பைரவர் சிவ பெருமானின் அம்சமாகக் கருதப்படுகிறார். சிவபெருமானின் அறுபத்தி நான்கு வடிவங்களுள் இவர் ஒருவர். இவரது வாகனம் நாய் ஆகும். மூவுலகங்களையும் அச்சுறுத்தி வந்த அரக்கர்களை அழிக்க சிவபெருமானின் தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய தெய்வம் தான் பைரவ மூர்த்தி என்பதாக புராணங்கள் வாயிலாக நாம் அறிகிறோம்.
பைரவர் வழிபாடு
பைரவர் என்றால் பாவங்களை நீக்குபவர். பயத்தைப் போக்குபவர். படைத்தல் காத்தல் அழித்தல் என்னும் முத்தொழிலைப் புரிகிறார். நாம் நினைத்தவுடன் கருணைகொண்டு ஓடோடி வந்து நம்மைக் காக்கும் தெய்வமாக அவர் விளங்குகிறார். எனவே பைரவர் வழிபாடு நமக்கு கை மேல் பலன் அளிக்கும். வழிபாடு ஆகும்.
பைரவ விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தேய்பிறை அஷ்டமி அவருக்கு உகந்த நாள். அதிலும் செவ்வாய்க்கிழமை வருகின்ற அஷ்டமியானது சிறப்பு வாய்ந்ததாகும். பைரவ மூர்த்தி விரதத்தினை தொடர்ந்து இருபத்து ஒரு முறை இருப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது.
தேய்பிறை அஷ்டமி வழிபாடு
பைரவர் வழிபாட்டை அனைத்து தினங்களிலும் செய்யலாம் என்றாலும் பிரதி மாதம் வருகின்ற தேய்பிறை அஷ்டமி பைரவ வழிபாட்டிற்குரிய சிறப்பான தினமாக கருதப்படுகிறது. இருக்கிறது. இந்த தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு சிவப்பு நிற வஸ்திரம் அணிவித்து, செவ்வரளி மலர்கள் சமர்ப்பித்து, செவ்வாழைப் பழம் நைவேத்தியம் வைத்து, தேங்காய் அல்லது பூசணிக்காயில் நெய் ஊற்றி, தீபமேற்றி வழிபாடு செய்து வருபவர்களுக்கு வாழ்வில் துன்பங்கள் அனைத்தும் நீங்கி இன்பங்கள் பெருகும் என்பது ஐதீகம் .
வழிபாட்டிற்குரிய பொருட்கள்
தாமரைப்பூ, வில்வ மாலை, தும்பைப்பூ, ஆகியவை பைரவருக்கு உகந்ததாக கூறப்படுகிறது. வாசனைப் பூக்களில் மல்லிகைப்பூவை தவிர்த்து மற்ற அனைத்து பூக்களும் பைரவருக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. அபிசேகப்பிரியான சிவபெருமானின் அம்சம் என்பதால், பைரவருக்கு சந்தன அபிஷேகம் மிகவும் உகந்ததாக கூறப்படுகிறது. அதனுடன் குங்குமப்பூ. பச்சை கற்பூரம் போன்ற வாசனை திரவியங்களும் , பயன்படுத்தப்படுகின்றன.
தீப வழிபாடு
தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். பைரவரின் நல்லாசிகள் கிட்டும். பஞ்ச என்றால் ஐந்து தீபம் என்றால் விளக்கு. பஞ்ச தீபம் என்பது இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகியவற்றில் ஏற்றும் விளக்கு ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம். பைரவருக்கு இந்த பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.
பைரவ காயத்ரி மந்திரம் 1:
”ஓம் சூல ஹஸ்தாய வித்மஹே ஸ்வாந வாஹாய தீமஹி
தன்னோ பைரவ: ப்ரசோதயாத்”
பைரவர் காயத்ரி மந்திரம் 2:
“ஓம் திகம்பராய வித்மஹே தீர்கதிஷணாய தீமஹி
தன்னோ பைரவ: ப்ரசோதயாத்”
பைரவர் காயத்ரி மந்திரம் 3:
“ஓம் கால காலாய வித்மஹே! காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ: ப்ரச்சோதயாத்”
மந்திரம் ஜெபிக்கும் முறை
காலையில் எழுந்து குளித்து முடித்து வீட்டையும் தூய்மை செய்து கொள்ள வேண்டும். விளக்கேற்றி விட்டு பைரவரை மனதில் நினைத்துக் கொண்டு பைரவ காயத்ரி மந்திரத்தை 108 முறை ஜெபிக்க வேண்டும். பைரவ காயத்ரி மந்திரம் ஜெபிப்பதன் மூலம் துன்பங்கள் விலகும். ஆபத்துக்கள் மற்றும் பாவங்கள் ஒழியும். பொருளாதார நிலை மேம்படும். திருமணத் தடைகள் நீங்கும். குழந்தைப் பேறு சித்திக்கும். ஆரோக்கியம் மேம்படும் வாழ்வில் நலமும் வளமும் பெருகும்.

Leave a Reply