பிரச்னம் ஜோதிடம் மூலம் துல்லியமாக பலன் கூறலாம்
பிரச்னம் மூலம் துல்லியமாக பலன் கூறலாம்
பிரச்னம் என்றால் கேள்வி என்று பொருள். ஒருவர் ஜோதிடரிடம் கேள்வி கேட்கும் பொழுது அது பிரச்னமாக மாறுகிறது. ஒருவர் கேள்வி கேட்கும் நேரத்திற்கு சாதகம் கணித்து, சாதகர் கேட்டவை சாதகமாகுமா பாதகமாகுமா என்று கூறும் முறையே பிரச்ன ஜோதிடம் ஆகும்.
ஜாதகமும் பிரச்னமும்:
ஒருவர் பிறந்த நேரத்தில் கிரகங்களின் நிலையைக் கொண்டு கணிக்கப்படுவது ஜாதகம் ஆகும். அது போல ஒருவர் ஒரு கேள்வி கேட்கும் நேரத்தை பிறக்கும் நேரமாகக் கொண்டு அப்போதைய நேரத்தில் கோள்களின் நிலைகளை ஆராய்ந்து பலன்களைக் கூறுவதே பிரச்னமுறை ஆகும்.

பல்வேறு வகைப் பிரச்னங்கள்:
சோழிப் பிரச்னம், தாம்பூலப் பிரச்னம், நாரிகேளப் பிரச்னம், சாமக்கோள் பிரச்னம், எண் பிரச்னம், சகுனப் பிரச்னம், கடிகாரப் ப்ரச்னம் போன்ற பல்வேறு வகைப் பிரச்னங்கள் உள்ளன.
பிரச்னங்கள் பல விஷயங்களுக்காக பார்க்கப்படுகிறது:
விவாகப் ப்ரச்னம் – திருமணம் நிமித்த பலன்கள்
சந்தானப் ப்ரச்னம் – மகப்பேறு நிமித்த பலன்கள்
ரோகப் ப்ரச்னம் – நோய்கள் நிமித்தப் பலன்கள்
ஆயுள் ப்ரச்னம் – ஆயுள் நிமித்தப் பலன்கள்
மரணப் ப்ரச்னம் – இறப்பு தொடர்பான பலன்கள்
ஸ்வப்னப் ப்ரச்னம் – கனவு தொடர்பான பலன்கள்
யாத்ரப் பிரச்னம் – பயணங்கள் தொடர்பான பலன்கள்
யுத்தப் பிரச்னம் – போரில் வெற்றி தோல்வி தொடர்பான பலன்கள்
சாந்திப் பிரச்னம் – சமாதானம் தொடர்பான ப்ரச்னம்
வர்ஷப் பிரச்னம் – மழை தொடர்பான ப்ரச்னம்
கூபப் பிரச்னம் – கிணறு தொடர்பான ப்ரச்னம்
தனப் பிரச்னம் – பணம் சம்பந்தமான பிரச்னம்
நஷ்டப் பிரச்னம் – காணாமல் போனவை பற்றிய ப்ரச்னம்
ப்ரேஷ்டிதப் பிரச்னம் – வெளிநாடு தொடர்பான பிரச்னம்
ப்ரச்னத்தில் நிமித்தங்கள்:
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிகழும் நிகழ்ச்சி, காணப்படும் காட்சி, கேட்கப்படும் சப்தம், சுற்றுச் சூழ்நிலை மாற்றங்கள் இவற்றின் அடிப்படையில் நிகழவிருக்கும் பலன்களை எடுத்துரைத்தல் நிமித்தம் எனப்படும். நிமித்தம் சகுனம் என்பவை வெவ்வேறு வார்த்தைகள் என்றாலும், இவ்விரண்டு சொற்களும் கிட்டத்தட்ட ஒரே பொருளையே குறிக்கும்.
ஒரு குறிப்பிட்ட காரியம் நடக்குமா? நடக்காதா? என்பதை நிமித்தங்களைக் கொண்டு எளிதில் நிர்ணயிக்கலாம். நிமித்தங்கள் தோன்றும் சமய சந்தர்ப்பங்களைப் பொறுத்து அவற்றைப் பல பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
சிந்தனைக் கால நிமித்தங்கள்
சம்பாஷனைக் கால நிமித்தங்கள்
கர்ம கால நிமித்தங்கள்
யாத்திரை கால நிமித்தங்கள்
பிரச்ன கால் நிமித்தங்கள்
உதாரணமாக விவாஹ ப்ரச்னத்தில் நிமித்த பலன்கள்
திருமணம் குறித்த பிரச்னம் கேட்கும் சமயத்தில் கீழ்க்கண்ட நிமித்தங்கள் தோன்றினால் நிச்சயம் திருமணம் நடக்கும் என்பதைக் கூறலாம்.
பட்டு வஸ்திரத்தைக் காணுதல்
இருவர் கை கோர்த்தபடி வருவதைக் காணுதல்
இரண்டு கன்னிகள் சேர்ந்து வரக் காணுதல்
துவைத்த புடவையைக் காணுதல்
ஜோடி வஸ்திரங்களைக் காணுதல்
மஞ்சள், சந்தனம் இவற்றைக் காணுதல்
இரண்டு இளம் குமாரர்கள் சேர்ந்து வரக் காணுதல்
ஹோரையைக் கொண்டு பலன்கள்:
பிரச்ன ஜோதிடத்தில் ஹோரையைக் கவனித்து பலாபலன்களை மிகத் துல்லியமாகக் கூறலாம். ஒரு குறிப்பிட்ட ஹோரை நடப்பில் உள்ள சமயத்தில் அந்த ஹோரை நாதனின் காரகத்துவங்களுக்கு சம்பந்தமில்லாத எந்தவொரு சம்பவமும் அந்த குறிப்பிட்ட ஹோரை நடப்பில் உள்ள சமயத்தில் நடக்காது. ஹோரையைக் கொண்டு என்ன சம்பவம் நடக்கப் போகிறது என்பதை நிர்ணயிக்க்லாம். உப ஹோரையைக் கொண்டு நடக்கப் போகும் சம்பவத்தின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கலாம்.
