கலியுகத்தின் கண் கண்ட தெய்வமாக விளங்கும் முருகனை வழிபட பல நாட்கள் முக்கியமானதாக கருதப்படுகிறது. சஷ்டி, கிருத்திகை, விசாகம், செவ்வாய்க்கிழமை என இன்னும் பல முருகனுக்குரிய நாட்களை பற்றி நாம் அனைவரும் அறிந்திருப்போம். நமது வாழ்வின் பல அம்சங்களில் நமக்கு வேண்டியதைப் பெற முருகனுக்கு விரதம் இருப்போம்.ஆனால் இந்த நாட்களில் தான் அவரை வணங்க வேண்டும் என்பதில்லை. அனுதினமும் அவன் தாள் வணங்கி வழிபடுவதன் மூலம் நம் தலை எழுத்தே மாறும் அற்புதம் கூட நமது வாழ்வில் நடக்கும். அப்படி ஒரு அற்புதம் நம் வாழ்வில் நடக்க நாம் எப்படி வழிபட வேண்டும் என்று இந்தப் பதிவில் காணலாம்.
நாம் வாழ்வில் துன்பத்தை அனுபவிக்கும் வேளையில் நமக்கு மட்டும் ஏன் இப்படி என்று நம்மை நாமே கேள்வி கேட்டுக் கொள்வோம். எல்லாம் என் தலை விதி என்று விரக்தியாக பிறரிடம் கூறுவோம். என் தலையில் எழுதியதை நான் தானே அனுபவிக்க வேண்டும். என்று கூட கூறுவோம்.என்னை படைக்கும் போது பிரம்ம தேவனுக்கு என்ன கோபமோ என்று கூட சிலர் கூறிக் கேள்விப்பட்டிருப்போம்.
நாம் படும் கஷ்டங்கள் அனைத்திற்கும் கிரக தோஷங்களே காரணம் எனலாம். நவகிரகங்களும் நம்மை ஆட்டிபடைக்கும் தன்மை கொண்டவை. நாம் பிறக்கும் போது இருக்கும் கிரக நிலைகளுக்கு ஏற்ப நன்மை தீமைகளை அனுபவிப்போம். கிரக தோஷத்தை நீக்கி, தலைஎழுத்தை மாற்றி அமைக்கும் பாடலைக் கூறி முருகப் பெருமானை வணங்குவதன் மூலம் உங்கள் வாழ்வில் அற்புதம் நடக்கும்
எப்படிப்பட்ட மோசமான தலையெழுத்து இருந்தாலும் அந்த தலையெழுத்தை நல்ல விதமாக மாற்றுவதற்கு முருகப்பெருமானின் அருள் என்பது வேண்டும்.படைப்புக் கடவுளான பிரம்மனையே தனக்கு அடிபணிய வைத்த பெருமை முருகப் பெருமானுக்கே சேரும். எனவே முருகப்பெருமானை வணங்குவதன் மூலம் பிரம்மனே நமது தலை எழுத்தை மாற்றி அமைத்து தருவார்.
நமது தலை எழுத்து மாற தினமும் இந்த ஒரு பாடலை நாம் பாடி முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். இந்த பாடல் அருணகிரிநாதர் பாடிய கந்தர் அலங்காரம் என்னும் 108 பாடல்களுள் ஒரு பாடலாக திகழ்கிறது. இந்த பாடலை தினமும் காலையிலோ மாலையிலோ முருகன் திருவுருவப்படத்திற்கு முன் அல்லது விக்கிரகத்திற்கு முன் தீபம் ஏற்றி வைத்துவிட்டு ஆறு முறை மனதார முருகப்பெருமானை நினைத்து கூற வேண்டும்.
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
சேல் என்னும் மீன்கள் குதித்துத் திரிவதனால் திருச்செந்தூரில் உள்ள
வயல்கள் அழிந்துபோயின; மலர்க்கொடி போன்ற பெண்களின் மனமானது
சோலையிலுள்ள இனிமையான கடப்ப மலர்மாலையை விரும்பியதால்
அழிந்துபோயிற்று. பெருமைதங்கிய மயில்வாகனத்தையுடைய
திருமுருகப்பெருமானது வேலாயுதம் பட்டதால் கடலும் சூரபத்மனும்
கிரௌஞ்சமலையும் அழிந்துபோயின. இவ்வுலகில் கந்தவேளின்
திருவடிகள் அடியேனின் தலைமீது பட்டதால் பிரம்மதேவனால்
எழுதப்பட்டிருந்த [‘விதி’ என்னும்] கையெழுத்தும் அழிந்துபோயிற்று.
“பிரம்ம தேவன் என் தலையெழுத்தை எப்படி எழுதி இருந்தாலும், இந்த குறிப்பிட்ட விஷயத்தில் கொடுப்பினை எனக்கு இல்லவே இல்லை என என் தலையில் எழுதி இருந்தாலும், தற்போது உன்னையே சரணம் என பற்றி விட்டேன். உன்னை தவிர என்னை காப்பாற்ற, இந்த பிரச்சனையை தீர்க்க எனக்கு யாரும் இல்லை. உன்னை தவிர யாரிடமும் சென்று கேட்பதாக இல்லை. இதை கண்டிப்பாக எனக்கு தா முருகா… என் தலை எழுத்தை நல்லபடியாக மாற்றி, இந்த பிரச்சனைகளில் இருந்து என்னை விடுவித்து, நான் வேண்டும் இந்த வரத்தை எனக்கு அருள் செய் முருகா” என வேண்டிக் கொள்வது தான் இந்த பாடலின் பொருள்.
பக்தியுடன் மனமுருக முருகனை வேண்டி, தினமும் இந்தப் பாடலை காலை மாலை என இரு வேளையும் நம்பிக்கையுடன் ஜெபித்து வர உங்கள் வாழ்வில் அற்புதம் நடப்பதை நீங்கள் கண்கூடாகக் காணலாம்.
September 19, 2025
September 17, 2025
September 15, 2025