Arupadai Veedu Muruga Program 2024: Invoke Muruga at His 6 Powerful Abodes During the 6th Moon Powertime Days JOIN NOW
Search

ஆஞ்சநேயர் வழிபாடு முறை மற்றும் பலன்கள்

March 23, 2023 | Total Views : 2,660
Zoom In Zoom Out Print

அனுமன், மாருதி, அஞ்சனை  மைந்தன், வாயுபுத்திரன், ராம தூதன் என்றெல்லாம் அழைக்கப்படும் ஆஞ்சநேயர் என்றால் நமக்கு நினைவில் வருவது அவருடைய ராம பக்தி. அதனால் தான் அவர் ராம பக்த ஆஞ்சநேயர் என்றும் அழைக்கப்படுகிறார்.  அனுமனை வழிபட்டால் நினைத்த காரியம் கை கூடும் என்பது ஐதீகம். பொதுவாக இறைவனை வழிபட பல வழி முறைகள் உள்ளன. ஆஞ்சநேயரை வழிபடுவதால் அறிவு, வலிமை, புகழ், துணிவு, அச்சமின்மை, நோய் இல்லாத வாழ்வு, ஊக்கம், சொல் ஆற்றல்,  வாக்கு   வன்மை இவை அனைத்தும் அவரருளால் கிட்டும். ஆஞ்சநேயரை வழிபடும் முறை மற்றும் பலன்களைப் பற்றிக் காண்போம்.

ராம நாம வழிபாடு :

அனுமனின் அருளை எளிதில் பெற  ராம நாம ஜெபம் ஒன்றே எளிய வழி.

யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்

'எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்து கொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள்'  என்பதே  இந்த ஸ்லோகத்தின் பொருள்.

எனவே ராம நாமம் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் ஸ்ரீ அனுமன் பிர்த்யட்சமாகிறார் என்பது ஐதீகம். பக்திப் பூர்வமாக ராம நாமம் ஜெபிக்கும் அனைவருக்கும் ஆஞ்சநேயர் அருள் கிட்டும்.

அனுமனின் வால் வழிபாடு:

அனுமனுக்கு வாலில் ஆற்றல் அதிகம். அனுமன்  தனது வாலில் இருந்த தீயினால் இலங்கையின் சில பகுதிகளை சாம்பலாக்கி அரக்கர்களை நடு நடுங்க வைத்தார். அனுமன் வால் வழிபாடு காரியத் தடைகளை நீக்கும்.  வெற்றியை நமக்கு அளிக்கும். எனவே அனுமனின் வால் வழிபாடு நமது காரியங்களை நிறைவேற்றித் தரும்.

இந்த வழிபாட்டை நாம் வீட்டிலும் மேற்கொள்ளலாம். இந்த வழிபாட்டை ஒரு நல்ல நாளில் தொடங்கலாம். தொடர்ந்து நாற்பத்து எட்டு நாட்கள் செய்து  வர வேண்டும்.  காலையில் எழுந்து நீராடி அனுமன் படத்திற்கு பூஜை செய்ய வேண்டும். சந்தனத்தை குழைத்து  எடுத்துக் கொண்டு வாலில் விரலால் பொட்டு வைக்க வேண்டும். அதன் மீது குங்குமம் வைக்க வேண்டும். வால் தொடங்கும் பகுதியில் ஒரு பொட்டு வீதம் தொடங்கி   நாற்பத்தி எட்டு நாட்கள் வரை வால் முடியும் பகுதி வரை வைக்க வேண்டும். இவ்வாறு வைக்கும் போது உள்ளம் உருகி வழிபட வேண்டும். ஸ்ரீராம ஜெயம் என்ற நாமத்தை ஜெபிக்க வேண்டும்.  அனுமன் சாலீசா பாராயணம் மற்றும் சுந்தர காண்டம் பாராயணம் செய்யலாம்.

வெற்றிலை மாலை வழிபாடு

ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபடுவதன் மூலம் காரியத் தடைகள் நீங்கும். குறிப்பாக திருமணத் தடைகள் நீங்கும். நுனியும் காம்பும் உடையாத தூய வெற்றிலைகளை மாலையாக கோர்க்க வேண்டும். செவ்வாய்க்கிழமை அல்லது சனிக்கிழமைகளில் சார்த்த வேண்டும். தொடர்ந்து ஒன்பது வாரங்கள் சார்த்தி வர நீங்கள் மேற்கொள்ளும் காரியத்தில் காணப்படும் தடைகள் நீங்கும் என்பது ஐதீகம்.

வடை மாலை வழிபாடு :

நவகிரகங்களில் நிழல் கிரகம் என்று கருதப்படும்  ராகுவுக்கு உரிய தானியம் உளுந்து. ராகுவால் மனிதனுக்கு சில தோஷங்கள் ஏற்படுவது உண்டு. அதை போக்க ராகுவிற்கு பிரியமான உளுந்தை அரைத்து, அதில் வடை செய்து மாலையாக்கி அனுமனுக்கு அணிவித்தால் ராகு தோஷம் நீங்கும்.

அனுமன் சிறு குழந்தையாக இருந்த போது பார்ப்பதற்கு  பழம் போல் காட்சி தந்த சூரியனை  பிடித்துச் சாப்பிட வேண்டும் என்று தீராத ஆசை ஏற்பட்டது. அதனை பிடிப்பதற்காக குழந்தை அனுமன் வாயு வேகத்தில் சூரியனை நோக்கிப் பறந்தார். ஒரு சிறிய குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்க முடியவில்லை.அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது.ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. இந்திரன் தனது கதாயுதத்தால் அனுமனின் கன்னத்தில் அடித்து தடுத்து நிறுத்தினார். இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு வரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் பிரியமான தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.

உப்பு மற்றும் மிளகு சேர்த்து காரமாகச் செய்யப்படும் வடைகளினாலான மாலையை ஆஞ்சநேயருக்கு  சாத்தி வழிப்பட்டால் எதிரிகள் தொல்லை நீங்கும். ராகுவால் ஏற்படும் தோஷங்கள் நீங்கும்..

துளசி மாலை வழிபாடு:

மருத்துவ குணம் வாய்ந்த துளசியை மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு சாத்தி வழிப்பட்டால் தீராத நோய்களும் தீரும்.

ஸ்ரீ ராம ஜெயம் மாலை: 

ஸ்ரீ ராம ஜயம் எழுதி மாலை கட்டி ஆஞ்சநேயர் கழுத்தில் போட்டால் சகல காரியமும் வெற்றி பெறும்.

சனிக்கிழமை வழிபாடு

அனைத்து நாட்களிலும் ஆஞ்சநேயரை வழிபடலாம். குறிப்பாக சனிக்கிழமை வழிபடுவது சிறப்பானது. சனிக்கிழமை ஆஞ்சநேயரை வழிபடுவதன் மூலம் நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும். சனி பகவானின் பாதிப்புகளில் இருந்தும் தோஷங்களில் இருந்தும் விடுபடலாம்.

இலங்கையில் இருந்து சீதையை மீட்க  கடலில் பாலம் அமைத்துக் கொண்டிருந்தனர் அனுமன் உள்ளிட்ட வானரர்கள். அப்போது அனுமனுக்கு ஏழரை சனி பிடிக்க வேண்டிய காலம். அதனால் சனி பகவான் ஸ்ரீ ராமரிடம்  அனுமனை பிடித்துக் கொள்ள அனுமதி வேண்டினார்.அதற்கு ஸ்ரீ ராமர் உன் கடமையை நீ செய்யலாம். முடிந்தால் அனுமனைப் பிடித்துக் கொள்” என்றார். அனுமன் முன் தோன்றிய சனி, “அனுமனே, நான் சனீஸ்வரன் வந்திருக்கிறேன். உனக்கு ஏழரை சனி காலம் வந்து விட்டதால் உன்னைப் பிடிக்க வந்திருக்கிறேன். உன்னைப் பிடிக்க உன் உடலில் ஏதேனும் ஒரு இடம் கொடு” என்றார். அனுமன் தன் தலையைப் பிடிக்குமாறு கூறினார். சனீஸ்வரன் தலை மீது அமர்ந்த பின், மிகப்பெரிய பாறைகள் மீது “ஸ்ரீ ராம ஜெயம்” என எழுதி தன் தலை மீது சுமந்து கடலில் வீசினார்.இதனால் பாரத்தை தாங்க முடியாத சனீஸ்வரன் சிறிது நேரத்தில் அனுமனின் தலையிலிருந்து கீழே குதித்தார். ஏழரை ஆண்டுகள் பிடிப்பதாக கூறி அதற்குள் என்னை விட்டுவிட்டீர்களே என அனுமன் கேட்க, நான்  தோல்வி அடைந்து விட்டேன் என்றார் சனி பகவான். இல்லை நீங்கள் என்னை வென்றுள்ளீர்கள். அதாவது ஏழரை ஆண்டுகளுக்கு பதிலாக ஏழரை விநாடி என்னைப் பிடித்துக் கொண்டீர்கள் என அனுமன் கூறினார்.  ராமனின் சேவை செய்ய எனக்கும் நீ வாய்ப்பு கொடுத்தால் நான் உனக்கு ஒரு வரம் தர விரும்பகிறேன். கேள் என்றார் சனி.அனுமனோ, “ராம நாமத்தை பக்தியுடன் உச்சரிப்பவருக்கு ஏழரை சனி காலமாக இருந்தாலும், அவருக்கு ஏற்படும் துன்பங்களிலிருந்து நீங்கள் தான் காத்து அருள வேண்டும்” என்ற வரத்தை கேட்டார். அன்று முதல் ஏழரை சனி பிடித்தவர்கள் மிக சிறந்த பரிகாரமாக  அனுமனை வழிபாடு செய்வது நன்மையை தரும் என்ற பரிகாரம் கூறப்படுகிறது.

மந்திர பாராயண வழிபாடு:

கீழ்க்கண்ட மந்திரங்கள் கூறி அனுமனை வழிபடலாம்.

“ஸ்ரீ ராமஜெயம்”

 

எளிய மந்திரம் :

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

இதன் பொருள்:-

அஞ்சிலே ஒன்று பெற்றான் – ஐந்து பூதங்களில் ஒன்றான வாயு பகவான் பெற்ற மைந்தனான அனுமன்

அஞ்சிலே ஒன்றைத் தாவி – ஐந்து பூதங்களில் ஒன்றான நீர்ப்பரப்பான கடலைத் தாண்டி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆருயிர்க்காக ஏகி – ஐந்து பூதங்களில் ஒன்றான ஆகாயத்தை வழியாகக் கொண்டு ஶ்ரீராமனுக்காக சென்று

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்  –ஐந்து பூதங்களில் ஒன்றான பூமி பெற்றெடுத்த சீதாபிராட்டியை இலங்கையில் கண்டு

அஞ்சிலே ஒன்றை வைத்தான் – அங்கு ஐந்து பூதங்களில் ஒன்றான தீயை வைத்தான்

அவன் எம்மை அளித்துக் காப்பான் – அவன் எம்மை அனைத்து நலன்களும் அளித்துக் காப்பான்

மற்றும் ஹனுமான் சாலீசா சுந்தரகாண்டம்

 

banner

Leave a Reply

Submit Comment