அட்சய திருதியை 2025 | பூஜை நேரம் மற்றும் தங்கம் வாங்கும் நேரம்

“அட்சய” என்பது வடமொழிச் சொல் ஆகும். இந்த சொல்லிற்கு அள்ள அள்ளக் குறையாதது என்று பொருள். திருதியை என்பது மூன்றாம் திதி. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறை அமாவாசை அடுத்த மூன்றாம் நாளில் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டிற்கான (2025) பூஜை நேரம் மற்றும் தங்கம் வாங்கும் நேரம்:
இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30, 2025 புதன்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை என்றால் பொன் என்னும் தங்கத்தை வாங்குவது சிறப்பு என்பார்கள். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது. ரோகிணி நட்சத்திரம் மற்றும் புதன்கிழமை சேர்ந்து வரும் நாளில் இந்த ஆண்டு அட்சய திருதியை அமைந்திருப்பது மிகவும் சிறப்பானது ஆகும். ஏப்ரல் 29ம் தேதி இரவு 05.29 மணிக்கு துவங்கி, ஏப்ரல் 30ம் தேதி மாலை 06.41 வரை திருதியை திதி உள்ளது. 30 ஆம் தேதி காலை 5:41 மணி முதல் 11.55 மணி வரை பூஜை செய்ய நல்ல நேரம். தங்கம் வாங்க ஏப்ரல் 30 காலை 05:41 முதல் மதியம் 12.18 மணி வரை நல்ல நேரம்.
அட்சய திருதியை சிறப்பம்சங்கள் :
இந்த நாளில் நாம் மேற்கொள்ளும் ஜெபம், யாகம், பூஜை மற்றும் தானங்கள் நமக்கு பல மடங்கு நற்பலன்களைப் பெற்றுத் தரும்..எனவே இந்த நாளில் விஷ்ணுவின் திருமார்பில் உறையும் லக்ஷ்மி தேவியை வணங்கி வழிபட வேண்டும் நவ நிதியை அளிக்கும் குபேர வழிபாடும் மேற்கொள்ளலாம். சிவனோடு சேர்ந்த சக்தியையும் வழிபடலாம். அட்சய திருதியை அன்று மேற்கொள்ளும் இறை வழிபாட்டின் மூலம் செல்வ வளம் பெருகும். எடுக்கும் காரியங்களில் வெற்றி கிட்டும் என்பது ஐதீகம். அன்று மேற்கொள்ளும் தான தருமங்கள் புண்ணியத்திற்கு வழி வகுக்கும். அவரவர் தம்மால் முடிந்த தானங்களை அளிக்கலாம். மேலும் அட்சய திருதியை அன்று தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டம் வரும் என்று நம்புகிறார்கள்
இந்த நன்னாளில் நடந்த பல முக்கிய புராண நிகழ்வுகளைப் பற்றி அறியலாமா?
∙ அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது
∙ அன்னை பார்வதி அன்னபூரணியாக அவதரித்து, பிட்சாடனராக வந்த சிவபெருமானுக்கு அன்னம் இட்ட நாள்.
∙ திரௌபதி அட்சய பாத்திரம் பெற்ற நாள்
∙ குபேரன் லக்ஷ்மி தேவியை வணங்கி நிதிகளைக் காக்கும் பதவி பெற்ற நாள்.
∙ இந்த நாளில் தான் கிருஷ்ணன் தனது நண்பரான குசேலரின் வாழ்வை மாற்றி அமைத்தார். வறுமையில் இருந்து நீங்கி குசேலர் செல்வம் பெற்ற நாள்.
∙ வியாசர் கூறக் கூற விநாயகர் மாகாபாரதம் எழுதிய நாள்
∙ பரசுராமர் அவதரித்த நாள்
∙ பகீரதன் முயற்சியால் கங்கை, பூமியில் முதல் முதலில் பிரவாகித்த நாள்.
அட்சய திருதியை பூஜை:
அட்சய திருதியை அன்று அதிகாலை எழுந்து நீராடி தூய ஆடை உடுத்திக் கொள்ள வேண்டும். முதல் நாளே வீட்டை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பூஜை அறையில் விளக்கேற்றி வழக்கம் போல பூஜைகளை செய்ய வேண்டும். முதலில் விநாயகர் பூஜை செய்ய வேண்டும். குல தெய்வத்தை வணங்க வேண்டும். பிறகு இஷ்ட தெய்வத்தை வணங்க வேண்டும். அன்று திருமால் மற்றும் அவரது திருமார்பில் உறையும் மகா லட்சுமிக்கு சிறப்பு பூஜை செய்வது சிறப்பு. வெற்றிலை பாக்கு பால் பழங்களுடன் வீட்டில் பானகம், நீர் மோர் தயாரித்து நிவேதனம் செய்ய வேண்டும். ஆலயம் சென்று இறைவனை வழிபட வேண்டும்.
அட்சய திருதியை தானம் :
குறிப்பாக அன்னதானம். ஏழைகளுக்கு உணவு வழங்குவது ஒரு நல்ல செயலாகக் கருதப்படுகிறது, இது பசியைப் போக்க உதவுவது மட்டுமல்லாமல், இந்து வேதங்களின்படி மகத்தான ஆசீர்வாதங்களையும் புண்ணியங்களையும் பெற்றுத் தருகிறது. இந்த புனிதமான நாளில் மற்றவர்களுக்கு உணவளிப்பதன் மூலம், ஒருவர் நிரந்தர செழிப்பையும் தெய்வீக ஆசீர்வாதங்களையும்பெற இயலும் என்பது ஐதீகம்.
அட்சய திருதியை அன்று பானகம் மற்றும் நீர் மோர் தானம் செய்யலாம்.
அரிசி, நெய், உப்பு, காய்கறிகள். பழம் வாங்கி ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.
வஸ்திர தானம் செய்யலாம்.
குடை, விசிறி, செருப்பு தானம் செய்யலாம்.
வசதி இருப்பவர்கள் தங்கம், வெள்ளி வாங்கி ஏழை எளியவர்களுக்கு தானம் அளிக்கலாம்.
