Mahalaya Paksha is the Ultimate Powertime to invoke Ancestral Blessings for Abundance, Material Comforts, Progress & Success Join Now
AstroVed Menu
AstroVed
search
search

சண்டி தேவியின் சிறப்புகள்

October 23, 2020 | Total Views : 2,447
Zoom In Zoom Out Print

அசுரர்களை அழிக்க அன்னை ஆதிபராசக்தி எடுத்த உக்கிர அவதாரமே துர்கா தேவி. துர்கா தேவிக்கு சண்டி தேவி என்ற மற்றொரு திருநாமமும் உண்டு. சண்டி பிரம்மத்தின் சக்தியை குறிக்கிறது. தீமைகளையும், தீயவர்களையும் அழிக்க அன்னை பார்வதி எடுத்த அவதாரமாகும். சண்டி தேவியின் பெருமைகளைக் கூறும் நூல்களுள் முதன்மையானது தேவி மகாத்மியம் ஆகும். இது மார்க்கண்டேய புராணத்தில் அடங்கியது. எழுநூறு மந்திரங்களைக் கொண்டது. ஆகவே இந்நூலை சப்த சதி என்றும் கூறுவர்.  தினசரியோ அல்லது நவராத்திரி நாட்களிலோ இதை பாராயணம் செய்து வந்தால் சகல காரிய சித்தியும் உண்டாகும் என்பது ஐதீகம்.

பிரம்மாவின் வரம்

பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்தான் மஹிசாசுரன் எனும் அசுரன். பிரம்மனும் அவனது தவத்தில் மகிழ்ந்து என்ன வேண்டும் எனக் கேட்டார். மஹிசாசூரன் சாகாவரம் வேண்டும் எனக் கேட்டான். அதற்கு பிரம்மா ஜனனம் ஒன்று இருந்தால் மரணம் என்பது நிச்சயம். இது இயற்கையின் நியதி. ஆகவே உனக்கு மரணம் எப்படி வரவேண்டும் என்று வேண்டுமானால் கேள் என்றார். மஹிசாசுரன் புத்திசாலித்தனமாக கேட்பதாக எண்ணிக் கொண்டு கருவிலே உருவாகாத ஒரு பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு ஏற்பட வேண்டும் எனக் கேட்டான். பிரம்மனும் அந்த வரத்தையே அவனுக்களித்தார். அதாவது கருவிலேயே உருவாகமல் ஒரு பெண் எப்படி பிறக்க முடியும் என்பது மஹிசாசுரனின் எண்ணம். வரத்தைப் பெற்ற மகிசாசுரனுக்கு கர்வம் தலைக்கேறியது. தேவர்களையும், முனிவர்களையும், ரிஷிகளையும் துன்புறுத்தினான்.

சண்டி தேவியின் அவதாரம்

மகிசாசுரனின் கொடுமைகளை தாங்க முடியாத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். இதைக் கேட்ட சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மா மூவரும்  கடும் கோபமுற்றனர். இந்த  மூன்று பேர் முகத்திலிருந்தும் ஒரு பேரொளி தோன்றியது. பின்னர் அந்த மூன்று ஒளியும் சேர்ந்தது மிகப்பிரம்மாண்டமாக மலை போல் ஜொலித்தது. அதையடுத்து தேவர்களின் சரீரங்களிலிருந்து ஒளி தோன்றி அந்த ஒளியோடு கலந்தது. எல்லா திசைகளிலும் அந்த ஒளியின் ஜ்வாலைகள் வீசியது. அதிலிருந்து தோன்றினாள் சண்டி தேவி. தேவர்கள் சண்டி தேவியின் உருவத்தைப் பார்த்து மகிழ்ந்தனர். மஹிசாசுரனுடன் போர் தொடங்கியது. போரில் அனைத்து அசுரர்களையும், மஹிசாசுரனையும் சண்டி தேவி வதம் செய்தாள். சண்டி தேவி போரில் புரிந்த வெற்றியையும், தேவியின் பெருமைகளையும் தேவி மகாத்மியம் எனும் நூல் எடுத்துரைக்கிறது.

