குல தெய்வ வழிபாடு | Kula Deivam Vazhipadu In Tamil

குல தெய்வ வழிபாடு:
பொதுவாக குல தெய்வ வழிபாடு என்றால் என்ன?அதனை கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டுமா? குல தெய்வ வழிபாட்டை எப்படி மேற்கொள்ள வேண்டும்? இப்படி நம் மனதில் எத்தனையோ சந்தேககங்கள் இன்றளவிலும் எழுகின்றன. இஷ்ட தெய்வம் என்பது நமக்கு பிடித்த தெய்வத்தை வணங்குவது. அதாவது நாமே நம் மனதிற்குப் பிடித்தாற்ப் போல ஒரு தெய்வத்தை தேர்ந்தெடுத்து வணங்கி வருவது. இதனை நாம் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். அது நமது இஷ்டம்.
நமது முன்னோர்கள் எந்த தெய்வத்தை குல தெய்வமாகக் கொண்டார்களோ அதனை நாம் மாற்றிக் கொள்ள இயலாது. குல தெய்வத்தை மாற்றும் அனுமதி நமக்கு இல்லை. யாருக்கு குல தெய்வம் மாறும்? பெண்களுக்கு, அதுவும் திருமணத்திற்குப் பிறகு தான் குல தெய்வம் மாறும். திருமணம் ஆகும் வரை தந்தை வழி குல தெய்வமும் திருமணமான பின்பு கணவன் வீட்டு குல தெய்வமும் பெண்ணிற்கு குல தெய்வமாக அமையும். குல தெய்வ வழிபாடு பற்றி மேலும் அறிய கிளிக் செய்யவும்.
குல தெய்வம் என்பது என்ன?
குலம் தழைக்க வேண்டும் என்றால் நிச்சயமாக குல தெய்வ வழிபாடு செய்ய வேண்டியது அவசியம். இந்தக் குல தெய்வம் என்பது என்ன? எப்படி இந்த குல தெய்வம் அமைந்தது என்ற கேள்வி நம் மனதில் எழும்.
பாரம்பரியமாக நமது முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் நாம் குல தெய்வம் என்று கூறுகிறோம். நமது முன்னோர்களில் சிலர் தமது இக்கட்டான சூழ்நிலையில் எந்த தெய்வம் கை கொடுத்து காப்பற்றியதோ அந்த தெய்வத்தை காலம் காலமாக வணங்கி வழிபட்டு வர அதுவே குல தெய்வமாக ஆகிறது. அதுவே வழி வழியாக வணங்கி வரப் பட்டு வருகின்றது.சில குடும்பங்களில் முன்னோர்கள் தமது மறைந்து போன முன்னோர்களை குல தெய்வமாக ஏற்று வணங்கி வழிபட்டுவரலாயினர். இவ்வாறு வழி வழியாக வணங்கி வரப்பட்டு வந்த தெய்வம் அந்தந்த குடும்பத்திற்கு குல தெய்வமாக அமைகின்றது. முனோர்கள் காட்டியதே நமக்கு குல தெய்வம்.
குல தெய்வத்தை எப்பொழுது வணங்க வேண்டும்?
எந்தவொரு நல்ல செயலை செய்வதற்கு முன்பும் நாம் குல தெய்வத்தை கண்டிப்பாக வணங்க வேண்டும். அன்றாடம் நாம் நமது நித்திய கடமைகளை செய்யும் போது, கண்டிப்பாக குல தெய்வத்தை வணங்க வேண்டும். மேலும் வருடத்திற்கு ஒரு முறையாவது குல தெய்வத்தை மரபுப்படி அதற்குரிய நாளில் வணங்க வேண்டும். அந்த குறிப்பட்ட நாளைப் பற்றி அறியாதவர்கள். சிவராத்திரி அன்று வணங்குவது நல்லது. குல தெய்வத்தை எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் வணங்குவது சாலச் சிறந்தது. குல தெய்வத்தை நமது முன்னோர்கள் கூறிய முறையில் தான் வழிபட வேண்டும். பெரியோர்கள் நமக்கு கற்றுத் தந்த முறையில் குல தெய்வத்தை நாம் வணங்கலாம். நம்மால் குல தெய்வ கோவிலுக்கு உடனடியாகப் போக முடியவில்லை என்றால் காசு முடிந்து வைத்து குல தெய்வ பிரார்த்தனை செய்து கொள்வது சாலச் சிறந்த வழி.
