Rama Navami Ceremonies & Grand Ram Lalla Statue Installation On Ram’s Birthday Powertime JOIN NOW

ஜடா முனீஸ்வரர் வரலாறு | Jada Muniswarar History In Tamil

April 16, 2021 | Total Views : 2,478
Zoom In Zoom Out Print

காவல் தெய்வம், முனீஸ்வரர்:

முனீஸ்வரர் வழிபாடு என்பது, பண்டைய காலம் முதல், நம் மக்களால் பக்தியுடன் அனுசரித்து வரப்படும், இறை வழிபாட்டு முறையாக விளங்குகிறது. மக்களிடையே, குறிப்பாக நம் கிராமப்புற மக்களிடையே மிகப் பிரபலமாக விளங்கும் இந்த வழிபாடு, சுமார் மூன்று நூற்றாண்டுகளுக்கும் பழமையான ஒன்றாகக் கருதப்படுகிறது. பெரும் வீரமும், ஆற்றலும், ஆவேசமும் நிறையப் பெற்ற, கம்பீரமான ஆண் தெய்வமாக விளங்குபவர், முனீஸ்வரர் ஆவார். அடிப்படையில், ஒரு காவல் தெய்வமாகத் திகழும் இவர், பழங்காலத்தில், ஒரு கிராமத்தையும், அதில் வசிக்கும் மக்களையும், திருடர்கள், கொள்ளையர்கள் போன்றவர்களிடமிருந்தும், பெரு மழை, புயல் போன்ற இயற்கைப் பேரிடர்களிலிருந்தும் காக்கும் பெரும் சக்தியாக இருந்து வந்துள்ளார்.   

ஜடா முனீஸ்வரர்:

நாத முனி, வேத முனி, பூத முனி, சக்தி முனி, மாய முனி, மந்திர முனி, பால் முனி, கரு முனி, சுடலை முனி போன்ற பல வகைகளிலும், வடிவங்களிலும் காட்சி தரும் முனி எனப்படும் முனீஸ்வரரின், மிகுந்த சக்தி வாய்ந்த அம்சமாகத் திகழ்பவர் ஜடா முனி அல்லது ஜடா முனீஸ்வரர் ஆவார்.  

ஜடா முனீஸ்வரர் மகிமை:

மும்மூர்த்திகளில் ஒருவரும், மக்களால் பெரிதும் போற்றி வணங்கப்படும் ஒப்புயர்வற்ற தெய்வமாகத் திகழ்பவருமான சிவபெருமானின் அம்சம் நிறைந்தவர், இந்த ஜடா முனீஸ்வரர் ஆவார். ‘ஜடா’ எனப்படும் விரிந்த சடையுடன், தலைவிரி கோலமாக, சுடுகாட்டு சாம்பலை உடலெல்லாம் பூசிக்கொண்டும், கொடிய பாம்பை கழுத்தில் ஆபரணமாக அணிந்து கொண்டும், தனது கைகளில் பலவித பயங்கர ஆயுதங்களை ஏந்திக் கொண்டும், பார்ப்பவரை எல்லாம் அச்சம் கொள்ள வைக்கும், அகோர ரூபத்தில் காட்சி தருகிறார், இந்த ஜடா முனீஸ்வரர். சிவபெருமானின் முழு ஆற்றலும் நிறையப் பெற்றவரான இவர், மற்ற அனைத்து தெய்வங்களையும் கட்டுப் படுத்தும் சக்தி படைத்தவர். கால தேவன் எனப்படும் மரணத்தின் கடவுளான எம தர்ம ராஜனையே, தன் காலினால் வீழ்த்தி, மாய்க்கும் அற்புத ஆற்றல் நிறம்பப் பெற்றவர். இவ்வாறு, அனைத்து தெய்வங்களும் இந்த ஜடா முனீஸ்வரருக்குள் அடக்கம் என்றால், இவரது அபார மகிமை அனைவருக்கும் நன்கு விளங்கும்.  

எந் நேரமும் தவக் கோலத்தில் இருக்கும் இந்த ஜடா முனீஸ்வரர், தண்ணீரிலும் தவம் செய்யும் ஆற்றல் படைத்தவர். இது போன்ற சக்தி படைத்த ஜடா முனியை வழிபடுவது, நமக்கு பல நன்மைகளைப் பெற்றுத் தரும் என்பது நம்பிக்கை.                

ஜடா முனீஸ்வரர் வழிபாடு:

மாய ஜடாமுனி, ஜல ஜடாமுனி, மலை ஜடாமுனி, குகை ஜடாமுனி, வன ஜடாமுனி போன்ற பல அவதாரங்களிலும் அருள்பாலிக்கும் ஜடா முனீஸ்வரர், குறிப்பாக நம் கிராமப்புறங்களில், பல்வேறு பெயர்களில், பல்வேறு விதமாக வணங்கப்படுகிறார்.  

ஜடா முனீஸ்வரர் ஹோமம் என்பது இந்த தெய்வத்திற்குச் செய்யப்படும் சிறந்த வழிபாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்த அக்னி வழிபாட்டின் மூலம், இந்த சக்தி வாய்ந்த கடவுளை மகிழ்வித்து, அவரது அருளையும், பல நன்மைகளையும் அடையலாம் என்பது நம்பிக்கை.

ஜடா முனீஸ்வரர் ஹோமம் தவிர, வடை, பால், பாயசம், கொழுக்கட்டை, அவல், பொரி, கடலை, மற்றும் இறைச்சி, சுருட்டு போன்றவற்றை பக்தியுடன் இவர் முன் படைத்து, வழிபடுவது அனைத்து வித தோஷங்களையும் நீக்கும் என்றும் கருதப்படுகிறது.       

ஜடா முனீஸ்வரர் வழிபாட்டின் பலன்கள்:

ஜடா முனீஸ்வரர் வழிபாடு என்பது, அனைத்து வித தீய சக்திகளையும், எதிரிகளையும் வீழ்த்த வல்லது. தீர்க்க முடியாத பிரச்சனைகளையும், சங்கடங்களையும் தீர்க்க வல்லது. கடும் தீமை பயக்கும் சக்திகளையும், திருத்தி, நல்வழிப்படுத்த வல்லது. 

இவ்வாறு, ஜடா முனீஸ்வரரை மனம் உருக, நம்பிக்கையுடன் வழிபட்டால், தீமை, வறுமை, பில்லி, சூனியம் போன்ற எதிர்மறை ஆற்றல்கள், பகைவர்களால் ஏற்படும் கெடுதல்கள் போன்றவை நீங்கி, அனைத்து வித நன்மைகளும் பெருகும். வாழ்க்கை வளம் பெறும்.        

banner

Leave a Reply

Submit Comment