பிரம்மனும் விஷ்ணுவும் காண எழுந்த பேரொளி:
சிவபுராணத்தில் ஒரு புராணக்கதை, இரண்டு முக்கிய இந்து கடவுள்களான பிரம்மா மற்றும் விஷ்ணு ஆகியோருக்கு இடையேயான யார் உயரந்தவர் என்ற சண்டையை குறிப்பிடுகிறது. சண்டை மிகவும் கடுமையானது, மற்ற தேவர்கள் சிவனிடம் ஓடி வந்து தலையிடும்படி கெஞ்சினார்கள். அவர்களின் சண்டை அர்த்தமற்றது என்பதை சிவன் அவர்களுக்கு புரிய வைக்க விரும்பினார். அவர் ஒரு பெரிய நெருப்புத் தூணாக உருவெடுத்து பிரம்மா மற்றும் விஷ்ணு முன் தோன்றினார். அதன் அளவைக் கண்டு வியந்த அவர்கள் அதன் ஆரம்பம் மற்றும் முடிவைக் கண்டுபிடிக்க முடிவு செய்தனர். முதலில் யார் கண்டுபிடிக்கிறாரோ அவரே உயர்ந்தவர் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.விஷ்ணு வராஹமாக மாறி பூமியில் மூழ்கி தேடும் போது பிரம்மா அன்னமாக மாறி மேலே எழுந்தார். ஆனால் ஆயிரக்கணக்கான மைல்கள் தேடியும், இருவராலும் அடி மற்றும் முடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும் பிரம்மா மேலிருந்து கீழே வந்து கொண்டிருந்த தாழம்பூவைக் கண்டார். எங்கிருந்து வருகிறாய் என்று கேட்க நான் சிவனின் தலையில் இருந்து வருகிறேன் என தாழம்பூ பதில் அளித்தது.
அதனால் தேடுவதை நிறுத்த பிரம்மா முடிவு செய்து அந்த மலரை பொய் சாட்சியாக வைக்க முடிவு செய்தார்.உண்மை அறிந்து கோபம் கொண்ட சிவன் பிரம்மாவிற்கு தனி கோவில் அமைத்து யாரும் வணங்க மாட்டார்கள் என்று சாபமிட்டார். தாழம்பூவும் பொய் சாட்சி கூறியதால் இனிமேல் எந்த வழிபாட்டிற்கும் தாழம்பூ உகந்தது அல்ல என்று கூறிவிட்டார். தேவர்கள் சிவனை வேண்ட சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர். எனவே இந்த நாள் மிகவும் புனிதமானது. இந்த நாளை கொண்டாடும் விதமாக கார்த்திகை மாதம் பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை தீபத் திருநாளன்று திருவண்ணாமலையில் பரணி தீயம் மற்றும் மகா தீபம் இரண்டும் ஏற்றப்படும். இத்தீபம் சிவன் அக்னி பிழம்பாக, நெருப்பு மலையாக நின்றார் என்ற ஐதீகப்படி மலையில் தீபம் ஏற்றப்படுகிறது.
காலை 5 மணியளவில் மலை அடிவாரத்தில் 5 அகல் தீபம் ஏற்றி வைப்பார்கள். இதுவே பரணி தீபம் ஆகும். கார்த்திகை மாதத்தில் பரணி நட்சத்திரத்தில் இத்தீபம் ஏற்றுவதால் “பரணி தீபம்”எனப்படுகிறது. 5 அகல் தீபங்களும் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்தொழில் புரியும் இறைவனின் ஐந்து திருமுகங்களைக் குறிக்கும். மேலும் பஞ்ச பூதங்கள் நம்மைக் காத்து ரட்சிக்க வேண்டும் என்ற நோக்கிலும் இந்த தீபம் ஏற்றப்படுவதாக ஐதீகம்.
கார்த்திகை தீபத்திருவிழாவையை முன்னிட்டு அண்ணாமலையார் குடிகொண்டிருக்கும் 2,668 அடி உயர மலை உச்சியில் 26.11.2023 அன்று மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்படும் கொப்பரைக்கு அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெறும். அதையடுத்து, கொப்பரையை கோவில் ஊழியர்கள் மலைக்கு எடுத்துச் செல்வார்கள். அன்று அதிகாலையில் பரணி தீபமும் மாலையில் 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. பிரம்மாண்ட கொப்பரையில் ஏற்றப்படும் மகாதீபம் 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சி தரும். இந்த ஆண்டும் பக்தர்களுக்கு தீப தரிசனம் காணும் பாக்கியம் கிட்டும்.
அன்று நெருப்புப் பிழம்பாக பிரம்மனுக்கும் விஷ்ணுவிற்கும் காட்சி தந்த சிவ பெருமான் கார்த்திகை நட்சத்திரமும் பௌரன்மியும் சேர்ந்து வரும் நன்னாளில் எளியவர்களான நமக்கும் திருவண்ணாமலை மேல் தீப ஜோதியாக காட்சி தருகிறார். நம்மைச் சூழ்ந்திருக்கும் இருள் நீங்கி ஒளி கூட, ஜோதி ரூபமாக விளங்கும் சிவ பெருமானை அன்று எளியவர்களாகிய நாமும் காணலாம் என்பதே நமக்கு பெருமை அளிக்கிறது. அக இருள் மற்றும் புற இருள் இரண்டையும் நீக்கு; அண்ணாமலையானே உன் திருவடியே சரணம் என அவனை ஜோதி வடிவில் கண்டு பரவசமாகும் திருநாளாக கார்த்திகை தீபத் திருநாள் விளங்குகிறது. எங்கும் ஒளிமயமாக காட்சி தரும் தீபத் திருநாளில் நமது மனதில் இருக்கும் இருள் அனைத்தும் விலகுகிறது.
தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! மலை உச்சியில் ஜோதி வடிவாக காட்சி தரும் பெருமானே போற்றி போற்றி! தீபத் திருநாள் அன்று மட்டும் இன்றி எந்த நாளிலும் எங்கள் உள்ளங்களிலும் இல்லங்களிலும் இருள் நீங்கி ஒளி பொங்கிப் பெருக வேண்டும். எங்கள் வாழ்வின் இருள் அகற்றும் ஒளித் துணையாய் வழித் துணையாய் உனதருள் விளங்க வேண்டும். சிவாயநம! நமசிவாய!
September 12, 2025
September 12, 2025
September 11, 2025