Vasavi Jayanthi: Invoke the Wish-Fulfilling Goddess of this Yuga For Protection, Divine Wisdom, Prosperity & Success JOIN NOW
Search

63 நாயன்மார்களின் பெயர், குலம், நாடு, பூசை நாள் | 63 Nayanmars | 63 Nayanmargal

July 20, 2022 | Total Views : 2,688
Zoom In Zoom Out Print

63 நாயன்மார்களின் பெயர், குலம், நாடு, பூசை நாள்

பெயர்: 1 ) அதிபத்தர்

குலம்: பரதவர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஆவணி ஆயில்யம்

இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் காரணமாக, தான் பிடிக்கும் மீன்களில் சிறந்த ஒன்றை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஒரு சமயம் சிவபெருமான் அதிபத்தரை சோதிக்க எண்ணி ஒரு மீனும் பிடிபடாத நாளில்,இரத்தினங்கள் பதிந்த  தங்க மீனை வலையில் சிக்குமாறு செய்தார். ஆனால் தீவிரமான பக்தரான அதிபத்தர் அதனையும் சிவபெருமானுக்கே அர்ப்பணம் செய்தார். இவ்வாறு தான் வறுமையிலும், பசியிலும் வாடிய பொழுதும் இறைவனுக்கு சமர்ப்பிக்கும் வழமை தவறாத பக்தியை கொண்டவராக அதிபத்தர் விளங்கியமையால் அவரை நாயன்மார்களில் ஒருவராக போற்றுகின்றார்கள் 

பெயர்: 2) அப்பூதியடிகள்

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: தை சதயம்

அப்பூதியடிகள் நாயனார் சோழ நாட்டில் திங்களூர் எனும் ஊரில் வாழ்ந்துவந்தார். இவர் திருநாவுக்கரசர் சமகாலத்தவர். அப்பூதி அடிகள் திருநாவுக்கரசர் எனும் சைவரை வணங்கியே வீடுபேறு அடைந்தார் என்று எடுத்துரைக்கப்படுகிறது.

பெயர்: 3 ) அமர்நீதி நாயனார்

குலம்: வணிகர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஆனி பூரம்

சிவபெருமானின் முன்பு தராசில் தன் மனைவி, மகனுடன் ஏறித் தன்னையே அவருக்கு அர்ப்பணித்து, அத்தட்டே விமானமாகச் செல்ல, சிவபதம் பெற்ற பெருமைக்குரியவர் இவர்.

பெயர்: 4 ) அரிவட்டாயர்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: தை திருவாதிரை

தனது சிவ பக்தியால், சிவனுக்கு அமுது படைக்க இயலவில்லை என்று அரிவாளால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டதால் இவர்  அரிவட்டாயர் என்று அழைக்கப்பட்டார்.  செல்வந்தராய் இருந்து செல்வத்தை இழந்து மீண்டும் சிவ பக்தியால் செல்வம் பெற்று தொண்டு செய்து சிவனடி சேர்ந்தவர்.

பெயர்: 5) ஆனாய நாயனார்

குலம்: இடையர்

நாடு: மழநாடு

பூசை நாள்: கார்த்திகை ஹஸ்தம்

புல்லாங்குழல் ஓசையில் சிவ பக்தியை வெளிப்படுத்தியவர். ஆனாயர் இசைத்த குழலிசையானது, வையத்தை நிறைத்தது; வானத்தையும் தன் வசமாக்கிற்று. இதற்கெல்லாம் மேலாக இறைவரது திருச்செவியின் அருகணையவும் பெருகிற்று. சிவபெருமான் இடப வாகனத்தின்மேல் உமையம்மையாருடன் எழுந்தருளி எதிர்நின்று காட்சி தந்தனர். குழல் வாசித்துக்கொண்டே அந்நின்ற நிலையோடு ஆனாயநாயனார் சிவனடி சேர்ந்தார்.

பெயர்: 6) இசைஞானியார்

குலம்: ஆதி சைவர்

நாடு: நடுநாடு

பூசை நாள்: சித்திரை சித்திரை

சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.

பெயர்: 7) இடங்கழி நாயனார்

குலம்: வேளிர்

நாடு: கோனாடு

பூசை நாள்: ஐப்பசி கார்த்திகை

அரசனாய் இருந்தாலும் தன்னுடைய நெல் களஞ்சியத்தை சிவ பூஜைக்கு வாரித் தந்தவர். நாட்டு மக்களின் நலன் கருதி நல்லாட்சி புரிந்த இவர் அத்தனை பொருட்களையும் சிவனடியார்களுக்கு வழங்கினார்.

