பித்ரு வழிபாடு செய்வதன் அவசியம்

நாம் கடவுளுக்கு செய்யும் பூஜை மற்றும் வழிபாட்டிற்கு எவ்வளவு முக்கியத்துவம் தருகிறோமோ அந்த அளவு முக்கியத்துவத்தை முன்னோர் வழிபாட்டிற்கும் அளிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த வகையில் முன்னோர் வழிபாடுகளை மேற்கொள்ள மகாளயபட்ச காலம் மிகவும் உகந்த காலம் ஆகும். இந்த நாட்களில் முன்னோர்கள் பூமிக்கு வருவதாக ஐதீகம்.
மகாளயபட்சம் 2023 செப்டம்பர் 30ம் தேதி முதல் அக்டோபர் 14ம் தேதி வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த அற்புத நாளில் நம் முன்னோர் வழிபாடு எனும் பித்ரு வழிபாடு செய்வதன் அவசியம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மகாளய பட்சம் என்றால் என்ன?
புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தை மகாளய அமாவாசை என்று கூறுகிறோம், இந்த மகாளய அமாவாசைக்கு முன்னர் 14 நாட்கள் மகாளயபட்சம் என கடைப்பிடிக்கப்படுகிறது. பொதுவாக அமாவாசை நாட்களில் தர்ப்பணம், சிராத்தம் கொடுக்கும் போது எவர் பெயரில் கொடுக்கிறோமோ அவர் மட்டுமே அதனை ஏற்று நமக்கு ஆசி வழங்குவார். ஆனால் மகாளய பட்சத்தில் நாம் கொடுக்கும் தர்ப்பணத்தை நம்முடைய முன்னோர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்து ஏற்றுக் கொள்வார்கள்.
மகாளய பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்?
மஹாளயபட்ச நாட்களான பதினைந்து நாட்களிலும் பித்ரு தேவதைகள் பூலோகத்திற்கு வந்து தத்தம் குடும்பத்தினருடன் தங்கி விடுவர் என்பர். எனவேதான் இந்த நாட்களில் அவர்கள் பசியாற அன்னமாகவோ அல்லது எள்ளும் தண்ணீருமாகவோ தர்ப்பணம் அளிக்க வேண்டும் என்றார்கள். இதன் மூலம் முன்னோர்கள் பசியாறி திருப்தியடைந்து, நமக்கு அருளாசி வழங்குகின்றனர். நோயற்ற வாழ்வினை வழங்குகிறார்கள். தடைகளை நீக்குகின்றனர். தாய், தந்தையர் இறந்த தினத்தில் திதி கொடுக்காதவர்கள் கூட, மறக்காமல் மஹாளயத்தை அவசியம் செய்ய வேண்டும். தகுந்த குருமார்களை வைத்து முறைப்படி செய்ய முடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணை போன்றவற்றைக் கொடுத்தாவது பித்ருக்களை இந்த மகாளயபட்சத்தில் திருப்தி செய்ய வேண்டும்.
மகாளய பட்ச பதினைந்து நாட்கள் தர்ப்பணம் அளிப்பதன் பலன் :
- எந்தெந்த திதியில் தர்ப்பணம் அளித்தால் என்னென்ன பலன்கள் கிட்டும் என்று இந்தப் பதிவில் காணலாம்.
- பிரதமையில் தர்ப்பணம் அளித்தால் செல்வம் பெருகும்
- துவிதியை திதியில் தர்ப்பணம் அளித்தால் வாரிசு வளர்ச்சியடையும். நல்ல ஒழுக்கமுள்ள குழந்தை பிறக்கும்.
- திருதியை திதியில் தர்ப்பணம் அளித்தால் திருப்திகரமான இல்வாழ்க்கை அமையும், திருமணம் கைகூடி வரும். நினைத்தது நிறைவேறும்.
- சதுர்த்தி திதியில் தர்ப்பணம் அளித்தால் பகை விலகும் எதிரிகள் தொல்லை நீங்கும்
- பஞ்சமி திதியில் தர்ப்பணம் அளித்தால் விரும்பிய பொருள் சேரும்
- சஷ்டி திதியில் தர்ப்பணம் அளித்தால் தெய்வீகத் தன்மை ஓங்கும், புகழ் வந்து சேரும்.
- சப்தமி திதியில் தர்ப்பணம் அளித்தால் மேலுலகோர் ஆசி கிடைக்கும். உயர்பதவி கிட்டும்
- அஷ்டமி திதியில் தர்ப்பணம் அளித்தால் நல்லறிவு வளரும். சமயோஜித புத்தி கிட்டும்.
- நவமி திதியில் தர்ப்பணம் அளித்தால் ஏழுபிறவிக்கும் நல்ல வாழ்க்கைத் துணை கிட்டும்.
- தசமியில் தர்ப்பணம் அளித்தால் தடைகள் நீங்கி விருப்பங்கள் நிறைவேறும்
- ஏகாதசியில் தர்ப்பணம் அளித்தால் வேதவித்யை, கல்வி, கலைகளில் சிறக்கலாம்
- துவாதசி தர்ப்பணம் அளித்தால் தங்கம், வைர ஆபரணங்கள் சேரும்
- திரியோதயில் தர்ப்பணம் அளித்தால் நல்ல குழந்தைகள், கால்நடைச் செல்வம், நீண்ட ஆயுள் கிட்டும்
- சதுர்த்தசியில் தர்ப்பணம் அளித்தால் முழுமையான இல்லறம் கணவன் -மனைவி ஒற்றுமை நீடிக்கும். பாவங்கள் நீங்கும்.
- அமாவாசை திதியில் தர்ப்பணம் அளித்தால் மூதாதையர், ரிஷிகள் தேவர்களின் ஆசி கிட்டும்.
மகாளயபட்சத்தில் ஏன் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும்?
மகாளயபட்ச காலத்தில் நமது முன்னோர்கள் அனைவரும் பித்ரு லோகத்தில் இருந்து இந்த பூலோகத்திற்கு வருகை தருவதாக ஐதீகம். அவ்வாறு வரும் அவர்களை நாம் மகிழ்விப்பதன் மூலம் அவர்களின் அருளும் ஆசியும் நமக்கு கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவ்வாறு வருகை தரும் முன்னோர்களை நாம் கவனிக்காமல் விட்டு விட்டால் அவர்கள் மன வருத்தத்திற்கு ஆளாவார்கள். அது நமக்கு சாபமாக மாறும்.அதனால் நாம் வாழ்வில் பல துன்பங்கள் மற்றும் தடைகளை சந்திக்க நேரும். அதனால் தான் நாம் நமது முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை சரியாக செய்வதன் மூலம் நம்மை துன்பங்கள் அணுகாது. நம் முன்னோர்களின் ஆத்ம சாந்தி செய்வதால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தடைகள் நீங்கும்.முன்னோர்களை வழிபாடு செய்வதினால் நம்முடைய உடல் மற்றும் உள்ளத்தால் ஏற்படும் கர்மாவும் தூய்மை அடைகிறது. வாழ்க்கையில் வெளிச்சம் தரும் ஒளி ஏற்படுகிறது. இதன் மூலம் இந்த பிறவியின் இலக்கை நோக்கி நாம் இயல்பாக செல்லவும், அதில் வெற்றி பெறவும் முடியும்.
இதனால் தான் பித்ரு வழிபாடு எனும் நம் முன்னோர்களின் வழிபாடு செய்வது அவசியம் மட்டுமல்லாமல் கடமை ஆகிறது.
