AstroVed Menu
AstroVed
search
search
x

பிள்ளையாருக்கு ஏன் தோப்புக்கரணம் போட வேண்டும் ?

dateJune 29, 2023

முழுமுதற் கடவுளாக போற்றி வணங்கப்படுபவர் பிள்ளையார். பிள்ளையாரை வணங்கும் போது நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வதும், தோப்புக்கரணம் போடுவதும் பிள்ளையாரை வழிபடும்போது பக்தர்கள் அவசியம் கடைப்பிடிக்கவேண்டிய நியதிகள் ஆகும்.

பிள்ளையாருக்கு முன்பாக இரண்டு கைகளையும் நெற்றிப்பொட்டில் குட்டிக் கொள்வார்கள். இரண்டு காது மடல்களையும் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவார்கள்.வேறு எந்த தெய்வத்திற்கும் இல்லாத ஒரு வழிபாட்டு முறை என்றால் அது பிள்ளையாருக்கு நாம் போடும் தோப்புக்கரணம் என்று கூறலாம். ஆம் நாம் பிள்ளையாருக்கு மட்டும் தான் தலையில் குட்டிக் கொள்கிறோம் ; தோப்புக்கரணம் போடுகிறோம்.. இதற்கு  புராண கதையும் அறிவியல் காரணமும் உண்டு எனவே தோப்புக்கரணம் போடுவதன் மூலம் நாம் அறிவியல் ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் பயன் அடையலாம்.

முதலில் தோப்புக்கரணம் போடும் முறை எப்படி உருவானது எனபதை நாம் புராண கதை மூலம் அறியலாம்.

புராண கதை 1:

யானை முகம் கொண்ட அசுரன் ஒருவன் இருந்தான், ஆணை முகம் என்பதால் அவனுக்கு கஜமுகாசுரன் என்று பெயர். அவன் சிவபெருமானை நோக்கி கடுமையாக தவம் புரிந்து வந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த சிவ பெருமானும் என்ன வரம் வேண்டுமோ கேள் தருகிறேன் என்றார். கஜமுகாசுரன், மும்மூர்த்திகளால், தேவர்களால், அசுரர்களால், மனிதர்களால், விலங்குகளால், ஆயதங்களால்  தனக்கு அழிவு நேரக்கூடாது என்று கேட்டுக் கொண்டான். சிவ பெருமானும் அவன் கேட்கும் வரத்தை வழங்கினார். இதனால் கர்வம் கொண்ட கஜமுகாசுரன் பலவிதத்திலும் மக்களுக்கும், தேவர்களுக்கும் கணக்கிலடங்காத துன்பங்களைக் கொடுத்தான்.  ஒவ்வொரு நாளும், தேவர்களை சின்னக் குழந்தைகளைப் போல பாவித்து, அவர்களை காலை, மதியம், மாலை, இரவு எனப் பாராமல் தொடர்ந்து 1,008 தோப்புக்கரணங்கள் போடச்சொன்னான்.அவனது இம்சை தாங்க முடியாமல் தேவர்கள் சிவபெருமானின் உதவியை நாடினார்கள். சிவபெருமானும் அவனை அழிக்க விநாயகரை அனுப்பி வைத்தார்.

விநாயகருக்கும் கஜமுகாசுரனுக்கும் நடைபெற்ற பெரும் போரில் அவனது படை முற்றிலும் அழிந்தது. ஆனால், அவனை மட்டும் அழிக்க முடியவில்லை. எந்த ஆயுதத்தாலும் தனக்கு அழிவு வரக்கூடாது எனும் வரத்தை வாங்கி இருந்ததால், அவனை விநாயகரால் அழிக்க முடியவில்லை. உடனே, விநாயகர் தனது கொம்புகளில் ஒன்றை ஒடித்து சிவ மந்திரத்தைச் சொல்லி வீசவே கஜமுகாசுரனின்  அசுர உருவம் அழிந்து மூஞ்சிறு வடிவமாகி விநாயகரைப் பணிந்து நின்றான்.விநாயகரும், அவனை மன்னித்து தனது வாகனமாக்கிக் கொண்டார்.

