AstroVed Menu
AstroVed
search
search

முருகனின் அறுபடை வீடுகளும் அதன் சிறப்புகளும்

dateOctober 15, 2023

முருகப்பெருமானுக்கு தமிழ்நாட்டில் ஆறு பிரசித்தி பெற்ற ஆலயங்கள்  உள்ளன. அவை ஒட்டுமொத்தமாக 'அறுபடை வீடு' என்று அழைக்கப்படுகிறது. தமிழில் 'அரு' என்றால் ஆறு, 'வீடு' என்றால் ஆலயம். முருகப்பெருமானின் ஒவ்வொரு உறைவிடமும் புராணங்களில் குறிப்பிடப்பட்ட ஒரு நிகழ்வை நினைவுபடுத்துகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகிய ஆறு தலங்கள் அறுபடை வீடுகளாகும்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முருகனின் அறுபடை வீடுகளில், முதல் படை வீடாகத் திகழ்கின்றது. இந்தக் கோயில், மதுரைக்கு தென்மேற்கில் சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள திருப்பரங்குன்றம் என்னும் ஊரில் உள்ளது. இங்குதான்முருகன், தெய்வானையைத் திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.

இது ஒரு குகைக் கோவிலாகும். கருவறையில் ஐந்து குகைகள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளன. 700 அடி உயர பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் கணபதி, சிவன், துர்க்கை தேவி மற்றும் விஷ்ணு ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. திருப்பரங்குன்றம் திருமணங்கள் நடத்துவதற்கு உகந்த தலமாகவும் கொண்டாடப்படுகிறது.கோயிலின் இடதுபுறத்தில் சரவணப் பொய்கை என்ற புனித நீர் தொட்டியைக் காணலாம், அதில் இருந்து யானை மூலம் தண்ணீர் கொண்டு வந்து அபிஷேகம் செய்யப்படும்

திருச்செந்தூர்

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் திருச்செந்தூருக்கு இரண்டாம் இடம் உண்டு. இங்கு செந்தில் ஆண்டவர், செந்தில் நாதன், செந்தில் குமார் என பல்வேறு பெயர்களில் வழிபடப்படுகிறார். இது முருகப்பெருமானின் தனிச்சிறப்பு வாய்ந்த தலமாகும். ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக் கோவில்களாக அமைந்துள்ளது. 157 அடி உயரம் கொண்ட இக்கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு, தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகக் சிவபூஜை செய்தார். இந்த கோலத்திலேயே முருகன் வலக்கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இத்தலத்திற்கு திருச்சீலைவாய் என்றும், ஜயந்திபுரம் என்றும் பெயருண்டு. இங்கு முருகப் பெருமான் சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது. தமிழர்கள் இந்த நிகழ்வினை ஆண்டுதோறும் சம்ஹார திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.அன்றைய தினம் சூர பத்மன் மற்றும் அவரது சகோதரர்களை இறைவன் வதம் செய்யும் திருவிழாவைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடுவார்கள்.

பழனி

முருகனின் மூன்றாம் படைவீடான பழனி, சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியாகும். 150 மீ உயரமுள்ள பாறையின் உச்சியில் முருகப்பெருமான் வீற்றிருக்கும் இத்தலத்தில் அவர் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி என்று பெயர் பெறுகிறார். முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களை போன்று செதில்களை கொண்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது இந்த சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்த சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது இது மிகச்சிறந்த மருந்தாக கருதப்படுகிறது.

முருகப்பெருமான் இத்திருக்கோயிலுக்கு எப்படி வந்தார் என்று ஒரு புராணக்கதை உள்ளது. ஒரு  முறை நாரதர் ஞானப் பழத்தைக் கொண்டு வந்து சிவ பெருமானிடம் கொடுத்தார். சிவன் அதனை தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க விரும்பினார். ஆனால் பழத்தை ஒருவர் தான் உண்ண முடியும் என்ற காரணத்தால் சிவன் முருகன் மற்றும் விநாயகரிடம் . உலகத்தை  முதலில் சுற்றி முடிப்பவருக்கு ஞானப்பழம் கிடைக்கும் என்றார். முருகப்பெருமான் உடனே தனது வாகனமான மயில் மீது ஏறி உலகைச் சுற்றி வந்தார். விநாயகப் பெருமான் தனது பெற்றோரை வலம் வந்து, உலகத்தை அடையாளப்படுத்தி பழத்தைப் பெற்றார். திரும்பிய முருகப்பெருமான் தான் ஏமாற்றப்பட்டதைக் கண்டார். கோபத்தில், அவர் தனது குடும்பத்தை துறந்து, நிரந்தரமாக குடியேற இந்த இடத்திற்கு வந்தார். சிவபெருமானும் பார்வதி தேவியும் அவரை சமாதானப்படுத்த வந்தனர். அந்த இல்லத்திற்கு ‘பழனி’ என்று பெயர் சூட்டினர்.