பெயர்: 8) இயற்பகை நாயனார்

குலம்: வணிகர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: மார்கழி உத்திரம்

சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பி உற்றார் உறவினருடன் சிவனடி சேர்ந்தவர்

பெயர்: 9 ) இளையான்குடிமாறார்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஆவணி மகம்

அடியவர்களுக்கு  திருவமுதளித்தலாகிய இத்திருப்பணியைச் செல்வக்காலத்திலே மட்டுமன்றி வறுமையுற்ற காலத்திலும் விடாதுசெய்து வந்தவர்  இந்நாயனார் இந்த  உண்மையினை உலகத்தார்க்கு அறிவுறுத்த இறைவன் திருவுள்ளங் கொண்டார். இதனால் இளையான்குடி மாறனாரின் செல்வம் குறைந்து வறுமை உண்டாகியது. இவ்வாறு செல்வம் சுருங்கினாலும், தம்மிடமிருந்த நிலங்கள் முதலியவற்றை விற்றும், கடன்வாங்கியும் அடியார்க்கு அமுதளிக்கும் பணியை விடாது செய்து சிவனருளைப் பெற்றவர்.

பெயர்: 10) உருத்திர பசுபதி நாயனார்

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: புரட்டாசி அசுவினி

சிவன் மீது கொண்ட பக்தி காரணமாக இவர் தொடர்ந்து சில நாட்கள்  கழுத்தளவு தண்ணீரில் இரவு பகலாக நின்று கொண்டு இருகைகளையும் தலைமேற் குவித்துச் சிவனை மறவாத சிந்தை உடையவராய்  அருமறையாகிய திருவுருத்திரத்தை வழுவாது ஓதும் நியதியுடையவராய் இருந்தார். 

பெயர்: 11 ) எறிபத்த நாயனார்

குலம்: மரபறியார்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: மாசி ஹஸ்தம்

சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை தூக்கி எறிந்த மன்னனின் யானையைக் கொன்றவர்.பின் தவறுசெய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணர்ந்தவுடன், தன் கழுத்தை வெட்டத்துணிந்தவர்.

பெயர்: 12 ) ஏயர்கோன் கலிகாமர்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஆனி ரேவதி

இறைவனை தூதுதவராய் அனுப்பிய சுந்தரநாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநோய் பெற்றார். பின் சிவன் அருளால் நோய் நீக்கப்பட்டது.

பெயர்: 13 ) ஏனாதி நாதர்

குலம்: சான்றார்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: புரட்டாசி உத்திராடம்

கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, அந்தத் திருநீற்றின் பொலிவில் பரவசம் அடைந்து பக்தியின் காரணமாக பகைவனைக்கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.

பெயர்: 14) ஐயடிகள் காடவர்கோன்

குலம்: காடவர்

நாடு: தொண்டை நாடு

பூசை நாள்: ஐப்பசி மூலம்

மன்னர்கள் பலரும் தனது  ஆணைக்கிணங்க நடக்கும் வகையிலும்  வடமொழி தமிழ் மொழிகளின் கலைத் தொண்டுகள் சிறக்கவும் ஆட்சிசெய்த இம்மன்னர் அரசுரிமை தான் புரியும். சிவனடித் தொண்டிற்கு இடையூறாக இருக்கும் என உணர்ந்து அதனைத் தன் புதல்வனிடம் ஒப்படைத்து  திருத்தல யாத்திரை மேற்கொண்டவர்.

பெயர்: 15) கணநாதர்

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: பங்குனி திருவாதிரை

தொண்டர்கள் நாடி வரும் வகையில் சிவ தொண்டினை புரிந்தவர்

பெயர்: 16 ) கணம்புல்லர்

குலம்: செங்குந்தர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: கார்த்திகை கார்த்திகை

தமது உடல் முயற்சியினால் அரிந்து கொண்டு வந்த கணம்புல்லினை விற்று அதில் நெய் வாங்கி சிவனுக்கு  விளக்கெரித்து வந்தார். அதனால் அவருக்கு கணம்புல்லர் என்று பெயராயிற்று. விளக்கு ஏற்றுவதற்குத் தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியைக் கொண்டு விளக்கு ஏற்றியவர்

பெயர்: 17 ) கண்ணப்பர்

குலம்: வேடர்

நாடு: தொண்டை நாடு

பூசை நாள்: தை மிருகசீருஷம்

பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர்.

