அனைத்து நாட்களிலும் நாம் சிவபெருமானை வணங்குகிறோம். ஆனாலும் பிரதோஷ காலத்தில் ஆலயம் சென்று சிவனையும் நந்தியையும் வணங்குவது சிறந்த பயனை அளிக்கும்.
மாதந்தோறும் இருமுறை – வளர்பிறை, தேய் பிறை திரயோதசி ( 13 வது திதி) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் சிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை.
தேவர்களும், அசுரர்களும் போட்டி போட்டுக் கொண்டு பாற்கடலைக் கடைந்தபோது திருமகள், ஐராவதம், காமதேனு, கற்பகத்தரு, சிந்தாமணி, கௌஸ்துப மணி முதலியவை ஒவ்வொன்றாகத் தோன்றின. லட்சுமியைத் திருமால் ஏற்றுக் கொண்டார். மற்ற பொருட்களை இந்திராதி தேவர்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால் கூடவே கொடிய ஆலகால விஷமும் வெளிப்பட்டது. இதைக்கண்டு தேவர்களும், முனிவர்களும் பெரிதும் நடுங்கினர். உயிர்களைக் காப்பாற்ற பரமசிவன் அந்த ஆலகால விஷத்தை உண்டார். தன் கணவரின் உடலில் விஷம் பரவுவதைக்கண்ட பார்வதி தேவி தன் தளிர்க்கரங்களால் அவரைத் தொட விஷம் சிவனின் நெஞ்சுக் குழியிலேயே நின்றுவிட்டதால் இறைவன் நீலகண்டனானார். இந்த நேரம் தான் பிரதோஷ காலம் என்று வணங்கப்படுகிறது.
ஒவ்வொரு பிரதோஷத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த வகையில் சனிக்கிழமை வரும் பிரதோஷமும் மிகச் சிறப்பு வாய்ந்தது. சனிக்கிழமை வரும் பிரதோஷத்தை சனி பிரதோஷம் என்று கூறமாட்டார்கள். சனி மஹா பிரதோஷம் என்றே கூறுவார்கள். ஏன் என்றால் அத்தனை சிறப்பு வாய்ந்தது சனி கிழமை வரும் பிரதோஷம். எந்த திசை நடந்தாலும் சனி பிரதோஷம் அன்று கோவிலுக்கு சென்று சிவனை வழிபடு்வது சிறப்பு. ஏழரை சனி, அஸ்தம சனி நடப்பவர்கள் சனியினால் வரும் துன்பத்தை போக்க கண்டிப்பாக சனி பிரதோஷத்திற்கு செல்ல வேண்டும். சனிக்கிழமை வரும் பிரதோஷம் “சனிப் பிரதோஷம்” என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய் பிறை) சனிக்கிழமையில் வந்தால் “மஹாப் பிரதோஷம்” என்று வழங்கப்படுகிரது. சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் ஆலயம் சென்று இறைவழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும் போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பதெல்லாம் ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் நம்பிக்கை. ஆலயத்தில் நடக்கும் அபிஷேகத்திற்கு பால் அளிக்கலாம். அபிஷேகம் செய்வதன் மூலம் நம்முடைய கர்ம வினைகள் நீங்குவதோடு தடைப்பட்டிருக்கும் மங்களகரமான நிகழ்ச்சிகள் அனைத்தும் தடையின்றி வெற்றிகரமாக நடைபெறும் என்று கூறப்படுகிறது.
அன்றைய நாள் காலையில் எழுந்து, முடிந்தால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து தூய ஆடை அணிந்து கொள்ள வேண்டும். அதற்கு முன்பாக வீட்டை சுத்தம் செய்து வாசலில் கோலம் போட்டு வைக்க வேண்டும். வீட்டில் இருக்கும் சிவபெருமான் அல்லது லிங்கத்திற்கு முன்னால் விளக்கேற்றி “நமசிவாய”என்னும் மந்திரத்தை 108 முறை கூற வேண்டும். முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம். அவரவர் வீட்டு வழக்கப்படி விரதம் இருக்கலாம். அரிசி உணவை தவிர்ப்பது நல்லது.மாலை பிரதோஷ வேளையில் அருகில் இருக்கும் சிவாலயம் சென்று சிவனையும் நந்தியம்பெருமானையும் வணங்கி வழிபட வேண்டும். அலுவலகத்தில் இருப்பவர்கள் கூட ஒரு நிமிடம் ஒதுக்கி அந்த நிமிடம் முழுவதும் மனத்தில் சிவனை நிறுத்தி நமசிவாய என்கிற ஐந்தெழுத்து மந்திரத்தை ‘ஓம்’ சேர்த்து உச்சரித்தாலே போதும் சிவாலயம் சென்று சிவனை வழிபட்ட பலன் கிடைத்துவிடும்.
சிவபெருமானை பிரதோஷ வேளையில் வழிபட்டால் சகலவிதமான துன்பங்களும் தீரும் என்பது நம்பிக்கை.ஒரு சனி பிரதோஷம் விரதம் இருந்து ஆலயம் சென்று சிவனை வழிபட்டால் ஐந்து வருடம் பிரதோஷம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். கிரக தோசத்தால் ஏற்படும் பாதக விளைவுகள் குறையும். பஞ்சமா பாவமும் நீங்கும். சிவனுடைய பரிபூரண அருள் கிட்டும்.
September 12, 2025
September 12, 2025
September 11, 2025