நரசிம்மரை வழிபட்டால் நினைத்த வேலை கிடைக்கும்

உத்தியோகம் புருஷ லட்சணம் என்பது அந்த காலம். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் வேலை என்பது அனைவருக்கும் அவசியமான ஒன்றாகி விட்டது. இன்றைய பணத் தேவை காரணமாக அனைவரும் வேலை பார்க்க வேண்டிய சூழல் உள்ளது என்பதே நாம் மறுக்க முடியாத உண்மை.
மேலும் வேலை என்பது நமது சமூக அந்தஸ்தின் அடையாளமாக உள்ளது. நாம் பார்க்கும் வேலை, அதன் மூலம் நாம் சம்பாதிக்கும் பணம் இவை எல்லாம் தான் நமது அந்தஸ்தை நிர்ணயிக்கிறது. ஒரு சிலருக்கு படிக்கும் போதே வேலை கிடைத்துவிடுகிறது. ஒரு சிலருக்கு படித்து முடித்த பின் வேலை கிடைக்கிறது. ஒரு சிலருக்கு வேலை கிடைப்பதே குதிரைக் கொம்பாக இருக்கிறது. ஒரு சிலருக்கு கிடைக்கும் வேலை பிடிப்பதில்லை. ஒரு சிலருக்கு நினைத்த வேலை கிடைப்பதில்லை. நினைத்த வேலை கிடைக்க நாம் செய்ய வேண்டிய நரசிம்மர் வழிபாடு பரிகாரம் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.
நரசிம்மர் வழிபாடு :
நாளை என்பதே நரசிம்மருக்கு கிடையாது. நரசிம்மர் என்றதும் அவரது உக்கிர வடிவம் தான் நமக்கு நினைவுக்கு வரும். உக்கிரமான தோற்றம் இருந்தாலும் கருணை மிக்க கடவுள். தனது பக்தன் பிரகலாதன் பக்தியை மெச்சி அவனது வார்த்தைகளை மெய்யாக்க தூணில் இருந்து அவதரித்தவர் நரசிம்மர். நம்பிக்கையுடன் தன்னை வழிபடும் பக்தர்களுக்கு பரிபூரண அருளை அள்ளி வழங்குபவர் அவர். அவரை வழிபடுவதன் மூலம் நினைத்த வேலை கிடைக்கும் என்பது நம்பிக்கை. அவரை வழிபடும் விதம் பற்றி காணலாம்.
வழிபடும் முறை:
நரசிம்மருக்கு உகந்த நாள் வியாழக்கிழமை ஆகும். அவரது நட்சத்திரம் சுவாதி ஆகும். எனவே சுவாதி நட்சத்திர நாளிலும் அவரை வழிபடலாம். பொதுவாக வியாழக்கிழமை அன்று பிரதோஷ நேரத்தில் நரசிம்மரை வழிபடுவது நன்மை அளிக்கும். எனவே வியாழக்கிழமை அன்று மாலை வீடு மற்றும் உங்களை தூய்மை படுத்திக் கொண்டு நரசிம்மர் திருவுருவப் படத்திற்கு முன் இரண்டு நெய் தீபங்களை ஏற்றிக் கொள்ளுங்கள். மஞ்சள், குங்குமம் அட்சதை மற்றும் மலரை சாற்றி வழிபடுங்கள். வெல்லம் கலந்த பானகம் செய்து அதனை நைவேத்தியம் செய்யுங்கள். இந்த வழிபாட்டை நீங்கள் அருகில் இருக்கும் நரசிம்மர் ஆலயம் சென்றும் மேற்கொள்ளலாம். தூப தீப ஆராதனை முடிந்தவுடன் முழு மனதுடன் உங்கள் வேண்டுதலை வேண்டிக் கொண்டு கீழே உள்ள நரசிம்ம காயத்ரி மந்திரத்தை பதினோரு முறை ஜெபிக்கவும்.
இந்த வழிபாட்டை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் வேலை தொடர்பான உங்கள் அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும். நினைத்த வேலை நினைத்தபடி கிடைக்கும். நம்பிக்கையுடன் வழிபாடு செய்து நரசிம்மரின் பரிபூரண அருளாசிகளைப் பெற்றிடுங்கள்.
மந்திரம்
“ஓம் வஜ்ரனாகய வித்மஹே
தீஷ்ன தம்ஷ்ட்ராய தீமஹி
தந்தோ நரசிம்மஹ பிரசோதயாத்”
