கிருஷ்ண ஜெயந்தி பற்றிய அரிய தகவல்கள்

கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி. கிருஷ்ணன் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி பற்றிய அரிய தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணாவதாரமாகும்.
கண்ணன் என்ற பெயரிலும், வட இந்தியர் கண்ணையா என்ற பெயரிலும் இவரை அழைக்கின்றனர். இது தவிர, கேசவன், கோவிந்தன், கோபாலன், போன்ற பல பெயர்களால் வழங்கப்படுகிறார்.
கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தா வனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.
கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.
கிருஷ்ணன் மொத்தம் 16,008 மனைவிகளை கொண்டிருந்தார். அவற்றுள் எண் மனையாட்டி என அழைக்கப்பட்ட எட்டு மனைவிகள் முதன்மையானவர். அவர்கள் ருக்மணி, சத்தியபாமா, சாம்பவதி,நக்னசித்தி, காளிந்தி, மித்திரவிந்தை, இலக்குமனை, பத்திரை ஆவர்.
நரகாசுரனின் மாளிகையில் 16000 பெண்கள் அடைக்கப்பட்டிருந்தனர். கிருட்டிணர் நரகாசுரனை கொன்ற பிறகு அப்பெண்களை அவர்களின் குடும்பங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால் அனைவரையும் கிருட்டிணர் ஒரே நாளில் மணந்தார்
அருச்சுனனுக்கு கிருஷ்ணர் விராட் விசுவரூபத்தை காட்டினார்
பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே நடத்த குருக்ஷேத்திரப் போரில் தனது சேனையை கௌரவர்களிடம் கொடுத்து விட்டு தான் ஆயுதம் ஏந்தாமல் அருச்சுனனின் தேரோட்டியாக பணி புரிந்தார். இந்தப் போர் தொடங்கும் முன் இவர் அருச்சுனனிடம் மேற்கொண்ட உரையாடலே பகவத் கீதை ஆனது.
வருடந்தோறும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள் கிருஷ்ண ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.
கிருஷ்ணர் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால்திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.
கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ் ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.
கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.
கிருஷ்ண ஜெயந்தியன்று சிறுவர் – சிறுமிகளை கண்ணன், ராதைபோல வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.
கண்ணன் சிவபெருமானிடம், அவரின் அம்சமான ஒரு குழந்தை தனக்கு வேண்டுமென விண்ணப்பித்தார். சிவபெருமானும் கண்ணனுக்கு கேட்ட வரத்தினை அளித்தார். கண்ணன் மற்றும் சாம்பவதி தம்பதிகளுக்கு சிவபெருமானின் அம்சத்துடன் ஒரு குழந்தை பிறந்தது. அக்குழந்தை சாம்பன் என்று அறியப்படுகிறது
கிருஷ்ணர் வைகுண்டம் புறப்படும் போது அவரது பக்தரான உத்தவரின் வேண்டுதலுக்காக அவருக்கு ஆத்ம உபதேசம் செய்தார். இதனை உத்தவ கீதை என்பர்.
கிருட்டிணர் ஒரு முறை பிரபாச பட்டினத்தில் காட்டில் அமர்ந்திருந்த போது, ஒரு வேடனின் அம்பு, கிருட்டிணரின் காலில் தாக்கப்பட்டதால் உடலை பூவுலகில் விட்டு வைகுண்டம் எழுந்தருளினார்.
‘கோ’ என்றால் ‘பசு’ ‘இந்தா’ என்றால் ‘வாங்கிக்கொள்’ என்று பொருள் வரும். கோவிந்தா... கோவிந்தா... என சொல்லச்சொல்ல பசுதானம் செய்த புண்ணியம் கிடைத்துக் கொண்டே இருக்குமாம்.
கிருஷ்ணரை வழிபடும் போது மறக்காமல் பஜகோவிந்தம் பாட வேண்டும். ஆதி சங்கரர் சென்ற இடங்களில் எல்லாம் ‘பஜகோவிந்தம்’ பாடுங்கள் என்பதை வலியுறுத்தி கூறினார். பஜகோவிந்தம் பாடினால் மரண பயம் நீங்கும் என்பது ஐதீகமாகும்.
கண்ணனின் நிற்கும் தோற்றத்தில் மூன்று வளைவுகளைத் தரிசிக்கலாம். இதற்கு ‘திரிபங்கி’ என்று பெயர். ஒரு திருவடியை நேரே வைத்து, மறு திருவடியை மாற்றி வைத்திருப்பது ஓர் வளைவு! இடுப்பை வளைத்து நிற்பது மற்றொன்று! கழுத்தைச் சாய்த்து கோவிந்தன் குழல் கொண்டு ஊதுவது மூன்றாவது வளைவு! இப்படி நிற்பதனால் கிருஷ்ணனை ‘திரிபங்கி லலிதாகாரன்’ என்று வடமொழித் தோத்திரங்கள் போற்றுகின்றன.இந்த மூன்று வளைவுகளும் அறம், பொருள், இன்பத்தைக் குறிக்கின்றன.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.
கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை ராசலீலா என்று கூறுவார்கள். இன்றும் அதனை நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.
கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற கீதகோவிந்தம், ஸ்ரீமந் நாராயணீயம், கிருஷ்ண கர்ணாம்ருதம் ஆகிய ஸ்தோத்ரங்களால் துதித்து வணங்க வேண்டும்.
பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.
விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும்.
தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.
கிருஷ்ணனை வழிபட வழிபட செல்வம் இல்லாதவருக்கு செல்வம் சேரும். குருடர்களுக்கு கண் பார்வை கிட்டும். ஊமைகளுக்கு பேச்சு வரும்.கால் இல்லாதவர்களுக்கு கால் இல்லாதவருக்கு கால்கள் கிட்டும்.
கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.
கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.
பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.
கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக ஒரு ஐதீகம்.
ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணரின் அருள் பார்வை நம் மீது படும்.
கிருஷ்ண ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதம் இருந்து கண்ணனை வழிபட்டால் தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்கள் விலகும் என்பது ஐதீகம்
