சித்ரா பௌர்ணமி ஏன் இவ்வளவு முக்கியமானது தெரியுமா?மறக்காம இந்த விஷயங்களை அன்று பண்ணிருங்க...!

பௌர்ணமி என்றால் முழு நிலவு நாள் ஆகும். முழுநிலவு, முழுமதி அல்லது பவுர்ணமி என்பது புவியில் இருந்து காணும் போது நிலவு முழுமையான வெளிச்சத்துடன் தோற்றமளிக்கும் நாளாகும். வருடத்தில் பன்னிரண்டு பௌர்ணமி நாட்கள் வரும். தமிழ் மாதமாகிய சித்திரையில் வரும் பௌர்ணமி சித்ரா பௌர்ணமி என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு பௌர்ணமிக்கும் ஒவ்வொரு விசேஷம் உண்டு என்றாலும் சித்ரா பௌர்ணமி மகத்தானது. அதனைப் பற்றி விரிவாகக் காண்போம் வாருங்கள்.
சித்ரா பௌர்ணமி ஏன் இவ்வளவு முக்கியமானது?
சித்ரா பௌர்ணமிக்கும் சித்ர குப்தனுக்கும் இருக்கும் சம்பந்தம் தான் இதற்கு முக்கிய காரணம் என்று கூறினால் மிகை ஆகாது. சித்திர குப்தன் அவதரித்த நாளாக சித்ரா பௌர்ணமி கருதப்படுகிறது. இதற்கு புராணத்தில் ஒரு கதை இருக்கின்றது. ஒரு தடவை சிவபெருமான் அழகிய சித்திரம் ஒன்றை வரைந்து கொண்டிருத்தார். அருகில் அன்னை பார்வதி தேவியும் அமர்ந்து இருந்தார் சித்திரம் அழகாக இருப்பதைக் கண்டு வியந்த பார்வதி தேவி சிவ பெருமானிடம் அதற்கு உயிர் அளிக்குமாறு வேண்டினார். சிவனும் அவ்வாறே செய்தார். இப்படித் தான் சித்திர குப்தன் அவதாரம் நிகழ்ந்தது. சித்திர குப்தன் அனைத்து கலைகளையும் சூரியனிடம் இருந்து கற்றுக் கொண்டார். தனது திறமையை சோதித்துப் பார்க்க ஒரு உயிரை படைக்கும் முயற்சியில் இறங்கினார். இதனை அறிந்த பிரம்மா உள்ளிட்ட அனைத்து தேவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் சூரியனை அணுகி இவ்விஷயத்தைக் கூற சூரியன் சித்திர குப்தனை அழைத்து படைக்கும் தொழில் பிர்ம்மாவினுடையது. அவ்வாறு படைக்கப்பட்ட உயிர்களின் பாவ புண்ணிய கணக்குகளை எழுத எமனின் உதிவியாளர் பணியை ஏற்குமாறு கூறினார். சித்திர குப்தனும் அவ்வாறே அப்பணியை மேற்கொண்டார். அன்றிலிருந்து அவர் நமது பாவ புண்ணிய கணக்குகளை எழுதி எமனிடம் அளிக்கும் பொறுப்பை மேற்கொண்டார்.
சித்ரா பௌர்ணமி அன்று நீங்கள் மறக்காமல் செய்ய வேண்டியது என்ன?
சித்திர குப்த வழிபாடு:
இந்த உலகில் மனிதராகப் பிறந்த நாம் அனைவரும் நமது அனைத்துப் பிறப்பிலும் செய்யும் பாவ புண்ணியங்களை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது விதி. எனவே சித்ரா பௌர்ணமி அன்று நமது பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தனை வழிபடுவது நல்லது. அவரை வழிபடுவதன் மூலம் நமது மனதில் பாவம் செய்யும் குணம் நீங்கி புண்ணிய எண்ணங்கள் தோன்றும். சித்திரகுப்தன் ஆலயம் தமிழ்நாட்டில் காஞ்சீபுரத்தில் இருக்கிறது. ஆலயம் சென்றும் வழிபடலாம். வீட்டிலேயே அவரை மனதில் எண்ணி வழிபாடு செய்யலாம். சித்திரகுப்தன் கேது என்ற கிரகத்திற்கு உரிய கடவுள். அவருக்கு கொள்ளினால் செய்யப்பட்ட வடை அல்லது சுண்டல் படைக்க வேண்டும். சர்க்கரை பொங்கல், இளநீர், அப்பம் மோர், பானகம் போன்ற கோடைக் காலத்தில் உண்ணக் கூடிய உணவு வகைகளை நிவேதனம் செய்து நாம் உண்ணலாம்.
பௌர்ணமி விரதம்:
பொதுவாகவே பௌர்ணமி விரதம் இருப்பது நல்லது. அதிலும் சித்ரா பௌர்ணமி அன்று விரதம் இருப்பது பல மடங்கு நன்மை அளிக்கும். காலையில் எழுந்து நீராடி பூஜை வழிபாடு செய்து விரதம் இருந்து நிலவை தரிசத்து பிறகு விரதம் முடிப்பது பௌர்ணமி விரதம் ஆகும்.
அம்பாள் வழிபாடு:
பொதுவாக பௌர்ணமி அன்று அம்பாளை வழிபடுவது சிறப்பானது. அதிலும் சித்ரா பௌர்ணமி வழிபாடு மகத்தான பலன் தரும் வழிபாடு ஆகும். ஆலயம் சென்று வழிபடலாம். அம்பாளுக்கு மஞ்சள் வஸ்திரம் சார்த்தி சர்க்கரை பொங்கல் நிவேதனம் செய்யலாம். வீட்டிலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
தான தருமங்கள் செய்தல்:
சித்ரா பௌர்ணமி அன்று ஏழை எளியவர்களுக்கும், தேவைப்படுபவர்களுக்கும் நம்மால் இயன்றதை தானமாக அளிக்கலாம். அன்னதானம் சிறப்பானது. சித்திரை மாதம் கோடைக் காலம் என்பதால் கோடைக்காலத்திற்கு தேவைப்படும் பானகம், நீர் மோர் கூட தானம் அளிக்கலாம். ஏழை எளியவர்களுக்கு செருப்பு, குடை, பருத்தி ஆடைகள் போன்றவற்றை தானம் அளிக்கலாம். தயிர் சாதம் அளிக்கலாம்.
எனவே சித்ரா பௌர்ணமி அன்று உங்களால் முடிந்த அளவு விரதம் இருந்து தான தருமங்களை மேற்கொண்டு உங்கள் புண்ணிய கணக்குகளை அதிகரித்துக் கொண்டு சித்திர குப்தனின் ஆசிகளைப் பெறுங்கள்.
