"எவனை உலகத்தார் வெறுப்பதில்லையோ, உலகத்தாரை எவன் வெறுப்பதில்லையோ, மகிழ்ச்சி ,துன்பம், கோபம் ,வெறுப்பு, விருப்பு ஆகிய அனைத்தையும் எவனொருவன் சமமாகக் கருதி ஜீவிக்கிரானோ, அவனே எனக்கினியவன்." - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்,
நாம் நமது அன்றாட வாழ்வில், லௌகீக வாழ்வில், புரண்டு இன்பம் துன்பம் என மாறி மாறி பல வகை உணர்வுகளுக்கு ஆளாகிறோம். எனவே இந்த சம்சாரம் என்னும் கடலைக் கடக்க இறை வழிபாடு ஒன்றே பாதுகாப்பாக இருக்கும் என்பது நாம் யாவரும் மறுக்க முடியாத ஒன்று ஆகும். திருவள்ளுவர் கூட இறை வழிபாட்டை பற்றி பின் வருமாறு கூறியுள்ளார். “பிறவிக் கடல் நீந்துவார் நீந்தார் இறைவனடி சேராதார்” நமது விருப்பப் படியும், பழக்க வழக்கப் படியும், பாரம்பரிய குடும்ப வழக்கப் படியும் நாம் ஒவ்வொருவரும் கடவுளை வணங்குகின்றோம்.
மனிதராகப் பிறந்த நம் ஒவ்வொருவருக்கும் நான்கு வகை கடமைகள் வலியுறுத்தப்பட்டுள்ளது. அவை தர்மம், கர்மம், காமம் மற்றும் மோட்சம் ஆகும். நமக்கு வரையறுக்கப்பட்ட நெறிமுறைப்படி வாழ்வது தர்மம் ஆகும். நமது கடமைகளை தவறாமல் கடைபிடிப்பது கர்மம் ஆகும். இல்லற வாழ்வில் ஆண் பெண் இணைந்து வாழ்வு இல்லற தரமத்தை கடைபிடித்து குலம் பெருக்கி கடமை ஆற்றுவது காமம் ஆகும். பொருள் பற்று நீங்கி இறைவனை சரணடைவது முக்தி எனப்படும் மோட்சம் ஆகும். இந்த முக்தி நிலை நாம் அடைய நமது முன்னோர்கள் பல சிறந்த வழிபாட்டு முறைகளை கடைபிடித்து வந்துள்ளனர்.
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகை சிறப்பு இருக்கின்றது. புரட்டாசி என்றாலே புனிதமான மாதம் ஆகும். கன்னி ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் புரட்டாசி மாதம் என்று அழைக்கப்படுகின்றது. கன்னி ராசிக்கு அதிபதியாக நவகிரகங்களின் அதிபதியான புதன் விளங்குகிறார். அந்த புத பகவானின் அதிபதியாக ஸ்ரீ மகா விஷ்ணு விளங்குகிறார். எனவே புரட்டாசி மாதம் விஷ்ணுவை வணங்குவதற்கு உரிய அல்லது ஏற்ற மாதம் ஆகும்.
நமது வாழ்வில் பற்று நீங்கி இறைவனை வணங்கி முக்தி அடைய இறை வழிபாடு மிகவும் அவசியம். கர்ம காரகன் எனப்படும் சனி பகவான் நமது கர்மாவிற்கு ஏற்ப பலாபலன்களை அளிக்கிறார். எனவே பகவான் விஷ்ணுவிற்கு உகந்த நாளான சனிக்கிழமை அன்று சனி பகவானை வணங்குவதன் மூலம் நமது தீவினைகள் யாவும் அகலுகின்றது. மேலும் நமது வாழ்வில் சனி பகவானால் ஏற்படும் தோஷத்தை குறைக்கின்றது.
வாழ்வில் இருள் நீங்கி ஒளிவீச மனதில் தூய்மையை உருவாக்கி இறைவன் நாமத்தை ஜெபம் செய்து தான தருமங்கள் போன்ற பல புண்ணிய காரியங்களை மேற்கொள்ள புரட்டாசி என்னும் புண்ணிய மாதத்தினை நமது முன்னோர்கள் தேர்ந்த்டுத்து உள்ளனர். அவர்கள் வழி நடந்து நாமும் விஷ்ணு பகவானை வழிபாட்டு வாழ்வில் வளம் பல பெறுவோம்.

Leave a Reply