நலம் தரும் சொல் ‘நாராயணா’, மங்கலம் தரும் சொல் மகாலட்சுமி என்பர். அன்னை மகாலட்சுமி வழிபாடு உலகமெங்கும் பரந்து விரிந்து காணப்படுகிறது. செல்வம் எல்லா இடங்களிலும் பரந்து விரிந்து இருப்பதால், அனைத்து இடங்களிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். மகாலட்சுமி எங்கு இருக்கிறாளோ அந்த இடம் செல்வ செழிப்புறும். மகாலட்சுமியின் திருவருள் பார்வையில் படுவோர் அனைத்து நலன்களையும் பெற்று சிறப்பாக வாழ்வர். காணும் போது கண்ணுக்கும், மனதுக்கும் குளிர்ச்சி அளிக்கும் மகாலட்சுமி, தனம், தானியம், வெற்றி, நீர், நிலம், காற்று, தீ, உணவு, உடை, உறையுள் ஆகியவற்றில் வாசம் செய்கிறாள். செல்வத்தின் அதிபதியான அன்னை மகாலட்சுமி அவதரித்த வரலாற்றைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
துர்வாச முனிவரின் சாபம்
மகாவிஷ்ணுவின் அருள் பார்வையால் தேவர்கள் சுகமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் துர்வாச முனிவர் வைகுந்தம் சென்று மகா விஷ்ணுவையும், மகாலட்சுமியையும் தரிசனம் செய்யும் போது, மகாலட்சுமி மனம் மகிழ்ந்து துர்வாச முனிவருக்கு ஒரு அழகான தாமரை மலர் மாலையைக் கொடுத்தார். அந்த தெய்வீக மாலையை கையில் ஏந்தியபடி முனிவர் வந்து கொண்டிருந்த போது, எதிரே தேவேந்திரன் (தேவர்களின் அரசன்) தனது ஐராவதம் யானையின் மீது அமர்ந்து உலா வந்து கொண்டிருந்தான்.
இதனைக் கண்ட துர்வாச முனிவர் தான் கையில் வைத்திருந்த தாமரை மலர் மாலையை தேவேந்திரனுக்குக் கொடுத்தார். அவன் அதை அலட்சியமாக வாங்கி யானையின் பிடரி மீது வைக்க, அது நழுவிக் கீழே விழுந்தது. அந்த தெய்வீக மலர் மாலையை யானை தன் காலால் மிதித்தது. அதைக் கண்ட முனிவர் துர்வாசர் கடும் கோபத்துடன், தேவேந்திரனை நோக்கி, “தேவேந்திரா நான் கொடுத்த தெய்வீக மாலையை அவமதித்ததால், நீ லட்சுமி கடாட்சத்தையும், தேவ பதவியையும் இழப்பாய்” என சாபமிட்டார்.
பலம் பெற்ற அசுரர்கள்
துர்வாசரின் சாபத்தால் தேவலோகம் முழுவதும் இருண்டது. தேவலோகத்திலிருந்த அனைவருக்கும் சாபம் உண்டானது. தேவர்கள் தனது பலம் முழுவதையும் இழந்தார்கள். அப்போது அரசுரர்களின் பலம் ஓங்கியது. அசுரர்களின் அட்டகாசங்கள் அதிகமாகின. தேவலோகத்திலிருந்து அனைவரும் விரட்டியடிக்கப்பட்டார்கள். தேவேந்திரன் உட்பட அனைவரும் பிரம்மனிடம் அடைக்கலம் புகுந்தனர். ஆனால் பிரம்மனாலும் அவர்களது துயரத்தை போக்க முடியவில்லை. விமோசனம் வேண்டி பாற்கடலில் பள்ளிக் கொண்டிருக்கும் மகாவிஷ்ணுவிடம் சரணடையச் சொன்னார் பிரம்மன்.
மகாவிஷ்ணுவின் ஆலோசனை
பிரம்மா கூறியபடி மகாவிஷ்ணுவிடம் சரணடைந்தார்கள் தேவர்கள். தங்கள் இளமை, ஆயுள், இழந்த அனைத்துச் செல்வங்கள் ஆகியவற்றை மீட்டுத் தந்து, மீண்டும் தேவலோகம் உருவாக அருள்புரியுமாறு வேண்டினர். மகாவிஷ்ணுவும் மனமிரங்கி, “நீங்கள் இழந்த செல்வங்களை மீண்டும் பெற மகாலட்சுமி ஒரு அவதாரம் எடுப்பாள். அதற்கு நீங்கள் பாற்கடலை கடைய வேண்டும். அதிலே தோன்றும் அமிர்தம் உங்களுக்கு நிரந்தர இளமையையும், மரணமில்லா பெருவாழ்வையும் கொடுக்கும். பாற்கடலில் தோன்றும் மகாலட்சுமி, நீங்கள் இழந்த சௌபாக்யங்களையும், செல்வங்களையும் பெற அருள்புரிவாள்” என்று மகாவிஷ்ணு தேவர்களுக்கு வாக்களித்து ஆசி கூறினார்.
