Skanda Shasti 2025: Invoke Warrior-God Muruga during the Six Power Days for Victory & Transformation Blessings Join Now
துன்பம் தீர பிரதோஷ நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்
x
cart-added இந்த உருப்படிகள் உங்கள் பெட்டகத்தில் சேர்க்கப்பட்டது.
x

துன்பம் தீர பிரதோஷ நாளில் செய்ய வேண்டிய பரிகாரம்

Posted DateSeptember 5, 2024

சூர்ய அஸ்தமனத்துக்கு முன்பாக வரும் 1.30 மணிநேரமே பிரதோஷ காலமாகும். தினமும் வரும் இந்தப் பிரதோஷவேளை சிவவழிபாட்டுக்கு உகந்தது. மாலையில் 4.30 மணி முதல் 6 மணி வரையிலான நேரத்தில் சிவபெருமானை வழிபடுவது மிகவும் விசேஷம். ஆலயம் சென்று வழிபட முடியாதவர்கள், அந்த வேளையில் வீட்டிலேயே விளக்கேற்றி சிவனை நினைத்து வணங்கலாம்.

சிவனுக்குரிய வழிபாட்டில் மகா சிவராத்திரிக்கு அடுத்த படியாக முக்கிய இடம் பிடிப்பது பிரதோஷ வழிபாடு. பிரதோஷம் என்பது மாதம் இரண்டு முறை வரும் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரியோதசி திதி அன்று மாலை 04.30 முதல் 6 மணி வரையிலான காலத்தை பிரதோஷ காலம் என்கிறோம். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பொழுது வெளிப்பட்ட  ஆலகால விஷத்தை குடித்து உலக உயிர்களை காக்க சிவபெருமான் நீல கண்டனாக காட்சி அளித்த சமயத்தில், தேவர்கள் சிவனை வழிபட்டனர். அவர்களுக்கு நந்தியின் இரு கொம்புகளுக்கு  இடையே சிவன் காட்சி தந்த காலமே பிரதோஷ காலம் எனப்படுகிறது. அனைத்து விதமான பாவங்களையும், தோஷங்களை நீக்கக் கூடிய வழிபாட்டையே பிரதோஷம் என்கிறோம்.

பிரதோஷம் தேதிகள்

நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்குக் காரணம்  நமது தீய வினைகளே ஆகும். கடந்த காலத்தில் நாம் தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்த தீய செயல்கள் தான் முன்வினைப் பயனாக இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிக்க நேருகிறது. நமது தீவினைகளை அதாவது தீய கர்மாக்களை அகற்றக் கூடிய சக்தி பிரதோஷ வழிபாட்டிற்கு உண்டு. பிரதோஷ நேரத்தில் நாம் சிவனை வழிபட நமது தீவினைகள் யாவும் அகலும் என்பது  நம்பிக்கை ஆகும்.

ஒரு பிரதோஷத்தில் சிவனை  தரிசித்து வழிபட்டால், ஒரு வருட கால தீவினைகள் அகலும் என்று கூறுவார்கள். அதிலும்  சனி  மகா பிரதோஷத்தில் சிவனை வழிபட்டால்  ஐந்து வருடம் வழிபட்ட பலனை பெறலாம். இத்தகைய அற்புதமான பலனை தரக்கூடிய பிரதோஷ நாளில் சிவன் அருளை பெற நாம் செய்ய வேண்டிய பரிகாரம் ஒன்றினைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

பிரதோஷ நேரம் என்பது மாலை நான்கு முப்பதிலிருந்து ஆறு மணி வரையிலான காலம். இந்த நேரத்தில் வீட்டில் பூஜை அறையில் சிவன் படம் அல்லது லிங்கம் இருந்தால் எடுத்து சுத்தமாக துடைத்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து மலர் சூட்டி அலங்காரம் செய்து விடுங்கள். படம் இல்லாதவர்கள் ஒரே ஒரு தீபம் ஏற்றி வைத்து விட்டு தீபத்தின் முன் இந்த பரிகாரத்தை செய்தாலே போதும்.

சுத்தமான வெள்ளை நிறத்தில் ஆன ஒரு துணியை எடுத்துக் கொள்ளுங்கள். வெள்ளை நிறம் சிவபெருமானுக்கும் சந்திரனுக்கும் உரியதாக சொல்லப்படுகிறது. அடுத்ததாக ஒரு வெற்றிலை எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் சிவனுக்கு உகந்த வில்வ இலையும் வெள்ளை நிறத்திலான முல்லை, மல்லிகை, சம்பங்கி மலர்களில் ஏதேனும் ஒன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். இந்த மூன்றையும் ஒன்றாக வைத்து வெள்ளை நிற துணியில் முடிச்சாக கட்டி விடுங்கள். இந்த முடிச்சை கட்டும் போது உங்களுடைய துன்பங்கள் அனைத்தும் நீங்க வேண்டும் என்று சிவபெருமானை மனதார பிரார்த்தித்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த முடிச்சை சிவ பெருமான் படத்திற்கு முன்பாக வைத்து தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ளுங்கள். இந்த முடிச்சு இரவு முழுவதும் சிவபெருமான் படத்தில் அருகிலே இருக்கட்டும். அடுத்த நாள் காலை இந்த மூட்டையை நிலை வாசலில் கட்டி விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் உங்களைச் சுற்றி இருக்கும் தீய சக்திகள் அகலும். நேர்மறை ஆற்றல் பெருகும். உங்கள் துன்பம் படிப்படியாகக் குறையும்.