சண்டி ஹோமம்

உலகை ஆளும் அன்னை பார்வதி பல காலங்களில் பல வடிவங்களை எடுத்து உலகை காத்தருளி வந்திருக்கிறாள். அதில் அசுரர்களை வதம் செய்ய அன்னை எடுத்த வடிவம் துர்கா தேவி வடிவமாகும்.  துர்கா தேவிக்கு மங்கள சண்டிகா என்ற மற்றொரு திருநாமும் உண்டு. துர்க்கையின் அருளைப் பெறுவதற்காக செய்யப்படும் ஹோமம் தான் சண்டி ஹோமம். ஹோமங்களுக்கெல்லாம் தலையாய ஹோமம் இது எனவும் கூறப்படுகிறது.
சண்டி ஹோமம் அனுபவம் பெற்ற 9 வேதியர்களை கொண்டு செய்யப்படுகிறது. அவர்கள் குறித்து தரும் சுபதினத்தில் கோயிலிலோ அல்லது மண்டபங்களிலோ ஹோமம் செய்யப்படுகிறது. இந்த ஹோமத்தில் பல தெய்வங்களை பூஜித்தும், 700க்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த மந்திர உருவேற்றி பூஜை செய்யப்படுவதால் ஹோமத்தை செய்பவர்களுக்கு நிச்சயமாக பலன்களை அளிக்கிறது என்று நம்பப்படுகிறது. பூஜையின் இறுதியில் 2 வயது முதல் 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை துர்கா தேவியாக பாவித்து, மரியாதை செய்து, அவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பிற பரிசுப் பொருட்கள் வழங்கி அவர்களின் ஆசிகள் பெறப்படுகிறது.

விஜயதசமியன்று சண்டி ஹோமம்

சிவனுக்கு  சிவராத்திரி, அம்பிகைக்கு நவராத்திரி என்பார்கள். நவராத்திரி ஒன்பது நாளும் அம்பிகையை கொண்டாட வேண்டும். சண்டி என்பவள் மூன்று சக்திகளும் ஒன்றிணைந்த வடிவம். இந்த சக்தியை நினைத்து செய்யப்படுவது தான் சண்டி ஹோமம். நவசக்திகளின் வடிவமாக சண்டி தேவி விளங்குகிறாள். ஆகவே நவராத்திரியின் கடைசி நாளான விஜயதசமியன்று நவசக்திகளின் அருளை வேண்டி செய்யப்படுவதே சண்டி ஹோமம். அதே போல் சரஸ்வதி பூஜை நாளில் சண்டி ஹோமம் செய்வது பல நூறு மடங்கு பலன்களைத் தரும் என்பது ஐதீகம். எவரொருவர் சண்டி ஹோமத்தைச் செய்தாலும், அல்லது சண்டி ஹோமத்தில் கலந்து கொண்டாலும்  சகல தோஷங்களில் இருந்தும் விடுபடலாம். தீய சக்திகளிடமிருந்தும், எதிரிகளிடமிருந்தும் தப்பித்து, வெல்லலாம் என்பது ஐதீகம்.

சண்டி ஹோமத்தின் பலன்கள்

எவ்வளவு பரிகாரங்கள் செய்தாலும் பலன் இல்லாத நிலை, கிரகங்களினால் ஏற்படும் பிரச்னைகள்,  பயம், மரண பயம், எதிரிகள் தொல்லை அழிய, எவ்வளவு பிரயத்தனம் செய்தும் முடிக்க முடியாத காரியங்கள் வெற்றி பெற, செல்வம் சேர, தரித்திரம் விலக இந்த சண்டி ஹோமத்தைச் செய்தோ, அல்லது கலந்து கொண்டோ தேவியின் அருளைப் பெறலாம். வெளியில் கூற முடியாத காரியங்கள் வெற்றி பெற வேண்டுமானால் சண்டியை சரணடைவதே சிறந்தது. அமாவாசை, அஷ்டமி, நவமி, சதுர்தசி போன்ற திதிகளில் இந்த ஹோமத்தை செய்தால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

banner

Leave a Reply

Submit Comment