பாற்கடல் கடையப்பட்டது
பாற்கடலை கடைவது அத்தனை எளிதான காரியமா என்ன? தேவர்கள் திகைத்து நின்றனர். ஆனால் அதற்கும் மகாவிஷ்ணுவே வழி கூறினார். மந்தார மலையை மத்தாக்கி, வாசுகி என்ற பாம்பை கயிறாக்கி, தேவர்கள் ஒருபுறமும், அசுரர்கள் மறுபுறமும் கயிற்றை இழுத்துப் பாற்கடலைக் கடைந்தால் மகாலட்சுமி தோன்றி அருள்பாலிப்பாள்” எனக் கூறினார்.
பாற்கடலை கடையும் பணி தொடங்கியது. முதலில் ஆலகால விஷம் தோன்றியது. அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து சிவனை வேண்டினர். சிவபெருமான் தோன்றி விஷத்தை அருந்தி, தேவர்களையும், அசுரர்களையும் காப்பாற்றினார். மீண்டும் பாற்கடலை கடையும் பணி தொடங்கியது. அதன் பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக, காமதேனு, உச்சை சிரவஸ் என்னும் வெள்ளைக்குதிரை, ஐராவதம் என்னும் வெள்ளை யானை, கற்பக விருட்சம், அப்சரஸ்திரிகள், அகலிகை என்ற அழகான பதுமை, திருமகள் என்னும் லட்சுமியும் தோன்றினாள். இறுதியாக அமுத கலசத்துடன் மகாவிஷ்ணுவின் மற்றொரு அவதாரமான தன்வந்த்ரி தோன்றினார்.
பாற்கடலிலிருந்து ஒளிமயமான ரூப லாவண்யத்துடன் தேவி மகாலட்சுமி தோன்றினாள். தேவியைக் கண்டதுமே அனைத்து தேவர்களும், அசுரர்களும் அவள் அழகில் மயங்கி, அவளை அடைய விரும்பினார்கள். அப்போது மகாலட்சுமி, “என்னை அடைய விரும்பும் எவரையும் நான் தேர்ந்தெடுப்பதில்லை. என் தோற்றத்தைக் கண்டு எந்த சலனமும் இல்லாமல் இருப்பவரையே நான் சரணடைவேன்” என்று கூறினாள். அதன்படி எதனாலும் பாதிக்கப்படாமல் யோக நித்திரையில் இருந்த மகாவிஷ்ணுவின் பாதங்களைச் சரணடைந்தாள்.
மகாலட்சுமியைப் பற்றி பிரம்மா
பிரம்மதேவர் மகாலட்சுமியைப் பற்றி, “எந்தெந்த இடங்களில் தர்மம், நியாயம், நீதி, நேர்மை, நல்லொழுக்கம், ஆகியவை நிலைத்திருக்கிறதோ, அங்கெல்லாம் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். எனவே தேவர்கள், ஒழுக்கத்தையும், தர்மத்தையும் நிலைநாட்டி வாழ உறுதி பூண்டால், மகாலட்சுமி தேவலோக செல்வங்கள் அனைத்தையும் மீண்டும் அளிப்பாள்” என்றார்.
“மகாலட்சுமி திருப்தியையும், மனச்சாந்தியையும் வழங்கும் கருணைமிக்க தேவியாவாள். வெறும் பொருட்செல்வங்களை மட்டும் விரும்பி அவளை வழிபடுபவர்கள் ஏமாற்றம் தான் அடைவார்கள்” என்றும் பிரம்மன் கூறினார். மகாலட்சுமியின் பெருமையை அறிந்த தேவர்கள் பக்தியோடு அவளை சரணடைந்தார்கள். அப்போது அவளிடமிருந்து வெளிப்பட்ட ஸ்வர்க்க லட்சுமி தேவலோகத்தை அடைந்தாள். தேவலோகம் மீண்டும் தெய்வீகச் செல்வங்களோடு ஒளி வீசியது. தேவர்கள் அவள் துதி பாடி மகிழ்ந்தனர்.
மகாலட்சுமி தோன்றிய நாள்
செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தின் தெய்வமான மகாலட்சுமி பாற்கடலிலில் இருந்து வெளிப்பட்ட நாளே மகாலட்சுமி தோன்றிய தினமாக கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. தமிழ் மாதமான கார்த்திகையில், வளர்பிறை ஏகாதசி அன்று (நவம்பர் முதல் டிசம்பர் நடுப்பகுதி வரை) கொண்டாடப்படுகிறது. வறுமையிலிருந்து விடுபட்டு, புதிய செல்வங்களைப் மகாலட்சுமியிடம் பெற வேண்டி இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மகாலட்சுமியின் அருளாசிகளைப் பெறுவதற்கு இது சிறந்த தினமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply