சித்ரா பௌர்ணமி : இதன் முக்கியத்துவம் மற்றும் சடங்குகள் என்ன?

தமிழ் மாதங்கள் பன்னிரண்டு ஆகும். முதாவதாக வரும் மாதம் சித்திரை மாதம்.சூரியன் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் மாதம். பௌர்ணமி என்றால் முழு நிலவு நாள். முழுமை பெற்ற நாள். ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி வரும் என்றாலும் சித்தரை மாதம் வரும் பௌர்ணமி சிறப்பு வாயந்தது. அன்று தான் சித்ரா பௌர்ணமி என்று கொண்டாடுகிறோம்.
சித்திரை பௌர்ணமி முக்கியத்துவம் :
சித்ரா பௌர்ணமி சித்திர குப்தன் பிறந்த நாள் என்பதால் அன்றைய நாள் நமது வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்த நாள் ஆகும். சித்திர குப்தன் நமது பாவ புண்ணிய கணக்குகளை எழுதுபவர் என்பதால் நாம் அன்றைய நாளுக்கு முக்கியத்துவம் அளித்து விரதம் இருப்பது சிறந்தது. இந்த பூ உலகில் நமது வாழ்க்கை பாவ புண்ணிய கணக்குகளின் அடிப்படையில் தான் அமைகிறது. அதற்கேற்ப தான் நாம் செயல்களை செய்க்கிறோம். நாம் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் அதன் அடிப்படையில் தான். எனவே தான் தமிழ் புத்தாண்டு தொடங்கும் மாதமான சித்திரையில் வரும் பௌர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சித்ரா பௌர்ணமி வழிபாடுகள்:
சித்ரா பௌர்ணமி அன்று சித்ரகுப்தன் வழிபாடு செய்வது சிறந்தது. சித்திர குப்தன் யம தர்மராஜனின் கணக்காளர் ஆவார். அவர் நமது பாவ புண்ணிய கணக்குகளை ஏட்டில் எழுதி நாம் இறக்கும் தருவாயில் யம தர்மனிடம் அறிவிப்பார் என்பது ஐதீகம். வானவில்லான அவரது தாயின் பல வண்ணங்களை உணர்த்தும் பொருட்டுதான் சித்திரகுப்தருக்கு பலவண்ண துணியைச் சாத்துவார்கள். சித்திரகுப்தன் கேது என்ற கிரகத்திற்கு உரிய கடவுள். அவருக்கு கொள்ளினால் செய்யப்பட்ட வடை அல்லது சுண்டல் படைக்க வேண்டும். மலர்களால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். சித்ர குப்தனுக்கு காஞ்சிபுரத்தில் ஒரு ஆலயம் உள்ளது. வீட்டிலேயே சித்திர குப்தனை வழிபடலாம். சர்க்கரை பொங்கல், இளநீர், அப்பம் மோர், பானகம் போன்ற கோடைக் காலத்தில் உண்ணக் கூடிய உணவு வகைகளை நிவேதனம் செய்து நாம் உண்ணலாம்.
வழிபாடு செய்வதால் என்ன பலன்? .
சித்ரா பௌர்ணமி அன்று சித்ர குப்தனை வழிபடுவதன் மூலம் நமது சிந்தனை தூய்மை அடையும். நாம் பாவ செயல்களைச் செய்யாமல் புண்ணிய செயல்களைச் செய்யும் வகையில் நமது எண்ண ஓட்டங்கள் தூய்மை அடையும். பாவ புண்ணியம் செய்ய தூண்டுவது மனம். மனதை செம்மைபடுத்தி புண்ணிய வழியில் மனதை செலுத்தும் வழியை சித்திர குப்தன் நமக்கு அருள்வார். அதன் மூலம் செம்மையான வாழ்வு கிட்டும்.
அம்பிகை வழிபாடு மற்றும் விரதம்:
சித்ரா பௌர்ணமி அன்று இந்த உலகத்தை காத்து ரட்சிக்கும் அம்பிகைக்கு பூஜை செய்து விரதம் இருப்பதன் மூலம் சகல நலன்களையும் பெறலாம். அன்று காலை எழுந்து நன்னீராடி தூய உள்ளத்துடன் அம்மனை நினைத்து பூஜை செய்ய வேண்டும். தூப தீப ஆராதனை மேற்கொண்டு விரதம் இருப்பது சிறப்பு. ஆலயம் சென்று அம்பாளை வழிபட்டு மாலை நிலவை தரிசனம் செய்து விரதத்தை முடிக்கலாம்.