பெயர்: 18 ) கலிய நாயனார்

குலம்: செக்கார்

நாடு: தொண்டை நாடு

பூசை நாள்: ஆடி கேட்டை

எண்ணெய் வாங்கக் காசுஇல்லாத சமயத்தில் தன் இரத்தத்தால் விளக்கு ஏற்ற துணிந்தவர்/ அதன் பொருட்டு சிவ பெருமானால் ஆட்கொள்ளப்பட்டவர்

பெயர்: 19 ) கழறிற்றறிவார்

குலம்: மரபறியார் அரசன்

நாடு: மலை நாடு

பூசை நாள்: ஆடி சுவாதி

பூ மாலையும் பாமாலையும் சாற்றி சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். சிவனடியாரை சிவனாக பாவித்து உபசரித்தவர்.

பெயர்: 20) கழற்சிங்கர்

குலம்: மரபறியார் அரசன்

நாடு: தொண்டை நாடு

பூசை நாள்: வைகாசி பரணி

சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.

பெயர்: 21) காரி நாயனார்

குலம்: அந்தணர்

நாடு: சோழநாடு

பூசை நாள்: மாசி பூராடம்

காரிக்கோவை என்ற நூல் இயற்றி, சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் மூலம் வருமானம் பெற்று அந்த வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தவர்.

பெயர்: 22) காரைக்கால் அம்மையார்

குலம்: வணிகர்

நாடு: சோழநாடு

பூசை நாள்: பங்குனி சுவாதி

புனிதவதி என்ற காரைக்கால் அம்மையார் மூன்று பெண் நாயன்மார்களில் ஒருவரும், மூத்தவருமாவார். அறுபத்து மூவருள் அமரும் பாக்கியம் பெற்ற ஒரே அம்மையார்.

பெயர்: 23) குங்கிலியகலய நாயனார்

குலம்: அந்தணர்

நாடு: சோழநாடு

பூசை நாள்: ஆவணி மூலம்

விதிப்படி குங்கிலிய தூபம் இடும் திருப்பணியை நியதியாகச் செய்து வந்தார். ஆதலால் குங்கிலயக்கலயர் என்ற பெயரை பெற்றவர்.

பெயர்: 24) குலச்சிறையார்

குலம்: மரபறியார்

நாடு: பாண்டிய நாடு

பூசை நாள்: ஆவணி அனுஷம்

பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.

பெயர்: 25) கூற்றுவர்

குலம்: களப்பாளர்

நாடு: பாண்டிய நாடு

பூசை நாள்: ஆடி திருவாதிரை

நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்புக் கிடைக்காததால்  “முடியாக உமது பாதம் பெற வேண்டும்” என்று ஆடவல்லானைப் பரவி, தன்சிந்தையில் சிவனே முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.

பெயர்: 26) கலிக்கம்ப நாயனார்

குலம்: வணிகர்

நாடு: நடு நாடு

பூசை நாள்: தை ரேவதி

முன்பு ஏவளாலாய் இருந்தவர் சிவனடியாராய் வந்திட உபசரிக்க மறுத்த மனைவியின் கையை வெட்டி தாமே அவரது பாதம் விளக்கி அவருக்கு அமுதுஊட்டும்பணியை மேற்கொண்டார்

பெயர்: 27) கோச்செங்கட் சோழன்

குலம்: மரபறியார் அரசன்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: மாசி சதயம்

முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிபட்டு யானையால் இடர் பட்டு மன்னராய்பிறந்தார். பின் மன்னராய் நிறைய சிவ ஆலயங்களை யானை நுழைய இயலா வண்ணம்கட்டினார்.

பெயர்: 28) கோட்புலி நாயனார்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஆடி கேட்டை

சிவ நைவேத்தியத்துக்கென வைத்த நெல்லைத் தீண்டிய ஒரு பச்சிளம் குழந்தை உள்ளிட்ட தமது உறவினர்களை வாளால் வெட்டி சிவபதவி அடையச் செய்து தாமும் சிவ பதவி அடைந்தார்.

பெயர்: 29) சடைய நாயனார்

குலம்: ஆதி சைவர்

நாடு: நடு நாடு

பூசை நாள்: மார்கழி திருவாதிரை

சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.