இங்கு ஆண்டுதோறும் ‘தைப்பூசம்’ சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து இறைவனை தரிசனம் செய்கின்றனர். அழகிய மண்டபங்கள் மற்றும் செதுக்கப்பட்ட தூண்களுடன் மிகவும் விசாலமான ஆலயம். ஆண்டு முழுவதும் இக்கோயிலுக்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தங்கத் தேர் இக்கோயிலின் சிறப்பு.

சுவாமிமலை

இது முருகப்பெருமானின் நான்காவது தலமாகும். முருகப்பெருமான் இக்கோயிலில் 'தகப்பன்சுவாமி' எனப் புகழ் பெற்று காணப்படுகிறார். குருவாகி இருந்து அருளியதால் குருமலை என்றும், கந்தாசலம், சிரகிரி, சிவமலை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு பெயர் திருவேரகம் என அழைக்கப்படுகிறது. இறைவன் பிரணவ மந்திரமான ‘ஓம்’ என்பதன் பொருளைத் தன் தந்தையான சிவபெருமானுக்கு எடுத்துரைத்ததால் இங்கு நம் பெருமான் ‘சுவாமி நாதன்’ என்று பெயர் பெற்றார். இக்கோவில் தமிழ்நாட்டின் கும்பகோணத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. தரை தளத்தில் சுந்தரேஸ்வரர் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில்கள் உள்ளன. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி கொண்டாடப்படுகிறது.

ஒருமுறை, படைப்புத் தொழிலை செய்து வந்த பிரம்மா கைலாசத்திற்குச் சென்ற போது  ​​​​குழந்தை முருகப்பெருமான் அவரிடம் 'ஓம்' என்ற பிரணவ மந்திரத்தின் பொருளைக் கேட்டார். பிரம்மாவிற்கு அதன் பொருள் தெரியாததால் ​​பகவான் அவரை சிறையில் அடைத்தார். பிரம்மா சிறையில் அடைக்கப்பட்டதால், அனைத்து படைப்புகளும் ஸ்தம்பித்தன, தேவர்கள் பிரம்மாவை விடுவிக்கும்படி சிவபெருமானிடம் வேண்டினர். பிரம்மாவின் அறியாமைக்கு சிறைவாசம் நியாயமான தண்டனை என்று முருகப்பெருமான் கூறிய போது, ​​சிவபெருமான் அவரிடம் ‘ஓம்’ என்பதன் அர்த்தம் தெரியுமா என்று கேட்டார். 'ஓம்' என்பதன் அர்த்தம் தனக்குத் தெரியும் என்றும், அவரை குருவாக ஏற்று, பக்திமிக்க சிஷ்யனாக விளக்கத்தைக் கேட்டால் மட்டுமே அதன் அர்த்தத்தை விளக்க முடியும் என்றும் முருகப்பெருமான் கூறினார். சிவபெருமான் முருகனின் வேண்டுகோளுக்கு இணங்கி, 'ஓம்' என்பதை ஒரு சிஷ்யனாகக் கேட்டார்.

திருத்தணி

திருத்தணி முருகன் கோயில்  முருகனின் அறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. தமிழ்நாட்டின் சென்னைக்கு வடக்கே சுமார் 50 கிமீ தொலைவில் 250 மீ உயரமுள்ள மலையில் இக்கோயில் அமைந்துள்ளது.இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில்.இந்த கோயில் அருணகிரிநாதர், முத்துச்சாமி தீட்சிதர் உள்ளிட்டோரால் பாடால் பெற்ற தலம். தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் மற்றும் வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர் புரிந்த தலம் திருத்தணி ஆகும். ஆகையால் இந்த தலம் தணிகை எனப் பெயர் பெற்றது. இந்த முருகனிடம் வேல் கிடையாது. அலங்காரத்தின் போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர். வள்ளி தெய்வானை இருவருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. திருத்தணியில் ஆண்டுதோறும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் வரும் ஆடி கிருத்திகை திருவிழா பிரசித்தி பெற்றது. இத்திருவிழாவையொட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து முருகப்பெருமானுக்கு மலர் காவடி நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

பழமுதிர்ச்சோலை

அறுபடை வீடுகளில் கடைசியாக வரும் படைவீடு தமிழ்நாட்டின் மதுரையிலிருந்து சுமார் 19 கிமீ தொலைவில் அழகர் மலை மீது இருக்கக் கூடிய சோலைமலையாகும். மலையின் உச்சியில் முருகப்பெருமான் நிற்கிறார். பழமுதிர்ச்சோலை என்பது முருகப்பெருமான் தன் மனைவிகளான ஸ்ரீ வள்ளி மற்றும் ஸ்ரீ தெய்வானையுடன் நின்ற தலமாகும். இங்கு ஒளவை பாட்டியிடம் சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா என்று கேட்ட முருகனின் ஞானத்தைப் பார்த்து நீ சாதாரண மானிடராக இருக்க முடியாது என தெரிந்து கொண்டார். இந்த திருத்தலத்தில் உலக வாழ்கைக்கு தேவை கல்வி அறிவு மட்டும் போதாது இறையருள் என்ற மெய் அறிவை உணர வேண்டும் என்பதை தன் திருவிளையாடலால் முருகன் உணர்த்திய இடம்.


banner

Leave a Reply