அதன் பிறகு  தேவர்கள் விநாயகப் பெருமானை வணங்கி மும்முறை நெற்றிப் பொட்டில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டனர். விநாயகருக்கு தோப்புகரணம் போடும் வழக்கம் இவ்வாறு தான் ஆரம்பித்தது.

புராணக் கதை 2:

ஒருமுறை குறுமுனிவரான அகத்தியர் கமண்டலத்தை கையில் ஏந்திக்கொண்டு வந்து கொண்டு இருந்தார். அப்பொழுது காக உருவெடுத்து வந்த விநாயகப் பெருமான் அக்கமண்டல நீரை தட்டி விட்டு ஓடி விட்டார். கமண்டல நீர் ஆறாக ஓடியது. காகம் தட்டியதும் விரிந்து பரந்து ஓடியதால் அந்த ஆற்றுக்கு காவிரி என்ற பெயர் உண்டானது.

கமண்டலத்தை தட்டி விட்ட காகத்தை அகத்தியர் தேடினார். அதைக்காணவில்லை. காகம் நின்ற இடத்தில்  ஒரு சிறுவன் நின்றிருந்தான். அந்தச் சிறுவன் முனிவரைப் பார்த்துச் சிரித்தான். கோபமடைந்த அகத்தியர் அச்சிறுவன்தான் கமண்டல நீரை கவிழ்த்தவன் என்றெண்ணி, அவனது தலையில் குட்ட முயன்றார். அப்பொழுது அச்சிறுவன் விநாயகப் பெருமானாக அகத்தியர் முன் காட்சி அளித்தான். விநாயகர் என்று அறியாமல் குட்ட முயன்ற தவறுக்காக வருந்திய அகத்தியர், அப்படியே தன் தலையில் குட்டிக் கொண்டு, மன்னிக்குமாறு வேண்டினார்.

அறிவியல் ரீதியான காரணம்:

அந்தக் காலத்தில் தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் தோப்புக்கரணம் போட வைப்பார்கள். ஏன் எனில் தோப்புக்கரணம் போடுவதன் மூலமும், நமது நாடி நரம்புகள் சுறுசுறுப்படைந்து, உடலும் மனமும் உற்சாகம் கொள்கின்றது காதுமடல்களை ஒட்டிச் செல்லும் நரம்புகளை பிடித்து இழுப்பதால்  ஞாபகசக்தி அதிகரிக்கிறது. அதனை இன்றைய அறிவியல் உலகமும் ஒப்புக்கொண்டிருக்கிறது. முழுவதும் உட்கார்ந்து எழுந்து கொள்ளும் போது இரத்த ஓட்டம் சீராகின்றது. இந்த நிகழ்வு வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. அவர்களின் கற்கும் திறன் அதிகரிக்கும்.

தோப்புக்கரணம் போடும் முறை:

முதலில் நம்முடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை பிரித்துவைத்து நிற்க வேண்டும்.

இடது கையால் வலது காது மடலையும், வலது கையால் இடது காது மடலையும் பிடிக்க வேண்டும். (நமது வலது பக்க மூளை இடது பக்கத்திலும் இடது பக்க மூளை வலது பக்கத்திலும் இருப்பதால் கைகளால் காத்து மடல்களை நாம் பிடிக்கும்போது சரியான அளவில் அவை தூண்டப்படுகின்றன.)

கட்டைவிரல் வெளியேயும், ஆள்காட்டி விரல் உட்பக்கமும் இருக்க வேண்டும்.

வலது கை, இடது கையின் மேல் இருக்க வேண்டும்.

தலையை நேராக வைத்து, மூச்சுக் காற்றை உள்ளிழுக்க வேண்டும்.

நம்மால் எந்த அளவு சிரமம் இல்லாமல், உட்கார முடியுமோ அந்த அளவு உட்கார வேண்டும்.

பின்பு மூச்சுக் காற்றை வெளியிட்டவாறே, அப்படியே எழுந்து நிற்கவேண்டும்.


banner

Leave a Reply