பெயர்: 30) சண்டேசுவர நாயனார்

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: தை உத்திரம்

சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்யும் போது இடையூறு செய்த தந்தையை மழுவால் வெட்டியவர்

பெயர்: 31) சக்தி நாயனார்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஐப்பசி பூரம்

யாரேனும் தம் முன்பு சிவனடியார்களை இகழ்ந்துரைப்பாராயின் அவர்களது நாவினை அரியும் வலுவுடையராதலால் அவர் சக்தியார் எனப் பெயர் பெற்றார். 

பெயர்: 32) சாக்கியர்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: மார்கழி பூராடம்

அன்பால் சிவ லிங்கத்தின் மீது கல் எறிந்து வழிபட்டவர்.இவர் சிவபக்தியால் எறிந்த கல் அனைத்தும் மலர்களாக மாறின.

பெயர்: 33) சிறப்புலி நாயனார்

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: கார்த்திகை பூராடம்

இவர் மழையைப் போல  ஈந்து உவக்கும் தன்மை கொண்டவர். ஐந்தெழுத்து மந்திரத்தை தவறாமல் ஓதி சிவனடியை சேர்ந்தவர்.

பெயர்: 34) சிறுதொண்டர்

குலம்: மாமாத்திரர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: சித்திரை பரணி

சிவனடியார்களுக்கு  சிறப்பாக பணிந்து தொண்டு செய்தமையால் சிறு தொண்டர் என்று அழைக்கப்பட்டார்.

பெயர்: 35) சுந்தரமூர்த்தி நாயனார்

குலம்: ஆதி சைவர்

நாடு: நடு நாடு

பூசை நாள்: ஆடிச் சுவாதி

தேவாரம் பாடியவர். சிவ பெருமானின் தோழர். 

பெயர்: 36) செருத்துணை நாயனார்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஆவணி பூசம்

சிவ பூஜைக்குரிய மலர் புனிதமானதாக இருக்க வேண்டும் அதனை முகர்தல் சிவ நிந்தனை. இதனை கருத்தில் கொண்டு மலரை மோந்த பட்டத்து ராணியின் மூக்கை வெட்டியவர்.

பெயர்: 37) சோமசிமாறர்

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: வைகாசி ஆயிலியம்

சிவனையே முதல்வன் எனக்கொண்டு உலகம் உய்யும் வேள்விகள் பலவற்றையும் உலகங்கள் ஏழும் உவப்ப விதிப்படி செய்தவர்.

பெயர்: 38) தண்டியடிகள்

குலம்: செங்குந்தர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: பங்குனி சதயம்

கண் குருடாக இருந்தாலும் இறைவனை நோக்க அகக் கண் இருந்தால் போதும் என்பதை உணர்த்தியவர். தனது சிவ பக்தியால் கண்பார்வை பெற்றவர்.  

பெயர்: 39) திருக்குறிப்புத் தொண்டர்

குலம்: ஏகாலியர்

நாடு: தொண்டை நாடு

பூசை நாள்: சித்திரை சுவாதி

சிவனடியார்களின் உள்ளத்தின் திருக்குறிப்பை உணர்ந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யும் தன்மையில் சிறந்து விளங்கியமையால் இவர்  'திருக்குறிப்புத் தொண்டர்' என்று வழங்கப்படும் சிறப்புப் பெயரை பெற்றார். 

பெயர்: 40) திருஞானசம்பந்தமூர்த்தி

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: வைகாசி மூலம்

ஞானக் குழந்தை பல அற்புதங்கள் செய்தவர். பார்வதி அம்மையிடம் ஞானப்பால் உண்டபேறு பெற்றவர். அப்பர் பெருமானால் மிகவும் போற்றப் பட்டவர். சமணர்களை வென்று சைவம் தழைக்கச் செய்தவர்.

பெயர்: 41) திருநாவுக்கரசர்

குலம்: வேளாளர்

நாடு: நடு நாடு

பூசை நாள்: சித்திரை சதயம்

இவரைத் திருஞானசம்பந்தமூர்த்தி, 'அப்பர்' (தந்தை) என்று அழைத்தமையால் அப்பர் என்றும், நாவுக்கரசர் என்றும் அறியப்படுகிறார். தேவாரம் பாடி உழவாரப் பணியில் ஈடுபட்டு சிவன் அருளைச் சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம் சிவனருளைக் கண்முன் காட்டியவர்.