பிரச்ன காலத்தில் ஹோரையை அனுசரித்து ஊகிக்கும் விதம்:
ஒருவர் கேள்வி கேட்கும் நேரத்தில் எந்த கிரக ஹோரை நடப்பில் உள்ளதோ அந்த கிரகத்தின் காரகத்துவங்கள் சம்பந்தமான கேள்விகளையே பிரச்னமாக கேட்பார். உதரணமாக ஒருவர் சூரிய ஹோரையில் வருகிறார் என்றால் சூரியனின் காரக்த்துவங்கள் பற்றியே அவரது கேள்வி இருக்கும். இவ்வாறு பிரச்னம் கேட்கும் சமயத்தில் நடக்கும் ஹோரையை அனுசரித்து கேள்வியை ஊகித்துக் கொள்ளலாம்.
உதாரணமாக ஒருவர் கேள்வி கேட்கும் சமயத்தில் உள்ள லக்னம் மேஷம் எனவும் ஹோரை நாதன் செவ்வாய் எனவும் வைத்துக் கொள்வோம். கேள்வி கேட்ட சமயத்தில் ஹோரை நாதன் லக்னத்திற்கு 2 ல் இருப்பதாக வைத்துக் கொள்வோம். இப்படி உள்ள சூழ்நிலையில் ஒருவர் நிச்சயமாக கடன் வசூலாகுமா? எனக் கேட்பார். கிரக காரகத்துவப்படி செவ்வாய் கடனைக் குறிக்கிறார். பாவ காரகத்துவப்படி அவர் பணத்தைக் குறிக்கும் 2 ம் பாவத்தில் கேள்வி கேட்ட சமயத்தில் அமர்ந்துள்ளார். எனவே அவர் கடன் வசூலாகுமா எனக் கேட்கிறார். கடன் வசூல் ஆகுமா? ஆகாதா? என்பதை பிரச்ன காலத்தில் உள்ள மற்ற கிரக நிலைகளையும் அனுசரித்துக் கூற வேண்டும்.
பெரும்பாலும் இரட்டைக் குழந்தைகளின் ஜாதகம் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும் ஆனால் இரட்டையர்களின் குணாதிசயங்கள், தோற்றம், வாழ்கை முறை மாறுபடுவதை அனுபவத்தில் காணலாம். இந்த வித்தியாசங்களை உப ஹோரை மூலம் அறிந்து கொள்ளலாம்.
வரைமுறைகள்
பிரசன்ன ஜோதிடத்திற்கு என்று ஒரு சில வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றை இங்கே பார்ப்போம்.
பிரசன்னத்தின் மூலமாக நாம் ஒரே ஒரு கேள்விக்கு மட்டுமே விடை காண முடியும்.
ஒன்றுக்கு மேற்பட்ட கேள்விகள் இருந்தால் அத்தனை முறை பிரசன்னம் பார்க்கப்பட வேண்டும்.
பிரசன்னத்தில் கேட்கப்படும் கேள்விகள் யாவும் நியாயமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும்.
பொதுவான கேள்விகளுக்கு பிரசன்னத்தின் மூலமாக தீர்வு காண முடியாது. பிரசன்னத்தில் ஜாதகர் நேரிடையாக தமக்கோ, தன் குடும்ப உறுப்பினர்களின் சார்பாகவோ, நெருங்கிய நண்பர்களின் சார்பாகவோ கேள்விகளை முன் வைக்கலாம்.
கீழ்க்கண்ட இடங்களில் கேள்வி கேட்கப்பட்டால் அந்தக் கேள்வியின் நோக்கம் நிறைவேறும்.
பூக்களும் பழங்களும் நிரம்பிய செடிகள், மரங்கள் உள்ள இடங்கள்
அழுக்கு தூசிகள் இல்லாத சுத்தமான இடம்
தங்கம், நவமணிகள் உள்ள இடம்
கண்களுக்கும் மனதுக்கும், புலன்களுக்கும் இதமளிக்கும் இடங்கள்
பசுஞ்சாணம் மெழுகி தூய்மைபடுத்தப்பட்ட இடம்
அழகான இளம் பெண்கள் கூடியுள்ள இடங்கள்
நல்ல மந்திர ஒலிகள், திருமண வைபவங்கள் உள்ள இடங்கள்
ஆரோக்கியத்துடன், மகிழ்ச்சியுடன் வாழுபவர்கள் உள்ள இடங்கள்
கீழ்கண்ட இடங்களில் கேட்கப்படும் கேள்வியின் நோக்கம் நிறைவேறாது
அடர்ந்த காடு , சுடுகாடு, கைவிடப்பட்ட வீடுகள்
வறுமையும் ஏழ்மையும் உள்ள வீடு
ஈமக்கிரியை நடைபெறும் இடங்கள்
தண்ணீர் அருகே உள்ள இடங்கள்
நெருப்பு உள்ள இடங்கள்.
பட்ட மரங்கள் உள்ள இடங்கள்
மனதுக்கும் உடலுக்கும் துன்பம் அளிக்கும் இடங்கள்











