபாவுக்கு 9 வாரங்கள் பூஜை செய்யலாம். மேலும், இந்த விரத நாள்களில் சாய்பாபாவை நினைத்து அவரின் விரத கதைகள், சாய் பாமாலை, சாய் பவானி போன்றவற்றை பக்தியுடன் சாய்பாபாவை வேண்டி படிப்பது சிறப்பை அளிக்கும்.வெளியூர் செல்வதானாலும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். மேலும், விரதத்தின் போது பெண்கள் மாதவிலக்கு அல்லது இன்னும் பிற காரணங்களாலோ விரதம் தொடர முடியவில்லை என்றால், அதற்கு அடுத்த வியாழக்கிழமை நாள்களில் இருக்கும் விரதத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம். ஆனால், 9 வியாழக்கிழமைகள் விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.சாய்பாபாவின் மகிமை மற்றும் விரதத்தை அனைவருக்கும் தெரியப்படுத்துவதற்காக, 9 ஆவது வியாழக்கிழமை அன்று சாய் விரத புத்தகங்களை நம் வீட்டில் அருகில் இருப்பவர்கள், உறவினர்கள் என அனைவருக்கும் கொடுக்கலாம். புத்தகத்தைக் கொடுக்கும் போது, அதனை பூஜை அறையில் வைத்து பின் கொடுக்க வேண்டும்.
சாய்பாபாவை குருவாக ஏற்று வழிபடுவதன் மூலம் வாழ்வில் நம்மால் தெளிவான பாதையில் பயணம் செய்ய இயலும். குருவின் அருளால் ஆன்மீக மேம்பாடு கிட்டும். நமது இலக்கை நோக்கி பயணித்து வேண்டியதைப் பெற இயலும்.