பெயர்: 42) திருநாளை போவார்

குலம்: புலையர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: புரட்டாசி ரோகிணி

தாழ்ந்த குலமென்பதால் கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன்தரிசனத்தை மறைத்த நந்தியை நகரச் செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல்கொண்டவர்.

பெயர்: 43) திருநீலகண்டர்

குலம்: குயவர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: தை விசாகம்

மனைவியை விடுத்து பிற பெண்கள் மீது மையல் கொண்ட அவர் மனைவின் சிவபெருமான் மீதான ஆணைக்கிணங்கி  தனது தவறை திருத்திக் கொண்டார் முதுமைகாலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, சிவ பெருமான் அருளால் இளமை பெற்றார்.

பெயர்: 44) திருநீலகண்ட யாழ்ப்பாணர்

குலம்: பாணர்

நாடு: நடு நாடு

பூசை நாள்: வைகாசி மூலம்

சிவபெருமானுடைய திருப்புகழை யாழ்மூலம்  இசைத்து போற்றியவர்,

பெயர்: 45) திருநீலநக்க நாயனார்

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: வைகாசி மூலம்

வேதத்தின் உள்ளுறையானது சிவனையும் சிவன் அடியாரையும் வணங்குதலே என்பதை உணர்ந்து வாழ்ந்தவர்.  சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர். ஈசன் கனவில் காட்சியளித்தது அருள்புரிந்தார்

பெயர்: 46) திருமூலர்

குலம்: இடையர்

நாடு: வடநாடு

பூசை நாள்: ஐப்பசி அசுவினி

இவர் பதினென் சித்தர்களில் ஒருவர் திருமந்திரம் பாடியவர். நந்தி எம்பெருமானின் மாணாக்கர். ஆநிரை மேய்க்கும் மூலன் என்பவர் விடம் தீண்டி இறந்தார் இதனால் அவரது பசுக்கள் துயரம் கொண்டன. பசுவின் துயரம் தீர்க்க மூலன் உடலில் புகுந்து பசுக்களை காத்தார்.

பெயர்: 47) நமிநந்தியடிகள்

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: வைகாசி பூசம்

இரவும் பகலும் பிரியாது  சிவனை பூசித்து மகிழும் ஒழுக்கமுடையவர். நாள்தோறும் திருவாரூர்க்குப் சென்று புற்றிடங்கொண்ட பெருமானைப் போற்றி வருவார். ஈசன் அருளால் தண்ணீரால் விளக்கு ஏற்றி அற்புதம் நிகழ்த்தியவர்.

பெயர்: 48) நரசிங்க முனையர்

குலம்: முனையர்

நாடு: நடுநாடு

பூசை நாள்: புரட்டாசி சதயம்

சிவனடியார்களின் திருவடியடைதலே அரும்பேறென்று அடியாரைப் பணிந்தார். சிவன்கோயிலின் சிவச் செல்வங்களைப் பெருக்கிக் காத்தலைத் தம் உயிரினும் சிறப்பாகச் செய்தனர். சிவநெறித் திருத்தொண்டுகளைக் கனவிலும் மறவாமல் கடமையாகச் செய்து வந்தார்.

பெயர்: 49) நின்றசீர் நெடுமாறன்

குலம்: அரசர்

நாடு: பாண்டிய நாடு

பூசை நாள்: ஐப்பசி பரணி

பாண்டிய நாட்டு  அரசராய் வாழ்ந்தவர். திருஞான சம்பந்தாரால் தன்னுடைய நோயும் கூனும் நீக்கப்பெற்று சைவத்தை வளர்த்தவர்.  

பெயர்: 50) நேச நாயனார்

குலம்: சாலியர்

நாடு: குடகு

பூசை நாள்: பங்குனி ரோகிணி

தமது மரபின் கைத்தொழிலைச் சிவனடியார்களுக்காகவே செய்துவந்தார். உடையும், கீழ்கோவணமும் நெய்து அடியார்களுக்கு இடைவிடாது நாளும் அவர் வேண்டியமுறையால் ஈந்து வந்து சிவனடி நிழல் சேர்ந்தார்

பெயர்: 51) புகழ்சோழன்

குலம்: மரபறியார் அரசன்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஆடி கார்த்திகை

சிவாலயங்களில் எல்லாம் பூஜை விளங்கச் செய்வித்தும், அடியார்க்கு வேண்டுவன குறிப்பறிந்து கொடுத்தும்,திருநீற்று நெறி விளங்கச் செய்தார். 