குல தெய்வ அனுமதி :
நாம் நமது வாழ்வில் எந்த ஒரு செயலை செய்தாலும் அதற்கு குல தெய்வ அனுமதி முக்கியம். அது அவசியம் தேவை. திருமணம், பெயர் சூட்டல், காது குத்துதல், புது தொழிலை ஆரம்பித்தல், புதிதாக கல்வி பயில ஆரம்பித்தல் இது போன்ற எந்த ஒரு செயலை நாம் தொடங்க வேண்டும் என்றாலும் அதற்கு குல தெய்வ அனுமதி மிக முக்கியம்.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்நத ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான்.குலதெய்வத்தின் ஆசி இல்லையென்றால் திருமணதடை, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது, நிரந்தர வேலை இல்லாமல் இருப்பது, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உபாதைகள் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ கோயிலில் வணங்க வேண்டியது அவசியம். அதன் மூலம் வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
குலதெய்வம் அறியாதவர்கள் என்ன செய்வது?:
குல தெய்வம் தெரியாதவர்கள் கூட இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்து மூத்த உற்றார் உறவினர் மூலம் அறிந்து கொள்ள முயல வேண்டும். இயலவில்லை என்றால் ஜோதிட முறையில் அறிந்து கொள்ள இயலும். அப்படியும் இல்லை என்றால் கால பைரவ வழிபாடு மூலம் அறிந்து கொள்ள இயலும். கால பைரவரை வியாழக்கிழமை குரு ஓரையில் ஒன்பது வாரங்கள் விரதம் இருந்து வீட்டிலும் ஆலயத்திலும் வழிபட்டு மனமுருக வேண்டினால் யாரவது ஒருவர் மூலமாகவோ அல்லது கனவின் வழியாகவோ குல தெய்வம் பற்றி அறியலாம் என்று பல பேரின் அனுபவம் மற்றும் நம்பிக்கை இன்றளவும் நிலவுகின்றது.
அப்படியும் தெரியவில்லை என்றால் யாரை குல தெய்வமாக ஏற்றுக் கொள்ளலாம்? குல தெய்வம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவில் இருப்பவர்கள் ஆண் தெய்வம் என்றால் முருகப் பெருமானையும் பெண் தெய்வம் என்றால் காமாட்சி அம்மனையும் ஏற்றுக் கொள்ளலாம்.
பகவத் கீதை தரும் விளக்கம்.......
குல தெய்வ வழிபாடு பற்றி பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள விளக்கம் வருமாறு:-
குல தெய்வ சாபமும் நிவர்த்தியும்:
குல தெய்வ சாபம் என்பதை ஜாதகம் மூலம் கண்டறிந்து கூறுவார்கள். நமது வாழ்வில் எந்த செயலை எடுத்தாலும், தடை, தாமதங்கள், குடும்பத்தில் சண்டை சச்சரவு என்று இருப்பதற்கு குல தெய்வ சாபம் அல்லது தோஷம் ஒரு காரணம் ஆகும். குல தெய்வ சாபம் தோஷம் எப்படி ஏற்படுகின்றது? முதல் காரணம் குல தெய்வத்தை மறப்பது. குல தெய்வத்தை மறந்து வழிபடாமல் இருப்பது குல தெய்வ சாபம் அல்லது தோஷத்திற்கு வழி வகை செய்கின்றது. ஒரு காலத்தில் நமது குலத்தைக் காப்பாற்றிய குல தெய்வத்திற்கு நாம் நன்றி செலுத்த மறந்தால் அதுவே சாபமாகின்றது. அடுத்து குல தெய்வத்தை நிந்திப்பது. கஷ்டம் அல்லது விரக்தி காரணமாக குல தெய்வம் மீது அதிருப்தி அடைந்து அதனை நிந்திப்பது. அது மட்டுமன்றி, குரு துரோகம், குரு நிந்தனை, பெரியோர்களுக்கு அவமானம் செய்தல், பெற்றோரைக் கைவிடுதல், கருவில் இருக்கும் குழந்தையை அழித்தல் இது போன்ற பல காரணங்கள் குல தெய்வ சாபம் மற்றும் தோஷத்திற்கு வழி வகுக்கும். இதனை எப்படி போக்குவது? குல தெய்வ சாபத்தை குல தெய்வம் தான் போக்க முடியும். எனவே குல தெய்வத்தை மனமுருக வேண்டி வழிபட்டு வந்தால் சாபங்கள் அகன்று வாழ்வில் நன்மை பெருகும்.