பெயர்: 52 ) புகழ்த்துணை நாயனார்

குலம்: ஆதி சைவர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஆவணி ஆயிலியம்

வறுமை வந்தாலும் கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின் ஊரின்பஞ்சத்தைத் தீர்க்க பொருள் பெற்றார்.

பெயர்: 53 ) பூசலார்

குலம்: அந்தணர்

நாடு: தொண்டை நாடு

பூசை நாள்: ஐப்பசி அனுஷம்

பொருள் இல்லாததால் மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலைவிட்டு இறைவன் முதலில் பூசலாரின் மனக்கோவிலுக்கு வருகை அளித்தார்.

பெயர்: 54) பெருமிழலைக் குறும்பர்

குலம்: குறும்பர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: ஆடி சித்திரை

இவர் சிவனடியார்கான திருப்பணிகளை விருப்புடன் செய்பவர்; சிவபெருமானின் திருவடிகளை நெஞ்சத்தாமைரையில் இருத்தி வழிபாடு செய்பவர். இறைவனது திருவைந்தெழுத்தினை இடைவிடாது நினைந்து போற்றுபவர். 

பெயர்: 55) மங்கையர்க்கரசியார்

குலம்: மரபறியார் அரசர்

நாடு: பாண்டிய நாடு

பூசை நாள்: சித்திரை ரோகிணி

சைவத்தைப் பரப்பிய பாண்டிய மகாராணி. நின்ற சீர் நெடுமாறனின் மனைவி.

பெயர்: 56) மானக்கஞ்சாற நாயனார்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: மார்கழி சுவாதி

தன் மகளுக்குக் கல்யாண நேரம்   என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டி அளித்தவர்.

பெயர்: 57) முருக நாயனார்

குலம்: அந்தணர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: வைகாசி மூலம்

ஆறு கால பூஜைக்கு ஏற்ப எம்பெருமானுக்கு வித விதமாய் பூமாலையை சார்த்தி அர்ச்சனை புரிவார். இடைவிடாமல் இறைவனுடைய பஞ்சாட்சர மந்திரத்தை ஓதிக்கொண்டேயிருப்பார்.

பெயர்: 58) முனையடுவார் நாயனார்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: பங்குனி பூசம்

பகைவர்களைப் போர்முனையில் வென்று பெற்ற பெருநிதியங்களைச் சிவனடியார்க்கு மாறாதளிக்கும் வாய்மை உடையவர் 

பெயர்: 59) மூர்க்க நாயனார்

குலம்: வேளாளர்

நாடு: சோழ நாடு

பூசை நாள்: கார்த்திகை மூலம்

சூதாடி வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர். சிவனடியார்க்கு வேண்டிய தேவைகள் செய்தார்.

பெயர்: 60) மூர்த்தி நாயனார்

குலம்: வணிகர்

நாடு: பாண்டிய நாடு

பூசை நாள்: ஆடி கார்த்திகை

சந்தனக் கட்டைகள் கிடைக்காது தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு கிடைத்த போதிலும் சிவனருளை உருத்திராக்கம், சடைமுடியைத் தன்னுடையசின்னமாகக் கொண்டவர்.

பெயர்: 61) மெய்ப்பொருள் நாயனார்

குலம்: மலையமான்

நாடு: நடுநாடு

பூசை நாள்: கார்த்திகை உத்திரம்

வாளால் குத்துண்டு வீழும் நிலையிலும் சிவவேடமே மெய்பொருள் என்று தொழுதுவென்றார். 

பெயர்: 62) வாயிலார் நாயனார்

குளம்: வேளாளர்

நாடு: தொண்டை நாடு

பூசை நாள்: மார்கழி ரேவதி

இவர் சிவபெருமானையே எப்பொழுதும் மனத்திலே வைத்துத் தொழுது ஏதும் பேசாமலே அன்பு செய்து இறைபதம் எய்தினார்

பெயர்: 63) விறன்மிண்ட நாயனார்

குலம்: வேளாளர்

நாடு: மலை நாடு

பூசை நாள்: சித்திரை திருவாதிரை

சிவ பக்தர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர். திருத்தொண்ட தொகை பாட காரணமாக விளங்கியவர்.

banner

Leave a Reply

Submit Comment